Homeசெய்திகள்அமைச்சர் எதிரில் கோயில் அதிகாரிக்கு மிரட்டல்

அமைச்சர் எதிரில் கோயில் அதிகாரிக்கு மிரட்டல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் வருவதற்கு முன்பே கொடியேற்றிதால் கோயில் அதிகாரியை அதிமுக பிரமுகர் மிரட்டியதால்  பரபரப்பு ஏற்பட்டது.

வருடந்தோறும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலுக்குள் அண்ணாமலையார் சன்னதிக்கு முன்பு உள்ள 72 அடி உயர தங்க கொடி மரத்தில் இன்று அதிகாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் கொடியேற்றப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

5.30 மணி அளவில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். சரியாக 5.50 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திருவிழாவில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையில் கொடியேற்றப்படுவது வழக்கம். இம்முறை அமைச்சர் அரை மணி நேரம் காலதாமதமாக வந்தார். வரும் போது ஏராளமான அதிமுகவினரை தன்னுடன் அழைத்து வந்தார். கோயிலுக்குள் கொடியேற்றப்பட்டிருப்பதை பார்த்த அதிமுகவினர் ஆத்திரம் அடைந்தனர். 

அதிமுக நகர செயலாளர் ஜெ.செல்வம் கோயில் இணை ஆணையாளர் ஞானசேகரனிடம் 6-30 மணிக்குத்தானே கொடியேற்றுவதாக சொன்னீர்கள். அமைச்சர் வருவதற்குள் ஏன் கொடியேற்றினீர்கள் என்று சத்தம் போட்டு மிரட்டும் தொனியில் பேசினார். இதை அமைச்சர் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக பிரமுகரின் இச்செயலை பார்த்து கோயில் சிவாச்சாரியார்களும்¸ அதிகாரிகளும் திகைத்தனர். 

பிறகு சாமி தரிசனம் செய்து விட்டு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கோயில் அலுவலகத்திற்கு அதிமுகவினர் புடை சூழ சென்றார். அங்கு அலுவலகத்திற்குள் நுழைய அதிமுகவினர் முண்டியத்து சென்றனர். அவர்களை தடுக்க முடியாமல் கோயில் பணியாளர்கள் திணறினர். நீண்ட தூரத்திலிருந்து வந்து அண்ணாமலையாரை தரிசிக்க கால் கடுக்க வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்து கிடக்க அமைச்சருடன் வந்தவர்களோ கோயிலுக்குள் சர்வ சாதாரணமாக சுற்றி வந்தனர்.  

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மகாதீபத்தன்று வி.வி.ஐ.பி¸ வி.ஐ.பி தரிசத்திற்கு அனுமதியில்லை என கூறியுள்ள நிலையில் தீப திருவிழா ஆரம்பித்த முதல்நாளே அதிமுகவினரின் விதிமீறல்கள் பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!