2 கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது உங்களால் எப்படி ஜெயிக்க முடியும் என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளிக்காமல் சென்றார்.
சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
திருவண்ணாமலைக்கு நேற்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த அவர் திருவண்ணாமலை ராமகிருஷ்ணா ஓட்டலில் முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடினார். இதில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த கலந்துரையாடலில் அவர் பேசியது¸
துவரிமான் என்ற இடத்தல் வெளிநாட்டில் உள்ள மக்கள் நீதி மய்ய நற்பணி இயக்கத்தினர் பழைய அரசு பள்ளியை மாற்றி அமைத்துள்ளனர். அந்த மாதிரி எல்லா பள்ளிகளும் மாற்றியமைக்க வேண்டும். எங்கள் கையில் இன்னும் ஆட்சி வரவில்லை. ஆனால் செய்ய துவங்கி விட்டோம். அரசு பள்ளிகளை நேஷனல் லெவலில் இருந்து இண்டர்நேஷனல் லெவலுக்கு கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
எங்களுக்கு என்ன வருத்தம் என்றால் பல திறமையான ஐஏஎஸ் ஆபீசர்களையெல்லாம் டாஸ்மாக் கணக்கெழுத அனுப்பி விட்டு கல்வியை கவனிக்காமல் தனியாரிடம் விட்டுவிட்டனர். தனியாரும் வரலாம். ஆனால் கல்வியை அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அது வெறும் வியாபாரம் மட்டுமல்ல. நாளை நமதே என்று சொல்வதற்கு கல்வி நன்றாக இருக்க வேண்டும்.
எனது தாடி கருப்பாக இருக்கும் போதே நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். உங்களில் பலர் தலை கருப்பாக இருக்கும் போதே இதே கோபத்துடன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். வெற்றியை நோக்கி நடக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு வந்த எங்களை தோளில் சுமந்து கொண்டு போய் அங்கே விட்டு விடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
மக்கள் நீதி மய்யத்தில் நிறைய டாக்டர்கள்¸ வக்கீல்கள்¸ கவிஞர்கள் உள்ளனர். ஒரு பன்முக திறமை கொண்ட கட்சியாக மக்கள் நீதி மய்யம் விளங்கி வருகிறது. ஜனநாயகம் என்பது நீங்கள் நாயகர்களாக இருப்பதுதான். உங்கள் வாழ்க்கையை நிர்ணயித்து கஷ்டகாலத்தில் கைசெலவுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கும் முதலாளிகளாக இருந்து உங்களை ஆள்வது என்பது அர்த்தமற்ற ஒரு அரசியல். இதற்காக நாம் சுதந்திரம் வாங்கியிருக்க வேண்டாம்.
2ம் சுதந்திர போராட்டம் துவங்கி விட்டது. நேர்மையாக வாழ்கிறவர்கள் அரசியலில் நமக்கு என்ன வேலை என ஒதுங்கியிருந்ததால் நேர்மையானவர்கள் வாழ்வதற்கு என்னென்ன இடைஞ்சல்கள் பண்ண முடியுமோ அதை செய்யும் தைரியம் அவர்களுக்கு வந்து விட்டது.
கலை¸ இலக்கியம் போன்ற பல விஷயங்கள் திருவண்ணாமலையில் இருக்கிறது. இவைகளெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும். திருவண்ணாமலையை இப்போது இருப்பதை விட அதிகமாக மாற்றி விட முடியும். நீங்கள் எப்படிப்பட்ட ஆட்சியை விரும்புகிறீர்கள் என்பதை சொன்னால் அப்படிப்பட்ட ஆட்சியை கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள 150 பேர்களுக்கு மட்டுமே அனுமதி அட்டை வழங்கப்பட்டது. ஆனால் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் ஒரு பெண் உள்பட 5 பேர் மட்டுமே கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்பட்டது. கலந்துரையாடலில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கணபதி ஓட்டுக்கு 2 கட்சிகளும் பணம் கொடுத்து வரும் சூழ்நிலையில் உங்களால் எப்படி ஜெயிக்க முடியும் என கமல்ஹாசனிடம் கேள்வி கேட்டார்.
அதற்கு கமல்ஹாசன் நீங்கள் எந்த கட்சி என அவரிடம் கேட்டார். நான் எந்த கட்சியிலும் இல்லை¸ சீருடை பணியில்(டிராபிக் வார்டன்) இருப்பதாக கூறினார். நீங்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவீர்களா? என கமல்ஹாசன் கேட்டதற்கு நான் வாங்குவதில்லை என கணபதி பதிலளித்தார். இதற்கு கூட்டத்தினரை நோக்கி கைதட்டி பாராட்டு தெரிவிக்க சொன்ன கமல்ஹாசன் பணம் கொடுக்காமல் எப்படி ஜெயிக்க முடியும் என்ற கேள்விக்கு கடைசி வரை பதில் அளிக்கவில்லை.