கைதான சரவணன் |
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தின் போது மனு மீது நடவடிக்கை எடுக்காத விரக்தியில் பொது மக்கள் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
போலீசார் இந்த முயற்சிகளை தடுத்து நிறுத்தி அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து பிறகு விடுவித்து விடுவார்கள். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிப்பு சம்பவங்களை தடுக்க தீ தடுப்பு உபகரணங்களுடன் போலீசார் தயாராக நிறுத்தப்பட்டு இருப்பர்.
பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தின் போது தற்கொலை முயற்சிகள் நடப்பது வழக்கம். இதில் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளது. நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் ஒரே நாளில் 23 பேர் தீக்குளிக்க முயற்சித்தது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போல் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று தீக்குளிக்க முயற்சி நடைபெற்றது. செங்கம் வட்டம் அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெ.சரவணன் என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் உடம்பிலும்¸ தன் உடம்பிலும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதை தடுத்து கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ஏரியில் அவர்களை தண்ணீரில் நனைய வைத்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
முன்னதாக சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பசுமை குடில் அமைக்க வங்கியில் வாங்கிய கடனை கட்டச் சொல்லி வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதால் தீக்குளிக்க முயற்சித்ததாக தெரிவித்தார். புயலால் தரைமட்டமான பசுமை குடிலுக்கான கடனை தள்ளுபடி செய்ய கேட்டு 50க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது சம்மந்தமாக அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பதாவது¸
புதுப்பாளையம் ஒன்றிய தோட்டக்கலை துறை மூலமாக 4000 சதுர அடியில் ரூ. 47 லட்சத்தில் விவசாய பசுமை குடில் அமைத்தேன். அதில் அரசு வழங்கிய ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மானிய தொகை போக மீதமுள்ள ரூபாய்க்கு கனரா வங்கியில் கடன் பெற்றேன். இதற்காக நான் குடியிருந்த வீட்டையும் விற்று விட்டேன். முதல் பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பே கடுமையாக புயல் காற்றால் பசுமை குடில் முழுவதும் சேதமடைந்து விட்டது. ஆதலால் பயிர் எதுவும் சாகுபடி செய்ய முடியவில்லை. வங்கியில் வாங்கிய கடன் தொகையை செலுத்த சொல்லி மிகவும் நெருக்கடி தருகிறார்கள். கடன் செலுத்த இயலாத நிலையில் உள்ளேன்.கடன் தொல்லையால் என் குடும்பமே மிகவும் மன உளைச்சலில் உள்ளோம். இதே நிலை தொடர்ந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் உள்ளேன்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
சரவணன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு எந்த நிலையில் உள்ளது என அதிகாரிகளிடம் விசாரித்த போது இது சம்மந்தமாக செங்கம் தாசில்தார் விசாரணை நடத்தி சரவணன் அமைத்த பசுமை குடில் 29-5-2019 அன்று இரவு வீசிய புயலால் முழுவதுமாக சேதம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர்¸ வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பியுள்ளார் என தெரிவித்தனர்.
இந்நிலையில் தீக்குளிக்க முயன்ற சரவணனை(வயது 42) திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அதிரடியாக கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிப்பதாக தற்கொலை நாடகமாடியதாக தெரிவித்துள்ள போலீசார் மக்களிடையே பயத்தை உண்டாக்கி உயிருக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய வகையில் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிப்பவர்களை எச்சரிக்கும் வகையில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.