Homeசெய்திகள்பங்க் பாபு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

பங்க் பாபு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

பங்க் பாபு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் மைத்துனர் உள்பட 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். 

பழிக்கு பழியாக

திருவண்ணாமலையில் முன்னாள் அதிமுக நகர செயலாளர் கனகராஜ் 2017ம் ஆண்டு அவரது நண்பர் பங்க் பாபுவால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இடம் வாங்குவது சம்பந்தமான மோதலில் அவர் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. 

ஜாமீனில் வெளியே வந்த பங்க் பாபு(47) கடந்த 3ந் தேதி மக்கள் நடமாட்டம் உள்ள திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கனகராஜின் கொலைக்கு பழி தீர்க்க அவரது குடும்பத்தினர் பங்க் பாபுவை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

கனகராஜின் மனைவி

இதையடுத்து கனகராஜின் மனைவி ஞானசௌந்தரி (32)¸ அவரது தாய் ராணி(58)¸ அவரது தாய் மாமன் சுரேஷ் (32) ஆகிய 3 பேரை 6ந் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் வேங்கிக்கால் வினோத்குமார்¸ சிவராத்திரி மடத் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

See also  கயிறு இழுக்கும் போட்டி-கலெக்டர் மனைவி அணி வெற்றி

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பங்க் பாபுவை கொலை செய்ய ரூ.50 லட்சம் மற்றும் கார் தருவதாக பேசப்பட்டதில் முதல் கட்டமாக ரூ.30 லட்சம் கைமாறியது தெரிய வந்தது. 

இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட ஞானசௌந்தரியின் தம்பி விவேகானந்தன் மற்றும் கூலி படையினரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதில் முன்னேற்றம் ஏற்பட்டது. விவேகானந்தன் உள்பட சிலரை போலீசார் வேலூரில் மடக்கி கைது செய்தனர். 

10 நாட்கள் கண்காணிப்பு

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா மூலம் கூலிபடையினரை நியமித்து இந்த கொலை நிகழ்த்தப்பட்டது தெரிய வந்தது. விவேகானந்தனின் நண்பர் ஊசாம்பாடி ராஜேஷ் 10 நாட்களாக பங்க் பாபுவின் நடமாட்டத்தை கண்காணித்து எந்த இடத்தில் கொலை செய்யலாம் என ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து விவேகானந்தன்(30)¸ பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக்(25)¸ ஊசாம்பாடியைச் சேர்ந்த ராஜேஷ்(29) ஆகிய 3 பேரையும்  போலீசார் இன்று கைது செய்துள்ளனர். 

See also  விநாயகர் சிலை ஊர்வலம்- கவுன்சிலர் வீட்டில் தகராறு

35 வழக்குகள் 

தமிழகம் முழுவதும் கூலி படையினருடன் தொடர்பில் உள்ள வசூர் ராஜா மீது 35க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. 7 முறை குண்டர் சட்டத்தல் உள்ளே சென்று வந்தவர். வசூர் ராஜா திருந்தி வாழ வேண்டும் என ஆசைப்பட்டு அவரது தாயார் அவருக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த படங்களும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. இந்நிலையில் பங்க் பாபு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வசூர் ராஜா மூலம் கூலிப்படையை ஏற்பாடு செய்தது தெரிய வந்துள்ளது. இதே போல் கனகராஜின் மைத்துனர் விவேகானந்தன் மீதும் கர்நாடகாவில் வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கொலையாளிகள் சிக்கியது எப்படி?

விவேகானந்தன் செல்போனில் பதிவான எண்களை கொண்டு கொலையாளிகளை போலீசார் மடக்கியுள்ளனர். பங்க் பாபுவின் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூரைச் சேர்ந்த 6 பேர்¸ சென்னையைச் சேர்ந்த ஒருவர் என கூலி படையினர் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!