திருவண்ணாமலை மலைமீது ஏறி தீபத்தை தரிசித்த சஞ்சிதா ஷெட்டி மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலை உச்சயில் மகாதீபம் கடந்த 29ந் தேதி ஏற்றப்பட்டது.
பிரம்மனும்¸ விஷ்ணுவும் இடையே யார் பெரியவர் என்ற மோதலில் அடிமுடி தேடி காண முடியாமல் சிவபெருமானே முழு முதல் கடவுள் என ஏற்றுக் கொண்டு தாம் கண்ட ஜோதியை அனைவருக்கும் காட்டியருள வேண்டும் என விண்ணப்பித்தனர். இதையடுத்து சிவபெருமான் ஜோதி பிழம்பாக தோன்றினார். அந்த நாள் கார்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமாகும்.
இதனால் திருவண்ணாமலை மலை மீது வருடந்தோறும் கார்த்திகை மாதம்¸ கார்த்திகை நட்சத்திரத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்த வருடம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா சாமி ஊர்வலங்கள் அனைத்தும் கோயிலின் பிரகாரத்திலேயே நடைபெற்றது. சாமி உற்சவங்களை பார்க்க பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததோடு மட்டுமன்றி மகாதீபம் ஏற்றப்படும் மலை மீது ஏறவும் தடை விதித்தது.
மலை மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்திட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும்¸ தீபம் எரியும் 11 நாட்களும் இந்த தடை தொடரும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் சினிமா நடிகை சஞ்சிதா ஷெட்டி கடந்த 5ந் தேதி திருவண்ணாமலை மலை மீது ஏறி உச்சிக்கு சென்று மகா தீபத்தை தரிசித்துள்ளார். கொப்பரைக்கு அருகில் எடுக்கப்பட்ட படங்களையும்¸ மலை மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தை தரிசிப்பது போன்ற படத்தையும் அவர் பதிவேற்றியுள்ளார்.
இது பற்றி இன்ஸ்டாகிராமில் படங்களை வெளியிட்டுள்ள அவர் மலையேறியது அதிசயம்¸ மலை உச்சியை அடைய 1 மணி நேரங்கள் 40 நிமிடங்கள் ஆனது. ஆனால் மலை மீதிருந்து இறங்க 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆனது. நடுவில் ஓய்வு எடுத்ததால் இறங்க அதிக நேரமானதாக தெரிவித்துள்ளார்.
தடையை மீறி அவர் மலை மீது ஏறியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மலை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது மலை ஏற வருகிற 9ந் தேதி வரை தடை உள்ளது. தடையை மீறி யார் மலையேறினாலும் அது தவறாகும். விடியற்காலை 4 மணிக்கு நடிகை சஞ்சிதா ஷெட்டி மலையேறி உள்ளார். அதுவும் மலையேறும் பாதையை பயன்படுத்தாமல் வேறு பாதையில் ஏறியுள்ளார். இதனால் அவர் மீதும்¸ அவருடன் மலையேறிவர்கள்¸ மலையேற உதவியாக இருந்தவர் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1000த்திலிருந்து ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. என்றனர்.
சஞ்சிதா ஷெட்டி தடையை மீறி மலையேறியது மட்டுமன்றி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தீபம் பாய்ஸ் அய்யப்பனுக்கு நன்றி என தெரிவித்து அவரையும் வனத்துறையிடம் மாட்டி விட்டுள்ளார்.
சூது கவ்வும்¸ தில்லாலங்கடி¸ பீட்சா 2 போன்ற தமிழ் படங்களிலும்¸ மற்ற கன்னட படங்களிலும் நடித்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி.