திருவண்ணாமலையில் நடந்த திருக்கோயில்கள் திருப்பணிக் குழும பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தமிழத்தில் பழமையான சிவலிங்கங்களை மீட்டெடுத்து புரைமைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்திட ஏற்பாடு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
பொறுப்பாளர்கள் அறிமுகம்
அகஸ்திய கிருபா எனப்படும் திருக்கோயில்கள் திருப்பணிக்குழுமத்தின் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருவண்ணாமலை வன்னியகுல சத்திரிய வல்லாள மகாராஜா மடாலய திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வையாபுரி தலைமை தாங்கினார். வேடந்தவாடி ஜெயராமன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் அகஸ்திய கிருபா நிறுவனர் அன்புச்செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது¸
இந்நாட்டில் இனிமேல் மத மாற்றங்கள் நடைபெறாது. இந்த தேசம் முஸ்லீம்கள் படையெடுப்பால் அடிமை பட்டு கிடந்தது. பிறகு பிரிட்டிஷ் படையெடுப்பால் நமது கலாச்சாரங்கள் பாழ்பட்டன. கோயில்கள் சீரழிந்தன. இனிமேல் இத் தேசம் முழு எழுச்சியோடு செயல்பட போகிறது.
கோயில்கள் புனரமைப்பு
தமிழ்நாட்டில் அகஸ்திய கிருபா சார்பில் 1800 கோயில்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. லிங்கங்கள் பராமரிப்பின்றி இருக்கிறது. இவற்றை மீட்டு புனரமைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்திட ஏற்பாடு செய்வதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகத்தில் தருமம் தழைக்கின்றது என்றால் அதற்கு தமிழ்நாடுதான் காரணம். அடுத்து எங்கே பிறக்க போகிறோம் என்பதை இந்து மதம் சொல்லும். பிறக்காமல் இருக்க அண்ணாமலையார் போக வழிகள் சொல்கிறது. தேசம் என்றால் தெய்வம்¸ தெய்வம் என்றால் கோயில்¸ கோயில் என்றால் திருப்பணிதான்.
34 சதவீத லிங்கங்கள்
தேவர்கள்¸ பஞ்ச பாண்டவர்கள்¸ ராஜாக்கள் பூஜித்த சிவலிங்கங்களில் 34 சதவீத லிங்கங்கள் ரோடு ஓரம் கிடக்கின்றன. பராமரிப்பின்றி இருக்கிற சிவலிங்கங்களை கண்டெடுத்தால் பல ஆயிரம் பாவங்கள் போகும்¸ சிவலிங்கத்தை மீட்டு முக்தி நிலைக்கு செல்வோம். நம் குடும்பத்தில் ஒரு நிகழ்வு போல் நினைத்து சிவலிங்கங்களை மீட்டெடுக்க வேண்டும்.
இந்த தேசத்தின் மூல சக்தி பெண்கள்தான். அதனால்தான் தாய் நாடு என்கிறோம். பெண்களை வணங்காதவர்கள் பெரிய ஆளானதாக சரித்திரம் கிடையாது. பெண்கள் நன்றாக இருந்தால் அந்த குடும்பம் நன்றாக இருக்கும். அதே போல் பசுவை பூஜித்தால் அந்த கிராமமே நன்றாக இருக்கும். எனவே கோபூஜையை நடத்துங்கள். அதில் 50 சதவீத செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதே போல் அமாவாசை தோறும அன்னதானம் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் காஞ்சிபுரம் ராஜேந்திரன்¸ ஆசிரியர் பவனந்தி¸ மாதலம்பாடி கண்ணன்¸ யுவராஜ்¸ சுந்தரமூர்த்தி¸ செல்வக்குமார், ஆகியோர் பேசினார்கள். முடிவில் வெ.ஏழுமலை என்கிற ஜோதி சாமியார் நன்றி கூறினார்.
இதில் இந்திராணி¸ ஆறுமுக சுவாமி¸ மண்ணு¸ காளி பூசாரி¸ உதயகுமார்¸ பாண்டியன்¸ சங்கர்¸ அன்பழகன்¸ ரவி¸ எம். சரவணன்¸ எம்.சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்டம் முழுவதிலுமிருந்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பணி செய்தல்
தமிழகத்தில் சிதையுண்ட ஆலயங்களை சீர்படுத்துதல்¸ கைவிடப்பட்ட லிங்கங்களை மீட்டெடுத்து திருப்பணிகளை செய்தல்¸ வேத காலங்களில் சொல்லப்பட்ட யாகங்களை செய்தல்¸ ஏழை மக்களுக்காக அன்னதான சேவையை தொடங்குதல் போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
போற்றக்கூடிய அகஸ்திய கிருபாவின் ஆன்மீக பணி
தமிழகத்தில் சிதிலமான நிலையில் இருக்கின்ற பழமையான கோவில்கள் மற்றும் சிவலிங்கங்களை மீட்டெடுத்து புரைமைத்து பொது மக்கள் வழிபாடு நடத்திடும் வகையில் பல ஆக்கபூர்வமான பணிகளை அகஸ்திய கிருபா எனும் ஆன்மிக தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.
இது குறித்து அகஸ்திய கிருபா அன்புச்செழியன் கூறியுள்ளதாவது¸
தமிழகத்தின் பெரும் செல்வங்களாக இருக்கின்ற சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியை அகஸ்தியகிருபா தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறது. அகஸ்திய கிருபா எனும் அமைப்பு ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் அளவற்ற கருணையால் நிகழ்ந்து வரும் அமைப்பு. இதன் நோக்கம் பாரத தேசத்தில் புதையுண்ட லிங்க வடிவங்களையும் ¸ சிதையுண்ட ஆலயங்களையும் சீரமைப்பதே தலையாய பணி. இந்த புண்ணிய தேசத்தின் பொக்கிஷங்களான லிங்க வடிவங்கள் எல்லாம் மண் வெளியில் சிதைவுண்டு கிடக்கிறது. நம் முன்னோர்கள் எல்லாம் ஆசை ஆசையாய் எழுப்பிய ஆலயங்கள் எல்லாம் இன்று சிதைவுண்டு கிடக்கிறது.
அழிவின் விளிம்பில் லிங்கங்கள்
சுமார் 12000 கோவில்கள் தமிழகத்தில் சிதைவுண்டு அழிந்து மண்ணோடு மண்ணாகி கிடக்கிறது. கிராமங்கள் தோறும் நலிவடைந்த ஆலயங்களும்¸ எல்லாம் அழிந்தும் லிங்கம் மட்டும் இன்னும் உயிரோடு இருக்கும் கிராமங்கள் ஏராளம். அழிவின் விளிம்பில் உள்ள லிங்கங்களையும் கோவில்களையும் புனரமைத்து¸ அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் பணி நமக்கு உண்டு.
இந்த தேசம் இன்று வாழ்கிறது என்றால் இந்த தேசத்தின் தர்மத்தாலும் நம் ஆலயங்களின் அறிவியலால் மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த கோவில்களின் அறிவியலால் இந்த பாரத தேசம் உலகை வாழவைத்து கொண்டு இருக்கிறதோ அந்த ஆலயங்களை வாழவைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.