கொரோனா காரணமாக திருவண்ணாமலை குபேர லிங்கம் தரிசனம் செய்வதற்கும்¸ கிரிவலம் வருவதற்கும் 13.12.2020 அன்று பக்தர்கள்¸பொது மக்கள் வர வேண்டாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. 14 கிலோ மீட்டர் மலைப் பாதையில் இந்திர லிங்கம்¸ அக்னி லிங்கம்¸ யமலிங்கம்¸ நிருதி லிங்கம்¸ வாயு லிங்கம்¸ குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என 8 அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளது. அஷ்டலிங்கங்களில் 7-வது லிங்கமாக அமைந்துள்ள குபேர லிங்கம் தரிசனம் செய்து¸ கிரிவலம் வருவதற்காக கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்¸ பிற மாநிலங்களிலிருந்தும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இந்த ஆண்டு வரும் 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று குபேர லிங்கம் தாசினம் செய்து¸ கிரிவலம் வருவதற்கு உகந்த நாள் என சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக கடந்த 24.03.2020 முதல் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டு¸ தற்போது தளர்வுகளுடன் 31.12.2020 வரை ஊரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும்¸ நோய் பரவல் முற்றிலும் குறையும் வரை பொது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கொரோனா காரணமாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேர லிங்கம் தரிசனம் மற்றும் கிரிவலம் வருவதற்கு 13.12.2020 அன்று பக்தர்கள் மற்றும் பொது மக்கள் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்¸ அன்றைய தினம் அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் நிர்வாகம் மூலமாக குபேர லிங்கம் திருக்கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
பக்தர்கள் மற்றம் பொது மக்கள் குபேர லிங்கம் திருக்கோயில் வருவதற்கும்¸ திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வதற்கும் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பக்தர்களுக்கு வேண்டுகோள்
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா நோய் தொற்று பரவாமல் பொது மக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.