திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்த பா.ஜ.க-வினருடன் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தாத அதிகாரிகளையும்¸ முறை கேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருவண்ணாமலை ஒன்றிய பா.ஜ.க சார்பில் இன்று காலை 11 மணிக்கு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்றிருந்த பா.ஜ.க-வினர் முறைகேடு நடைபெற்ற திட்டங்களை பட்டியலிட்டு நோட்டீஸ் வெளியிட்டனர். மேலும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்¸ தனிநபர் கழிவறை கட்டும் திட்டம்¸ குப்பை வண்டிகள் வழங்கும் திட்டம்¸ பாரத பிரதமரின் கிராமபுற சாலை இணைப்பு திட்டம்¸ மகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டம்¸ மத்திய அரசின் நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டத்தின் பண்ணை குட்டை அமைக்கும் திட்டம்¸ மத்திய அரசின் குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்கும் திட்டம்¸ தடுப்பணைகள் கட்டும் திட்டம்¸ மத்திய அரசின் மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டம்¸ குடி மராமத்து பணிகள் போன்ற திட்டங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டங்களை சரியாக அமல்படுத்தாமலும்¸ சரியான பயனாளிகளுக்கு வழங்காமலும்¸ முறைகேட்டில் நடைபெறுவதை கண்டித்தும்¸ ஊழலுக்கு துணை போகும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது (பி.டி.ஓ) உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய பா.ஜ.க தலைவர் ஆ.சிவா தலைமைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் எம்.பாஸ்கரன்¸ மாநில பார்வையாளர் வி.அருள்¸ வேலூர் கோட்ட அமைப்பு செயலாளர் வி.ரமேஷ்¸ மாவட்டத் தலைவர் ஆர்.ஜீவானந்தம்¸ மாநில பொதுச் செயலாளர் எம்.சதீஷ்குமார்¸ சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் எஸ்.தணிகைவேல் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள பா.ஜ.கவின் இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பா.ஜ.கவினரை அழைத்து பேச மேலதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(பி.டி.ஓ) நேற்று இரவு சமாதான பேச்சு வார்த்தையை நடத்தினர்.
இதில் மாவட்டத் தலைவர் ஆர்.ஜீவானந்தம்¸ விவசாய அணி மாவட்டத் தலைவர் பிரகாஷ்¸ ஒன்றிய பா.ஜ.க தலைவர் ஆ.சிவா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் தரப்பில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாரி மற்றும் பி.டி.ஓக்கள் பங்கேற்றனர். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளில் பிரதமர் படத்தை வைக்க வேண்டும்¸ பா.ஜ.க பரிந்துரை செய்யும் தகுதியான பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பா.ஜ.க தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. அதிகாரிகள் தரப்பிலும் திட்டங்களை முறைப்படுத்த காலஅவகாசம் கேட்கப்பட்டது.
சமாதான பேச்சில் உடன்பாடு ஏற்படவே பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் அறிவுறுத்தலின் பேரில்ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக பா.ஜ.கவினர் அறிவித்துள்ளனர். முறைகேடுகள் களையப்படாவிட்டால் கைவிடப்பட்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற தெற்கு மாவட்ட பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசு திட்டங்களில் முறைகேடு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள்¸ ஊராட்சி செயலாளர்கள் மீது விசாரணை செய்து முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கிசான் சம்மான் எனப்படும் பிரதம மந்திரி வேளாண்மை நிதி உதவி திட்டத்த்தின் கீழ் நடைபெற்ற மோசடிக்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.