திருவண்ணாமலை¸ கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு புதிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
2020-2021-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது தமிழக முதல்வர் நிர்வாக நலன் கருதி புதியதாக ரூ.9.5 கோடி மதிப்பீட்டில்¸ 9 இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு அலுவலகத்திற்கும் 19 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு¸திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் திருவண்ணாமலை காந்தி நகரில் செல்வ விநாயகர் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை இன்று (31.12.2020) மாலை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து¸ திருக்கோயில் திருப்பணிகளுக்கான உத்தரவு ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்¸ தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் டாக்டர் சு. பிரபாகர்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. அரவிந்த்¸ திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி¸ உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி¸ வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி¸ திருவண்ணாமலை மாவட்ட அறங்காவலர் நியமனக் குழுத் தலைவர் சு. ஜோதிலிங்கம்¸ திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் இணை ஆணையர் இரா. ஞானசேகரன்¸ உதவி ஆணையர்கள் அ. ஜான்சிராணி (திருவண்ணாமலை)¸ எ. ஆர். பிரகாஷ் (கிருஷ்ணகிரி)¸ க. ராமு (மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில்)¸ அரசு அலுவலர்கள்¸ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்¸ கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள்¸ இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட இந்து கோயில்களின் செயல்பாடுகள்¸ நடவடிக்கைகள் இதுநாள் வரையிலும் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையாளர் அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை தலைமையிடமாகக் கொண்டு புதிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் பக்தர்கள்¸ ஆன்மீக அமைப்புகள்¸ கோயில் நிர்வாகஸ்தர்கள் ஏதாவது கோரிக்கைகள்¸ புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றால் விழுப்புரத்திற்கு செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது.
பட்டியலில் சேர்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 205 கோயில்களும்¸ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 50 கோயில்களும் இனி திருவண்ணாமலை இணை ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். இது மட்டுமன்றி பட்டியலில் சேராத திருவண்ணாமலை உதவி ஆணையர் பிரிவில் உள்ள 1127 கோயில்களும்¸ கிருஷ்ணகிரி உதவி ஆணையர் பிரிவில் உள்ள 1284 கோயில்களும் புதிய அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் வரும்.
திருவண்ணாமலையில் திறக்கப்பட்டுள்ள புதிய இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் இணை ஆணையாளராக த.கஜேந்திரன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த அலுவலகத்தில் மேலாளர்¸ உதவி கோட்ட பொறியாளர்¸ மண்டல ஸ்தபதி¸ வரை தொழில் அலுவலர் என 19 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.