உத்தம நிலைகள் பிரதோஷ மகிமைகள்
கேட்டிடில் செவி மணக்கும் பாரேன்
சொல்லிடில் வாய் மணக்கும் பாரேன்
நினைத்திடில் இதயம் மணக்கும் பாரேன்
எண்ணிலடங்கா புண்ணியத்தை எப்படி இயம்புவேனோ?
சிந்தைக்கு இனியதாகி செவிக்கும் மதுவாகி
விந்தையான வாய்க்கும் இனியதாகி
எந்தை பிரானாடும் பிரதோஷ விழா
வந்த இருவினை மாற்றுமே..
என்றார் அகத்தியர்.
அந்த அளவுக்கு பிரதோஷம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மஹா பிரதோஷம்
ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும். சனிப்பிரதோஷத்தை சனி மஹா பிரதோஷம் என்றழைப்பது சிறப்பு என்கின்றனர் ஆன்மீக பெரியோர்கள்.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும்¸ பிள்ளை பாக்கியம் கிடைக்கும்¸ வறுமை விலகும்¸நோய்கள் நீங்கும்¸ சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும் . சனிப்பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது அனைத்து பாவங்களையும் போக்க கூடியது என்கின்றனர் அனுபவம் மிக்க சிவனடியார்கள்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் இன்று கார்த்திகை மாத தேய்பிறை சனி பிரதோஷ வழிபாடு மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
6 நந்திகளுக்கு
இன்று மாலை அதிகார நந்தி உள்ளிட்ட 6 நந்திகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஓதுவாமூர்த்திகள் திருமுறை பாட நந்தியம் பெருமானுக்கு பச்சரிசி மாவு அபிஷேக பொடி பால் தயிர் சந்தனம் இளநீர் வாசனை திரவியங்கள் பஞ்சாமிர்தம் தேன் விப10தி சந்தனாதி தைலம் பலவகை பூக்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
144 தடை உத்தரவின் காரணமாக சனி பிரதோஷத்திற்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் பார்ப்பதற்காக சமூக வலைதளங்களில் நேரலை செய்யப்பட்டது. மூலவரான அண்ணாமலையாரை தரிசனம் செல்லும் பாதையில் பேரிகார்டு அமைத்து நந்தி அபிஷேகத்தை பக்தர்கள் பார்த்து செல்லும்படி கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டே நந்தியம் பெருமானை தரிசித்தனர்.
பிரதோஷத்தில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியும் பிரபல திரைப்பட நடிகையுமான ஸ்ருதி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கடும் போக்குவரத்து நெரிசல்
சனி பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று காலை முதலே வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும்¸ கிரிவலம் செல்லவும் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் இன்று மாலை பிரதான சாலையான தேரடித் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாதசாரிகளும்¸ பொதுமக்களும்¸ வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர்.
ஆங்காங்கே கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தன. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. தள்ளு வண்டி கடைகளையும்¸ நடைபாதை வியாபாரிகளையும் போலீசார் ஒழங்கு படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.