திமுக ஆட்சியில் வணிகர்கள் நல வாரியம் மீண்டும் செயல்படுத்தப்படும் என திருவண்ணாமலையில் பொன்முடி கூறினார்.
விடியலை நோக்கி¸ ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவின் 5 நாள் பிரச்சார பயணம் திருவண்ணாமலையில் இன்று தொடங்கியது. கீழ்பென்னாத்தூரில் 6-ம் தேதியும்¸ செங்கத்தில் 7-ம் தேதியும்¸ ஆரணியில் 8-ம் தேதியும்¸ செய்யாறில் 10-ம் தேதியும் பிரச்சார பயணம் நடைபெற உள்ளது.
இன்று காலை திருவண்ணாமலையில் உள்ள வர்த்தகர்களுடன் திமுக துணைப் பொதுச் செயலாளரும்¸ முன்னாள் அமைச்சருமான பொன்முடி கலந்துரையாடினார். அப்போது எ.வ.வேலு எம்.எல்.ஏ¸ அண்ணாதுரை எம்.பி¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பிறகு பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸
பூ மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளை சந்தித்து பேசிய போது ரூ.500 வாடகை செலுத்திய கடைகளுக்கு தற்போது நகராட்சி ரூ.7ஆயிரம் வசூலிப்பதாக தெரிவித்தனர். திமுக ஆட்சியில் வர்த்தகர்களுக்கு நலவாரியம் மூலமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ.10ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்பட்டு வந்ததாகவும்¸ தற்போது அந்த வாரியம் செயல்படவில்லை என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதே போல் கொரோனா காலத்தில் 45 நாட்கள் மூடப்பட்ட கடைகளுக்கு வரி வசூலிப்பதாகவும் தெரிவித்தனர். 2002ல் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் நிறைவேறப்படாமல் உள்ளது பற்றியும் கூறினர்.
வியாபாரிகள் பிரச்சனைகள் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீர்க்கப்படும். வர்த்தகர் நல வாரியம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த பொன்முடி ரஜினி கட்சி தொடங்கினால் யாருடைய வாக்குகளையும்; பிரிக்க முடியாது முதலில் அவர் கட்சியை ஆரம்பிக்கட்டும். மற்றது போக போக தெரியும் என்றார்.
பிறகு திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் டெல்லியில்; விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள திருச்சியிலிருந்து ரயில் மூலம் புறப்பட்ட விவசாயிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.