மகாதீப மை 30ந் தேதி பக்தர்களுக்கு வழங்கப்படும்
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்¸ நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும் விளங்குவது திருவண்ணாமலை ஆகும். இங்கு அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அனுதினமும் பஞ்சமூர்த்திகள் கோவிலில் உள்ள 5ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
10 வது நாளான கடந்த நவம்பர் 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் கருவறையில் பரணி தீபமும்¸ மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் கொப்பரையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 11 நாட்கள் மலையின் உச்சியில் கடும் மழையிலும் சுடர் விட்டு எரிந்த மகா தீபம் நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து இன்று காலை மலையின் உச்சியில் இருந்து கொப்பரை இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி கொப்பரைக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு இரண்டு நீளமான கட்டையில் கொப்பரையை கட்டி ஊழியர்கள் தோளில் சுமந்து கீழே எடுத்து வந்தனர்.
பேகோபுரம் வழியாக கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. கோயிலுக்குள் உள்ள வழக்கமாக வைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் கொப்பரை வைக்கப்பட்டது. பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த 6 அடி உயரமுள்ள கொப்பரைக்கு மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளை இளவரசு பட்டம் முரளி குருக்கள் நடத்தினார். கொப்பரைக்கு தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு விபூதி¸ குங்குமம் வழங்கப்பட்டது.
இதில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கொப்பரையில் உள்ள நெய்யை பயன்படுத்தி அண்ணாமலையார் கோயிலில் மை தயார் செய்யப்படும். இந்த மையை வருகின்ற 30ம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு பொட்டு வைக்கப்பட்ட பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்படும்.