திருவண்ணாமலை கோவிலுக்கு தீபத் திருவிழா
சாமி ஊர்வலத்திற்கான குடைகள் அர்ப்பணிப்பு
திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது சாமி ஊர்வலத்தில் பயன்படுத்தக் கூடிய 8 திருக்குடைகள் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
வேலூர் அண்ணாமலையார் திருக்குடை சமதி மற்றும் வேலூர் ஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்பாதனம் ஆகியவை இணைந்து 2ம் ஆண்டு திருக்குடை வைபோக விழாவை நேற்று நடத்தியது. இதையொட்டி தலா ரூ.13 ஆயிரம் செலவில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு ஒரு குடையையும்¸ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 3 குடைகளையும் வழங்கப்பட்டது.
இதற்காக வேலூரிலிருந்து 3 வேன்களில் பெரிய குடைகளை ஏற்றி வந்த அண்ணாமலையார் திருக்குடை சமதியினர் நேற்று பிற்பகல் மேளதாளம் முழங்க சடை சாமி ஆசிரம நிர்வாகி திருபாத சுவாமிகள் முன்னிலையில் அண்ணாமலையார் கோயிலில் ஒப்படைத்தனர். இந்த குடைகளை கோயில் கண்காணிப்பாளர் வேதமூர்த்தி¸ மணியக்காரர் செந்தில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அண்ணாமலையார் திருக்குடை சமதியின் நிறுவனத் தலைவர் சிவபிரத்யேங்கரா சுவாமிகள்¸ துணைத் தலைவர் அசோகன்¸ பொருளாளர் ரிஷிகேஷ் சுவாமிகள்¸ குகன்¸ சந்திரமோகன்¸ தனசிங்க ரவி¸ பூபாலன்¸ உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
400 வருடங்களுக்கு முன்பு வேலூர் கோட்டை கோயிலை ஸ்தாபனம் செய்த மாமன்னர்கள் ஒவ்வொரு வருடமும் தீப உற்சவத்திற்கு திருக்குடைகளை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சமர்ப்பித்திருக்கின்றனர். இது பற்றி வேலூர் ஜில்லா கலெக்டர் டேரன் காக்ஸ் தனது வாழ்க்கை குறிப்பில் தெரிவித்திருக்கிறார். எனவே இதை தொடர விரும்பி 2வது ஆண்டாக இக்குடைகளை வழங்குவதாகவும்¸ இனி ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் குடைகளை தர உத்தேசித்துள்ளதாகவும் அண்ணாமலையார் திருக்குடை சமதியினர் தெரிவித்தனர்.
இதே போல் பல்லாவரத்தை சேர்ந்த அருணாச்சல ஆன்மீக குழுவினர் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து கொடைகளை அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தினரிடம் இன்று அளித்தனர். கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் அண்ணாமலையார் ஆலயத்திற்கு 10 முதல் 15 திருக்குடைகளை கொடுத்து வருகின்றனர்.இந்த ஆண்டு குறைந்த அளவே குடைகள் கொடுத்திருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ரவி தலைமையில் அருணாச்சல ஆன்மீக குழுவை சேர்ந்த 50 பேர் கலந்து கொண்டனர்.