ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கை
குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்
திருவண்ணாமலை காவல்துறை வேண்டுகோள்
இணையம் மூலம் ரம்மி என்கிற சூதாட்ட அழைப்பு எந்தவித தடையும் இன்றி உலவி வருகிறது. இதனால் கவர்ந்திழுக்கப்படுவர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். புதுச்சேரியில் விஜயகுமார் என்பவர்¸ ஆன்லைன் விளையாட்டுகளில் ரூ.30 லட்சம் வரை இழந்து விட்டதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் நிதிஷ் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்திற்காக திருடிய பணத்தை தர முடியாததால் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியாவில் 5 கோடி பேர்
இப்படி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ரம்மி மூலம் ஆண்டுக்கு 2¸200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்தியாவில் மொத்தம் 5.5 கோடி பேர் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி வருகின்றனர்¸ இந்தியாவில் ஆன்லைன் கேமிங் ஆண்டுக்கு 35 சதவிகித வணிக வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் உள்ளது என்று சில நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் சொல்வதை பார்த்தால் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் உச்சத்தில் உள்ளது தெரிய வருகிறது.
முதல்வர் அறிவிப்பு
ஆன்லைன் ரம்மி விளையாட்டை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதால் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது¸
நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால் சிலரின் அதீத ஆசையால்¸ திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளரச்சி அடைய வேண்டும் என்ற காரணத்தால்¸ ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
குழந்தைகளுக்கு செல்போன்
இதன் விளைவு பல்வேறு தற்கொலைகள். பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கில்¸ அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என கவனிப்பது இல்லை. பெற்றோர் விளையாடினாலும் சரி¸ குழந்தைகள் விளையாடினாலும் சரி¸ இழப்பு குடும்பத்திற்கே.
தமிழக காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நீங்களும் விளையாடாதீர்¸ உங்கள் குழந்தைகளையும் விளையாட அனுமதிக்காதீர்¸ என தமிழக காவல்துறை சார்பாக வேண்டி கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.