1500 ஏக்கர் விவசாய நிலங்கள் நிரந்தர பாசன வசதி பெறும்.
நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து¸ குடிநீர் பிரச்சனை தீரும்.
திருவண்ணாமலை அடுத்த தேவனந்தல் ஏரியை ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்¸ தேவனந்தல் ஊராட்சியில் அமைந்துள்ள தேவனந்தல் ஏரியில் மாவட்ட நிர்வாகம் மற்றம் புது தில்லி இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனம் மூலம் கார்பரேட் சமூக பொறுப்பு நிதியின் கீழ் 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நீர்வள மேம்பாடு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சித் தலைவர் க. சு. கந்தசாமி தலைமையில் நேற்று இரவு கையெழுத்தானது.
அப்போது டெல்லி இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம். கே. போடர்¸ பொது மேலாளர் மற்றும் தலைமை நிதி அலுவலர் ராம்பால் எஸ். ராவத்¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. ஜெயசுதா¸ வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன்¸ தேவனந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ்¸ ஊராட்சி செயலாளர்கள் செல்வமணி¸ முருகன் உடன் இருந்தனர்.
பிறகு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது¸
சிறு தீவு அமைத்தல்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தேவனந்தல் ஏரியில் புது தில்லி இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனம் மூலம் கார்பரேட் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் கரை பலப்படுத்துதல்¸ வனம் மேம்பாடு¸ ஏரியின் நடுவில் சிறு தீவு அமைத்தல்¸ பசுமை வளர்ச்சி¸ பறவைகள் தங்குவதற்கான சூழல் அமைத்தல்¸ ஏரியை சுற்றி சைக்கிள் ஒட்டுவதற்கான பாதை அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
1500 ஏக்கர் பாசன வசதி
இப்பணிகள் மூலம் தேவனந்தல் ஏரிக்கு உட்பட்ட 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் நிரந்தர பாசன வசதி பெறுவதுடன்¸ நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து¸ சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். மேலும்¸ விவசாயிகள் மழையை மட்டும் நம்பி இல்லாமல் பயிர் வைப்பதற்கு திட்டமிட்டு செயல்படுத்த முடியும். தேவனந்தல் ஏரி புனரமைப்பு பணிகள் ஒரு வருடத்தில் முடிக்கப்படும். மேலும்¸ அதனை தொடர்ந்து இரண்டு வருடங்கள் பராமரிப்பு மேற்கொள்ளவதற்கான நிதியும் இந்நிறுவனம் வழங்கி உள்ளார்கள். இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்திற்கு மிக்க நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இது போன்று ஒரு ஏரியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேவனந்தல் ஏரி திருவண்ணாமலை-காஞ்சி கிராமம் செல்லும் வழியில் உள்ளது. கிரிவலப்பாதையில் வேடியப்பனூர் செல்லும் ரோட்டின் வழியாகவும் தேவனந்தல் ஏரியை சென்றடையலாம்.