திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் காட்டில் புதைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய பேரல்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர சாராய வேட்டையை நடத்தி வருகின்றனர். இதற்காக டெல்டா தனிப்பிரிவு என்ற போலீஸ் பிரிவையும் அவர் ஏற்படுத்தி உள்ளார். இவர்கள் எங்கங்கெல்லாம் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறது என்பதை கண்டறிந்து அவற்றை கைப்பற்றி அழித்து வருகின்றனர். மலை பகுதியான ஜவ்வாது மலையிலும் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் தொடர்ச்சியாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள்¸ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பரிந்துரையின் பேரிலும்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரிலும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சாராயம் விற்றவர்கள் உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 135 பேர் இதுவரை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி பகுதிகளில் அதிக அளவு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்க்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு கே.அண்ணாதுரை தலைமையில் டெல்டா தனிப்பிரிவு போலீசார் மற்றும் உள்ளுர் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையை நடத்தினர்.
இதில் தானிப்பாடி அருகே உள்ள தட்டரணை கிராமம் ஒட்டிய காப்புக் காட்டில் புதைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய பேரல்களை கண்டுபிடித்தனர். மண்ணை தோண்டி பேரல்களை வெளியே எடுத்த போலீசார் அதை அரிவாளால் வெட்டி அதில் இருந்த சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். பேரல்களிலிருந்து பீய்ச்சியடித்த சாராயம் தரையில் ஆறு போல் ஓடியது. மொத்தம் 5 பேரல்களில் இருந்த தலா 200 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.
இந்த கள்ளச்சாராய ஊறல்களை தயாரித்து காட்டில் புதைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதே போல் கடந்த 18ந் தேதி தானிப்பாடியை அடுத்த நாவக்கொள்ளை கிராமம் சகுனி பாறை ஓடை பகுதியில் 5 பேரல்களில் புதைக்கப்பட்டிருந்த 2500 கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.