- திருவண்ணாமலை மலையேறும் பாதையில் உள்ள தண்டபாணி ஆசிரமத்தில் 27ந் தேதி சனி பெயர்ச்சியை யொட்டி அர்ச்சனை¸ பரிகாரம் நடைபெறுகிறது.
மகர ராசிக்கு
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவரும்¸ நீதி தேவனாகவும்¸ ஆயுளுக்கு காரகமாக விளங்குபவருமான ஸ்ரீ சனீஸ்வர பகவான் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 5-22-க்கு மணியளவில் தனுசு ராசியிலிருந்து பெயர்ச்சியாகி மகர ராசியில் சஞ்சாரம் செய்யத் தொடங்குகிறார்.
அன்றைய தினம் திருவண்ணாமலை மலையேறும் பாதையில் உள்ள 225 ஆண்டுகளுக்கு முன்பே மகான் ஸ்ரீ சதானந்த யோகீஸ்வரரால் அமைக்கப்பட்ட தண்டபாணி ஆசிரமத்தில் ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை மற்றும் வாலைச்சித்தர் ஆன்மிக பேரவை சார்பில் கிரக தோஷங்கள் நீங்கி உலகம் அமைதி பெறவும்¸ நாடு வளம் பெற்று அதனால் நம் வீடு வளம் பெறவும்¸ திருமணம்¸ கல்வி¸ தொழில்¸ வேலைவாய்ப்பு¸ புத்திரம்¸ ஆரோக்கியம் போன்றவற்றில் தடைகளையும் கிரக தோஷத்தால் துன்பம் அனுபவிப்பவர்களின் குறை நீங்கி நிம்மதி ஏற்படவும் சனி பெயர்ச்சி மஹா யாகம் நடைபெற உள்ளது.
இந்த சனி பெயர்ச்சியால் அதிகளவு நன்மைகள் பெறக்கூடிய ராசிகள் சிம்மம்¸ விருட்சிகம்¸மீனம் ஆகும். மத்திம பலன்களை பெறக்கூடிய ராசிகள் ரிஷபம்¸ கன்னி ஆகும். தீய பலன்களை பெறக்கூடிய ராசிகள் மேஷம்¸ மிதுனம்¸ கடகம்¸ துலாம்¸ தனுசு¸ மகரம்¸ கும்பம் ஆகும். இதில் மிதுனத்திற்கு அஷ்டம சனியும்¸ கடகத்திற்கு கண்டகச் சனியும்¸ துலாமிற்கு அர்த்தாஷ்டம சனியும் நடைபெற உள்ளது. தனுசு¸ மகரம்¸ கும்பம் ஆகிய மூன்று ராசிக்கு ஏழரை சனி சுமார் இரண்டரை ஆண்டுகள் நடைபெற உள்ளது.
மேஷம் : (அலைச்சலை தரும் சனி) சனீஸ்வரர் தொழில் ஸ்தானம் என்னும் 10-ஆமிடத்தில் சஞ்சாரம் செய்கிறார். தொழில் மற்றும் பணிபுரியுமிடத்தில் பிரச்சினைகளை தருவார். மற்றப்படி நன்மை¸ தீமை என கலந்தாற்போல் மத்திம பலன்கள் தங்களுக்கு ஏற்படும். கணவன் (அ) மனைவியின் உடல்நிலையில் பிரச்சினைகள்¸ வீடு வாகனங்களால் பிரச்சினைகள் போன்றவை வரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் ஏதும் தற்போது வேண்டாம்.
ரிஷபம் : (முன்னேற்றம் தரும் சனி) கடந்த 5 ஆண்டுகளாக சனி பகவானால் பலவித துன்பங்களை அனுபவித்த உங்களுக்கு தற்போது அஷ்டம சனி விலகி 9-ஆம் இடத்தில் ஸ்ரீ சனீஸ்வரர் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சென்ற காலகட்டங்களில் இருந்த கஷ்டங்கள் யாவும் விலகும். படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வி¸ தொழில் வேலைவாய்ப்பு¸ ஆரோக்கியம் என அனைத்திலும் படிப்படியான முன்னேற்றத்தை தாங்கள் பெறுவீர்கள்.
மிதுனம் : (அஷ்டம சனி) இதுவரை கண்டக சனியால் பல தொல்லைகளை பெற்ற நீங்கள் அஷ்டம சனி காலத்தையும் பொருமையாக கடக்க வேண்டி உள்ளது. அஷ்டம ஸ்தானம் எனும் 8-ல் சஞ்சரிக்கும் ஸ்ரீ சனீஸ்வரர் தங்களுக்கு பல சோதனைகளை தருவார். தீய பலன்கள் ஏற்படும். புதிய முயற்சிகள்¸ ஒப்பந்தங்கள் வேண்டவே வேண்டாம். எதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.ஒரே பரிகாரம் இறை வழிபாடுதான்.
கடகம் : (கண்டக சனி) 7-ம் இடம் எனப்படும் கண்டக ஸ்தானத்தில் ஸ்ரீ சனிபகவான் கண்டக சனியாக சஞ்சரிக்கிறார். சனிபகவானின் நேர் பார்வையை நீங்கள் பெறுவதால்¸ உடல்நிலையில் நோய் நொடிகள் வரும்.தேவையில்லாத டென்ஷன்¸ கவலை¸ பிரச்சனைகள் வரும். திருமணத்தடை ஏற்படும். புதிய முயற்சி மேற்கொள்ளஇருப்பவர்கள் இரண்டாண்டு காலம் பொறுமையாக இருப்பது நல்லது.
சிம்மம் : (வெற்றி தரும் சனி) 6-ம் இடமான எதிரி¸ நோய்¸ கடன்¸ ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீ சனீஸ்வரரால் எதிரிகள் அடங்கி போவார்கள். நோய் நொடிகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். கடன் அடைபடும். கோர்ட்டு கேஸ்¸ வழக்குககளில் வெற்றி கிடைக்கும். திருமணம் கைகூடும். தொழிலில் நல்ல லாபமும்¸ உயர்வும் ஏற்படும்¸ புகழ்¸ செல்வாக்கு¸ அதிகாரம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்பு¸ பதவி உயர்வு¸ ஊதிய உயர்வு போன்றவையும் ஏற்படும்.
கன்னி : (ஏற்றம் தரும் சனி) அர்த்தாஷ்டம சனி பகவானின் கொடிய பிடியிலிருந்து விடுபட்டு 5-ம் இடமான பூர்வபுண்ணியம் மற்றும் குழந்தைகள் ஸ்தானத்தில் ஸ்ரீ சனிபகவான் சஞ்சரிப்பது மத்திம பலன்களை தரும். அதாவது இன்பம். துன்பம்¸ இரண்டும் கலந்தாற்போன்ற பலன்களை தரும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும். சென்ற சனிப்பெயர்ச்சி பலன்களை விட இந்த சனிப்பெயர்ச்சியில் ஓரளவு நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
துலாம் : (அர்த்தாஷ்டம சனி) 4-ஆம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக ஸ்ரீ சனீஸ்வரர் சஞ்சாரம் செய்கிறார்.சனி பகவானின் 10-ஆம் பார்வையில் நீங்கள் சிக்குவதால் உடலில் நோய் நொடி போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். தேவையில்லாத டென்ஷன். மனஉலைச்சல் தோன்றும். எதிலும் தடை¸ தோல்வி ஏற்படும். செய் தொழிலில் நஷ்டம், பதவி இழப்பு ஏற்படும். வேலைவாய்ப்பு¸ திருமணம்¸ குழந்தைப்பேறு¸ போன்றவற்றில் தடை ஏற்படும்.
விருட்சிகம் : (தைரியம்¸ பதவி¸ புகழ் தரும் சனி) ஏழரை ஆண்டு சனி பகவானின் பிடியில் இருந்து விடுபட்டு 3ம் இடமான தைரியம்¸ வீரியஸ்தானத்தில் ஸ்ரீ சனிபகவான் சஞ்சரிக்கிறார். எதிலும் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். தைரியமாக அரிய காரியங்களில் ஈடுபட்டு சாதனைகள் பல செய்யப்போகின்றீர்கள்.பொன்¸ பொருள்¸வீடு¸ மனை¸ வாகனம்¸ வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தனுசு : (ஏழரை ஆண்டு பாத சனி) ஏழரை ஆண்டு சனிபகவானின் பிடியில் 5 ஆண்டுகள் கடந்துவிட்டீர்கள். குடும்பத்தில் பிரச்சினை. பணப்பற்றாக்குறை¸ இழப்பு இருக்கும். கணவன்-மனைவி மனவேற்றுமை¸ செய்தொழில் நஷ்டம்¸ வீண் அலைச்சல்¸ பதவி இழப்பு¸ பொன் பொருள் இழப்பு என துன்பங்கள் இரண்டாண்டுகள் வரையில் தொடரும். வாக்கு எனப்படும் நாக்கில் சனி பகவான் அமர்வதால் வீண் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.
மகரம் : (ஏழரை ஆண்டு ஜென்ம சனி) ஏழரை ஆண்டு சனியின் பிடியில் இருக்கும் நீங்கள் 30 வயதுக்குட்பட்ட மங்கு சனி உள்ளவர்கள் எதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இரண்டாம் சுற்றான பொங்கு சனி 30 வயது முதல் 60 வயதுவரை உள்ளவர்களுக்கு குடும்பத்தில் இன்பங்கள் பொங்கும். மூன்றாம் சுற்றான மரண சனி 60 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு கண்டம் ஏற்படும்.
கும்பம் : (ஏழரை ஆண்டு கிரக சனி) இதுவரை ஸ்ரீ சனிபகவானால் லாபம் அடைந்த உங்களுக்கு 12-ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் இவரால் பல சோதனைகள் வேதனைகள் வர உள்ளது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏழரை ஆண்டு சனியின் காலங்களில் முதல் இரண்டரை ஆண்டு காலமிது. நோயின் கடுமை அதிகரிக்கும். செய்தொழில் நஷ்டம்¸ பொறுமையும்¸ இறை வழிபாடும் அவசியம்.
மீனம் : (பொற்காலம் தரும் சனி) 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் ஸ்ரீ சனீஸ்வரர் உங்கள் ராசிக்கு அதிபதியான ஸ்ரீ குருபகவானுடன் இணைந்து சஞ்சரித்து பல நன்மைகளை வாரி வழங்க இருக்கிறார்.பொன்¸ பொருள்¸ லாபம்¸ வீடு வாகன சேர்க்கை¸ செய்தொழிலில் வெற்றியும் நல்ல லாபமும் ஏற்படும். கோர்ட்டு கேஸ்களில் வெற்றி¸ வழக்கு¸ போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
மேலே கூறப்பட்டுள்ள இராசிப்பலன்கள் யாவும் பொதுப்பலன்கள் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் பலமாகவோ அல்லது யோகம் தரக்கூடிய இடத்தில் அமர்ந்திருந்தாலோ தீயபலன்கள் குறைந்தும் நன்மைகள் அதிகளவும் உண்டாகும்.
தொகுப்பு- சித்தர் மகன். Dr.L.சீனிவாசன்¸ M.A.,D.A.,S.M.P.