வாய கட்டி வயித்த கட்டி கிராம மக்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை ஆட்டைய போட்ட நிறுவனம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மதுரம் புரொமோட்டர்ஸ் அண்டு பிராப்பர்ட்டிஸ் லிட் என்ற தனியார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்ளை செய்து பல்லாயிரக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது சம்மந்தமாக போலீசார் 4 பேரை கைது செய்து ரூ.50 கோடி மதிப்பிலான ஆவணங்களை கைப்பற்றினர்.
அந்நிறுவனம் மீது பல ஊர்களில் ஏமாந்த பொதுமக்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலும் 300க்கும் மேற்பட்டவர்களிடம் அந்நிறுவனம் கைவரிசையை காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரம் புரொமோட்டர்ஸ் நிறுவனம் வேலூர் சங்கரன்பாளையம்¸ பகவதி அம்மன் கோயில் தெருவில் கிளை அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள்¸ வெண்ணிலா ஆகிய 2 பேர் அந்நிறுவனத்திற்கு முகவர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் விண்ணமங்கலம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோரிடம் 2 மடங்கு பணம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ரூபாய் 500 முதல் 1000 வரை மாதந்தோறும்¸ ஐந்து வருடம் வசூல் செய்துயுள்ளனர்.
முதிர்வு தேதி முடிந்த பிறகும் கட்டிய பணம் டபுளாக திரும்பி வரும் என காத்திருந்தவர்களுக்கு மதுரம் புரொமோட்டர்ஸ் நிறுவனம் மூடப்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் மட்டுமே கிடைத்தது. இதனால் அவர்கள் முகவர்களான முனியம்மாள்¸ வெண்ணிலாவிடம் சென்று கேட்டதற்கு நீங்கள் கட்டிய பணத்திற்கு நிலமாக வாங்கி விட்டதாகவும்¸ இதனால் பணமாக தரமுடியாது என்றும் வேண்டுமானால் மதுரை¸ தேனி¸ திண்டுக்கல்¸ சிதம்பரம் போன்ற இடங்களில் நிலமாக வாங்கிக் கொள்ளுங்கள் என பதில் வந்ததாம்.
2மடங்கு பணம் தருவதாக கூறியதால்தான் கூலி வேலைக்கு சென்று வாய கட்டி வயித்த கட்டி பணத்தை தந்தோம். எனவே எங்களுக்கு பணமாகத்தான் திருப்பி தர வேண்டும் என நிலத்தை வாங்க கிராம மக்கள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர். அந்த புகாரில் அவர்கள் விண்ணமங்கலத்தை சேர்ந்த முனியம்மாள் மற்றும் வெண்ணிலா என்ற இரு முகவர்கள் நாங்கள் கட்டும் பணத்திற்கு 2 மடங்கு பணமாக தருவதாக கூறி எங்களிடம் மாதம் 500¸1000 என்று தவனை முறையில் 5 வருடங்கள் வசூல் செய்தனர் ஆனால் அவர்கள் மதுரம் புரோமோட்டர்ஸ் மூடப்பட்டதை எங்களிடம் சொல்லவில்லை 2016ம் ஆண்டு அந்த நிர்வாகம் மூடப்பட்ட பின்னரும் 2017¸ 2018 ஆண்டு நலம் புரோமோட்டர்ஸ் என்ற பெயரில் ரசீது தரப்பட்டது.
இவ்வாறு எங்களை ஏமாற்றி எங்களின் வியர்வையில் சம்பாதித்து கட்டிய பணத்தை கேட்ட பொழுது எங்களுக்கு சரியான பதிலை கூறவில்லை. இது எங்களின் மகன் மகள் படிப்பு மற்றும் மருத்துவசெலவுக்காக சிறு சேமிப்பாக நாங்கள் கட்டினோம். பணத்தை கேட்டால் எங்களை யாராலும் எதுவும் பண்ணமுடியாது¸ நீங்கள் எங்கே சென்று பார்த்து கொள்ளுகிறர்களோ அங்கே பார்த்து கொள்ளுங்கள் என மிரட்டுகின்றனர். என குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிறுவனம் இப்பகுதிகளில் ரூ.2 கோடி வரை மோசடி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
எத்தனையோ நிறுவனங்கள் விதவிதமான ஆசைகளை காட்டி மக்களை முட்டாள்களாக்கி பணத்தை ஏப்பம் விட்டதை தெரிந்தும் இன்னும் மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதை பார்க்கும் போது ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் என்ற வாசகம்தான் நினைவுக்கு வரும்.