திருவண்ணாமலையில் பா.ஜ.க வழக்கறிஞர் அணி தலைவர் திமுகவில் இணைந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தெரிவித்த பா.ஜ.க இது சம்மந்தமாக திமுக மாவட்ட செயலாளர் எ.வ.வேலுவுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை பா.ஜ.கவில் திமுகவினர் அதிக அளவில் இணைந்து வருகின்றனர். திருவண்ணாமலை தொகுதியில் மட்டும் அல்லாது கீழ்பென்னாத்தூர் தொகுதியிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் பா.ஜ.க கிளையை துவக்கி வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் இப்பணி முடிந்து விட்டதாக பா.ஜ.கவினர் தெரிவித்தனர். குறுகிய காலத்தில் மட்டும் புதியதாக 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.கவினர் இணைந்துள்ளதாக தெரிவிக்கும் அக்கட்சியினர்; திமுகவிலிருந்து அதிகமானோர் விலகி பா.ஜ.கவில் இணைந்திருப்பதாக கூறுகின்றனர். திமுக மாவட்ட செயலாளர் எ.வ.வேலு உதவியாளரின் சொந்த ஊரில் பா.ஜ.க கொடியை நாட்டியுள்ளது. உதவியாளரின் மனைவியும் பாஜகவில் சேர இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும் அதிமுக¸ திமுகவை விட மகளிரணியை பா.ஜ.க வலுப்படுத்தியுள்ளதை அக்கட்சி கூட்டங்களில் பார்க்க முடிகிறது. திமுகவை விட அதிமுக மகளிரணி படுவீக்காக உள்ளது. ஜெயலலிதா கைதானதை கண்டித்து திருவண்ணாமலையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் மகளிர்கள் இருந்தனர்.அந்த நிலை இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினரும் விலகி பா.ஜ.கவில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக திருவண்ணாமலை அடுத்த கோணலூரில் அதிமுக பிரமுகர் செல்வராஜ் தனது உற்றார்¸ உறவினர்கள் என 100க்கும் அதிகமானவர்களோடு பா.ஜ.கவில் ஐக்கியமாகி விட்டார். இதே போல் திருவண்ணாமலை 17வது வார்டில் திமுகவினர் பாஜகவில் இணைந்து விட திமுகவோ அதிமுகவினரை தூண்டில் போட்டு இழுத்துக் கொண்டது. இப்படி பா.ஜ.கவின் எழுச்சி தி.மு.கவை பெருமளவில் பாதித்துள்ளது என்றால் அதிமுகவை சிறிதளவாவது பாதித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று பத்திரிகை செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பாரதிய ஜனதாகட்சியை சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் கே.திருநாராயணன் தலைமையில்¸ வழக்கறிஞர் எஸ்.குப்புராஜ்¸ மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பி.கலைவாணன்¸ என்.மாரிமத்து ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும்¸ மாவட்ட கழக செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ம.சதீஷ்குமார் தனது பேஸ்புக் பதிவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகவின் கவனத்திற்கு…. இன்று காலை பாரதிய ஜனதாக் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து நீக்கப்பட்ட திருநாராயணன் என்பவரை திமுகவில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் சேர்த்துள்ளீர்கள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அவர் கட்சி பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு உள்ளார். தற்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தலைவராக கே ஆர் குமார் தலைமையில் மாவட்ட பிரிவு நிர்வாகிகளாக பலர் திறம்பட செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் திருநாராயணன் என்பவரை தற்போதைய தலைவர் போல சித்தரிப்பது திருவண்ணாமலை திமுகவின் நிலையை நகைப்புக்குரியதாக ஆக்குகிறது. மேலும் அவருடன் திமுகவில் சேர்ந்துள்ள வழக்கறிஞர்கள் எவருமே கட்சியில் தொடர்புடையவர்கள் அல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தில் ¸ பல மூத்த வழக்கறிஞர்கள் இருக்கின்ற நிலையில் ஒருவரின் பின்புலம் அறியாமல் அவரை உங்களது கட்சியில் இணைத்தது¸ சேர்ப்பதற்கு துணையாக இருந்த அந்நபரின் அவசர புத்தியும் அறியாமையும் காட்டுகிறது. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் நியமனம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் இத்துடன் இணைக்கப்படுகிறது. நீங்கள் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம். அது உங்கள் கட்சியின் உரிமை. ஆனால் சமூக ஊடகங்களிலும் அல்லது பத்திரிகை செய்திகளை வெளியிடும் பொழுது சேர்ந்த நபரின் பதவி மற்றும் விவரங்களை தெரிந்துகொண்டு பதிவிடுவது வெளியிடுவதும் நல்லது. என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் கடந்த 31ந் தேதியே கே.ஆர்.குமார் வழக்கறிஞர் பிரிவின் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
முன்னாளோ¸ இன்னாளோ பாஜகவினர் திமுகவுக்கு வந்துவிட்டனர் இது தொடரும் என்கிறது திமுக தரப்பு. இதனால் திருவண்ணாமலையில் திமுக-பாஜக மோதல் வலுத்து வருகிறது.