கட்டணத்தை செலுத்த முடியால் தவிக்கும் ஏழை மாணவி
நிதி உதவி அளிக்க வேண்டுகோள்
திருவண்ணாமலை அருகே முதன்முறையாக லம்பாடி இனத்தில் 2 மாணவியர்களும்¸ 1 மாணவரும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதில் ஒரு மாணவியின் பெற்றோர் கடன் வாங்கி மகளை மருத்துவ கல்லூரியில் சேர்த்துள்ளனர்.
தமிழ்நாடு¸ ஆந்திரா¸ கர்நாடகா போன்ற மாநிலங்களில் நாடோடிகளாக ராஜஸ்தானில் இருந்து வந்து குடியேறிய லம்பாடி இன மக்கள் ஆரம்பத்தில் கழுதைகள் மேல் உப்பை ஏற்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் சென்று அவற்றை விறபனை செய்து வருவதை தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால் படிப்படியாக இவர்கள் சொந்தமாக நிலம் வாங்கி ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியேறி அங்கே தொழில் செய்தோ விவசாயம் செய்தோ வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்மொழி
சிலர் கூலி வேலைக்கும் செல்கின்றனர். இவர்கள் தங்கள் சமூகத்தினருடன் சேர்ந்து குழுவாக ஓரிடத்தில்தான் வசிப்பார்கள். மராத்தியும் குஜராத்தியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் மற்றும் கார்போலி மொழியை பேசினாலும் தாய்மொழியை விட தமிழையே சரளமாகப் பேசி வருகின்றனர். தங்களது வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டு உள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த அரட்டவாடி பகுதியில் உள்ள பத்தியா தண்டா¸ குண்டன் தண்டா ஆகிய ஊர்களில் 300க்கும் மேற்பட்ட லம்பாடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரை 250 வருடங்களுக்கு முன்பு பத்தியா என்பவர் உருவாக்கியதால் அவர் பெயரிலேயே ஊரின் பெயரும் அமைந்தது. பத்தியாவின் மகன்கள் மிச்சா நாயக்¸ ராமசாமி நாயக்¸ சந்து நாயக்¸ கோவிந்த் நாயக் ஆகியோரும் இறந்து விட அவரது வாரிசுகள் மற்றும் உறவினர்கள் என தற்போது 4வது தலைமுறையினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை படிக்க வைத்து வருகின்றனர். அவர்களது உழைப்பும்¸ நம்பிக்கையும் வீண் போகாமல் காப்பாற்றியுள்ளனர் மாணவிகள் அர்ச்சனாவும்¸ சவுமியாவும்.
கூலி வேலை செய்து
பி.எல்.தண்டாவைச் சேர்ந்த ரஞ்சித்- மீனா இவர்களது மகள் அர்ச்சனா¸ மண்ணு- ராதா இவர்களது மகள் சவுமியா ஆகியோர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ரஞ்சித் வேன் டிரைவராக உள்ளார். மீனா தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிகிறார். மண்ணுவும்¸ ராதாவும் கேராளாவில் கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்து வருகின்றனர். இவர்களது மகள் சவுமியா அரட்டவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வை எழுதி 184-வது இடத்தைப் பிடித்தார். இவருக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு முறையின்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரி
தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்த அர்ச்சனா நீட் தேர்வில் 554 மதிப்பெண்களை பெற்றார். குறைவான மதிப்பெண் பெற்றதால் இவருக்கு சென்னை தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க சீட் கிடைத்தது. இதற்கு ரூ.7லட்சம் கட்ட வேண்டும் என்பதால் பெற்றோர்கள் திகைத்தனர். கைக்கு எட்டியது எங்கே வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ என நினைத்து உறவினர்களிடமும்¸ தெரிந்தவர்களிடம் உதவி கேட்டனர். கல்லூரியோ இன்று மாலை 5 மணிக்குள் பணத்தை கட்ட வேண்டும் என சொல்லி விடவே 3 நாட்களாக பணத்துக்கு அலைந்து ரூ.4 லட்சத்தை கடனாக பெற்றனர்.
இந்த பணத்தை கல்லூரியில் செலுத்தி மீதி பணம் ரூ. 3 லட்சத்தை கட்ட 1 வாரம் டைம் கேட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகமோ 2 நாட்கள் மட்டுமே டைம் தந்துள்ளதால் தங்களது குடும்ப¸ வறுமை சூழ்நிலையை கருத்தில் கொண்டு நல்லுள்ளம் கொண்டோர் உதவி செய்யயுமாறு அர்ச்சனாவின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதே போல் இவர்களது சமுதாயத்தைச் சேர்ந்த தர்மபுரி மாவட்டம்¸ கிட்டம்பட்டி தண்டா வெங்கடேஷ்- விஜயாவின் மகன் திலீப்பும்¸ 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு முறையின்படி சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். 2முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த திலீப் விடாமுயற்சியோடு 3வது முறையாக எழுதி 610 மதிப்பெண்களை பெற்று தேர்வானார்.
பாராட்டு விழா
தங்கள் இனத்திலிருந்து முதன்முறையாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மாணவர்கள் தேர்வாகியுள்ளதை 2 கிராம மக்களும் கொண்டாடி வருகின்றனர்.தமிழ்நாடு நாடு பஞ்சாரா சேவை சங்கத்தின் சார்பில் 3 மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தமிழ் நாடு பஞ்சாரா லம்பாடிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பாரத்ரவி¸ துணை தலைவர் சந்திரன் நாயக்¸ சேவை சங்க தலைவர் சுரேஷ் நாயக்¸ செயலாளர் தனபால் நாயக்¸ பொருளாளர் சதீஸ் நாயக்¸ சமூக சேவகர் குமார் நாயக்¸ டாக்டர் வெற்றி வேல்நாயக் ஆகியோர் மாணவர்களை பாராட்டி பேசினார்கள். விழாவில் 3 பேருக்கும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
நிதி அளிக்க வேண்டுகோள்
இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ் நாடு பஞ்சாரா லம்பாடிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பாரத் ரவி 2 பேருக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. அர்ச்சனாவுக்கு தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் சமூகத்திலிருந்து டாக்டர் உருவாவதை இழக்க நாங்கள் விரும்பவில்லை. தினசரி ஊதியம் பெறும் பெற்றோர்களால் இந்த நிதி சுமையை தாங்க முடியாது. கடன் வாங்கி ரூ.4 லட்சத்தை திரட்டி கட்டணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் மீதி ரூ.3 லட்சத்தை எப்படி கட்டுவது என விழி பிதுங்கி நிற்கின்றனர். நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். சேவை மனம் கொண்டவர்கள்¸ ஆர். மீனா¸ இந்தியன் ஓவர்சீஸ் வங்கி¸ சென்னை அண்ணா நகர் கிளை¸ கணக்கு எண். 027001000051652. IFSC. IOBA0000270 என்ற அர்ச்சனாவின் தாயார் கணக்கில் தங்களால் இயன்ற நிதி உதவியை செலுத்தி உதவிட வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.