திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நெற்றியில் தீப மை அணிந்து பக்தர்களுக்கு நடராஜர் காட்சியளித்தார்.
திருவாதிரை நட்சத்திரம்
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும்¸பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத பௌர்ணமி தினமான திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது
இங்கு சிவ ரூபமாக உள்ள நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறும். இதில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது சிறப்பாகும்.
முத்தொழில் கடவுள்களில் அழித்தல் தொழில் செய்யும் சிவபெருமானின் பெருமையை பக்தர்களுக்கு உணர்த்த ஊழித் தாண்டவம் ஆடும் நடராஜருக்கு இந்நாளில் கருப்பு மை அணிவிப்பது சிறப்பாகும்.
சிவனோடு ஐக்கியம்
கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் ஜோதிச்சுடராக காட்சியளிக்கிறார். அன்றைக்கு சிவபெருமான் அம்மனுக்கு இடப்பாகம் தந்து அர்த்தநாரீஸ்வரராக தனியாக காட்சியளிக்கிறார். அவர் காட்சி தந்த ஜோதி சுடரை ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு மையாக வைக்கப்படுகிறது. அன்றுதான் சக்தி¸ சிவனோடு ஐக்கியமாகிறார். இதனால் இன்றுதான் உலகம் பிரபஞ்சமாகிறது. அதன்பிறகுதான் தை மாதம் தொடங்கி பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி முன்னதாக நேற்று இரவு ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் சிவகாமசுந்திரி சமேத நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. பிறகு இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
வாசனை திரவியங்கள்
யதாஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நடராஜபெருமான் சிவகாம சுந்திரி ஆனந்த நடனமாடி இரண்டாம் பிரகாரத்தையும்¸ மூன்றாம் பிரகாரத்தையும் வலம் வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் ஏழுந்தருளினார். அங்கு சாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடராஜ பெருமானுக்கும்¸ சிவகாம சுந்தரி அம்மாளுக்கும் சந்தனாதி தைலம் ¸பச்சரிசி மாவு¸ அபிஷேகப் பொடி, பால், தயிர், பழ வகைகள், பஞ்சாமிர்தம், விபூதி, பன்னீர், அன்னாபிஷேகம், செஞ்சந்தனம், வில்வ பொடி, இளநீர்,எலுமிச்சை சாறு மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
அண்ணாமலையார் கோவில் ஸ்தானிகம் கந்தன் சிவாச்சாரியார் இந்த சிறப்பு அபிஷேகத்தை நடத்தினார். அதனை தொடர்ந்து புனித கலசத்தில் இருக்கும் நீரை கொண்டு சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
நெற்றியில் திலகம்
பிறகு முக்கிய நிகழ்வாக சாமிக்கு தீப மை வைக்கப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவில் 2668 அடி உயரமுள்ள மலையின் மீது பதினோரு நாட்கள் எரிந்த மகா தீபக் கொப்பரையிலிருந்து சேமிக்கப்பட்ட தீப மை அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அந்த மையுடன்¸ அபிஷேக விபூதி¸ வாசனை திரவியங்கள் சேர்த்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பெரிய பட்டம் ராஜன் சிவாச்சாரியார் தீப மையை நடராஜ பெருமானுக்கும்¸ சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் நெற்றியில் திலகமாக இட்டனர். அதன் பிறகு மகா தீபாராதனை நடந்தது.
மாடவீதியை சுற்றி
நடராஜ பெருமானும்¸சிவகாம சுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்ச கோபுர வழியாக வெளியே வந்து மாடவீதியை சுற்றி வந்தனர். கோயிலுக்குள் தெற்கு திசை நோக்கி நடராஜ பெருமான் வீற்றிருப்பதால் திருமஞ்சன கோபுரம் வழியே நடராஜர் எடுத்து வரப்பட்டார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆருத்ரா தரிசன விழாவில் கோயில் இணை ஆணையர் ஞானசேகர்¸ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்¸ கோட்டாட்சியர் ஸ்ரீதேவி¸ கோவில் கண்காணிப்பாளர் வேதமூர்த்தி¸ மணியம் கோவர்த்தனகிரி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் மகிழ்ச்சி
கொரோனா தொற்று காரணமாக சாமி வீதி உலா வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தீபத் திருவிழாவிலும் சாமி மாட வீதி உலா வராததால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் வேதனையில் இருந்து வந்தனர். இந்நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று ஆருத்ரா தரிசனத்தில் சாமி வீதி உலா வர அனுமதிக்கப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மகிழ்ச்சி பொங்க நடராஜ பெருமானை வழிபட்டனர்.