திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மாணவனும்¸ மாணவியும் ராணுவ வீரர்களின் நலனுக்காக உண்டியலில் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை நிதியாக தந்தனர்.
படை வீரர் கொடி நாள்
இந்தியாவில் படை வீரர்களின் நலனுக்காக மக்களிடமிருந்து நிதி சேகரிப்பதற்தகாக அர்ப்பணிக்கப்பட்ட நாள் தான் படை வீரர் கொடி நாள். இந்தியாவில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 7-ம் நாள் முதல் ஆண்டுதோறும் படை வீரர் கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும்¸ இந்தியாவின் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த நாள் நினைவு கூருவதாக பாரம்பரியமாக அமைந்துள்ளது.
முதல் நிதி
டிசம்பர் 7ந் தேதியான இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீரர் நலத் துறை சார்பாக படை வீரர் கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் சந்தீப் நந்தூரி படை வீரர் கொடி நாள் நிதியை உண்டியலில் செலுத்தி மாவட்டத்தில் முதன் முதலாக நிதி வசூலை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த்¸ மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் முன்னாள் கேப்டன் சீ. விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ரூ.47லட்சம் இலக்கு
திருவண்ணாமலை மாவட்டத்தில் படை வீரர் கொடி நாள் நிதி வசூல் கடந்த ஆண்டு ரூ.47 லட்சத்து 53 ஆயிரம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு¸ ரூ.48¸லட்சத்து 43 ஆயிரம் கூடுதலாக இலக்கு எய்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கும் ரூ.47 லட்சத்து 53 ஆயிரம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு வருட சேமிப்பு தொகை
திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி பகுதியில் வசித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி பா.எழில்நிலா (வயது 10) மற்றும் எல்.கே.ஜி. மாணவர் வீ.சபரிவாசன் (வயது 4) ஆகியோர் தங்களது ஒரு ஆண்டு உண்டியல் சேமிப்பு தொகை ரூ.2005ஐ படை வீரர் கொடி நாள் நிதியாக கலெக்டர் அலுவகத்திற்கு நேரில் வருகை புரிந்து¸ கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினார்கள்.
இதற்காக குழந்தைகளின் தேசப்பற்றினை பாராட்டிய கலெக்டர் மாவட்டத்தில் உள்ள அனைவரும் படை வீரர் கொடி நாள் நிதியினை தாராளமாக அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மாணவி எழில்நிலாவின் தாய்¸ தந்தை அவருடன் இல்லாத காரணத்தால் தனது தாய் மாமா ஆர்.வீரமணி வீட்டில் வசித்து வருகிறார். வீரமணி மற்றும் அவரது மனைவி கூலி வேலை செய்து எழில்நிலா மற்றும் அவரது மகன் சபரிவாசனை வளர்த்து¸ படிக்க வைத்து வருகிறார்கள்.
படைவீரர்கள் தியாகம்
எழில்நிலா தெரிவிக்கையில் ‘கடந்த ஒரு ஆண்டாக நானும்¸ சபரிவாசனும் எங்களுக்கு அளிக்கப்படும் செலவு பணத்தை உண்டியலில் சேமித்து வருகிறோம். படை வீரர்கள் பல்வேறு தியாகங்கள் செய்து நமது நாட்டை பாதுகாத்து வருகிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய பங்களிப்பாக இந்த உண்டியல் தொகையை கலெக்டரிடம் வழங்கியுள்ளோம்’ என்றார்.