தமிழகத்தில் அடுத்தது ஆண்டவன் ஆட்சிதான் அமையும் என திருவண்ணாமலைக்கு வந்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசகர் டாக்டர் அமர் பிரசாத் ரெட்டி கூறினார்.
திருவண்ணாமலை அருகே உள்ள தலையாம்பள்ளம் கிராமம் திருவண்ணாமலை சட்டன்ற தொகுதியில் உள்ளது. இந்த கிராமம் திமுகவின் கோட்டையாக விளங்கி வந்தது. இந்நிலையில் அந்த கட்சியலிருந்து பல பேர் விலகி பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். முதன்முதலாக அவர்கள் அனைவரும் இணைந்து கொடியேற்று விழாவை நேற்று நடத்தினர்.
விழாவுக்கு ஒன்றிய செயலாளர் இ.திருநாராயணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சி.அருணாச்சலம் முன்னிலை வகிக்க கிளை தலைவர் எம்.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் கலந்து கொள்ள வந்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசகரும் தேசிய இளைஞர் கவுன்சில் தலைவருமான டாக்டர் எஸ்.அமர்பிரசாத் ரெட்டிக்கு இளைஞர்களும்¸ ஊர் பொதுமக்களும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அந்த கிராமத்தில் உள்ள பா.ஜ.கவின் மூத்த முன்னோடி கணேசன் என்பரது காலில் அமர்பிரசாத் ரெட்டி விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். பிறகு கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அதன் பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதலை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும் டாக்டர் எஸ்.அமர்பிரசாத்ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது¸
கொரோனா தடுப்பூசி இன்னும் ஒரு மாதத்தில் கடைக்கோடி மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைத்திட பிரதமர் மோடி நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார். கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்த போது அதற்கான தடுப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் நான்கு மட்டுமே இங்கு இருந்தது. பிறகு அதிக அளவிலான நிறுவனங்களை பிரதமர் மோடி உபகரணங்களை தயாரிப்பதில் ஈடுபட வைத்தார்.
இதனால் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திறனை இந்தியா அடைந்தது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பு உபகரணங்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டதால் 80 ஆயிரம் குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன.
பாரதிய ஜனதா கட்சியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை.பட்டியலினத்தவரும் உயர் பதவிக்கு வரலாம் என்ற நிலையை பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்தியுள்ளது தமிழ்நாட்டில் அதிமுக, திமுக கட்சிகளின் கொடி பறக்கும் அனைத்து கிராமங்களிலும் இனி பாரதிய ஜனதா கட்சி கொடியும் பறக்கும்.பட்டிதொட்டியெல்லாம் பாரதிய ஜனதா கட்சியை கொடியை இனி பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு அதிமுகவுடன் கூட்டணி குறித்து கேட்டபோது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆண்டவன் ஆட்சிதான் அமையும். தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன. குறிப்பாக உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது சிறப்பானதாகும் என்றார்.
நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கான்¸ தேர்தல் நேரத்தல் சுனாமி ஏற்படுத்துவது ஆண்டவன் கையில் உள்ளது என கூறிவரும் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்ற முழக்கத்தோடு கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அவர் கட்சி தொடங்கும்போது¸ அகில இந்திய தலைமை எப்படி வழிகாட்டுகிறதோ அதன்படி தமிழக பா.ஜ.க. செயல்படும். ரஜினியுடன்¸ பா.ஜ.க. கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும் என பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் அடுத்தது தமிழகத்தில் ஆண்டவன் ஆட்சிதான் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசகர் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
விழாவில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.விஜயன்¸ சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் என்.முகமது யாசீன்¸ தெற்கு மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் ஆர்.மகேஸ்வரி¸ முன்னாள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆர்.வீரமணி¸ ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடேசன்¸ ஒன்றிய பொதுச் செயலாளர் எஸ்.பிரேம்குமார்¸ விவசாய அணி ஒன்றிய பொதுச் செயலாளர் கே.கார்த்திகேயன்¸ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் ஏழுமலை நன்றி கூறினார்.