திருவண்ணாமலை அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில் மெய்ப்பொருள் நாயனார் குரு பூஜை விழா நடைபெற்றது.
63 நாயன்மார்களில் ஒருவர்
திருக்கோயிலூர் பகுதியை ஆட்சி செய்து வந்த மெய்ப்பொருள் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராவார். இவரது வம்சா வழியினர் திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் வட்டம் சாணிப்பூண்டி கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரம் குரு பூஜை விழாவை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு இந்த குருபூஜை விழா 4வது ஆண்டாக இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 11 மணியளவில் பெருமாநாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு மற்றும் சிவனடியார்களுக்குப் பாத பூஜை நடைபெற்றது. காலை 12.30 மணி அளவில் சிவனடியார்கள் புடைசூழ¸ சிவகணவாத்தியங்கள் முழுங்க மெய்ப்பொருள் நாயனார் திருமேனியுடன் ஆவுடையார் மற்றும் பெரியாயி அம்மன் திருக்கோயில்கள் வழிபாடு நடத்தப்பட்டது.
பக்தர்களுக்குஅருள் ஆசி
பிறகு திருமந்திரங்கள் ஓத விழா மேடையில் நந்தி கொடி ஏற்றப்பட்டு மெய்ப்பொருள் நாயனார் திருமேனி பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. சென்னை சிவலோக திருமடம் குருநாதர் தவத்திரு வாதவூரடிகள் பக்தர்களுக்குஅருள் ஆசி வழங்கினார்.
குரு பூஜைக்கு திருவண்ணாமலை மாவட்டம் பல்லியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற சட்ட ஆலோசகரும்¸ ஜோதிட நிபுணருமான கி.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். எஸ்.பி.கணேசன்¸ இந்திராணி கணேசன்¸ ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் எஸ்.பி. ராமகிருஷ்ணன்¸ தையல்நாயகி ராமகிருஷ்ணன்¸ சாணிப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.பி.சண்முகம்¸ குணசுந்தரி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஓய்வு பெற்ற உதவித் தொடக்க கல்வி அலுவலர் கு.ஜோதிலிங்கம் வரவேற்றார். இந்தியன் ரெட்கிராஸ் சங்க மாவட்ட பொருளாளர் டாக்டர் பாபு கு.ராதாகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.
10¸008 ருத்ராட்ச சிவலிங்க தரிசனம்
சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கோஆப்டெக்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினரும்¸ வடசேரி நாகர்கோவில் நேச நாயனார் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் கு.மகாதேவன் கலந்து கொண்டார்.
மாலை 4-30 மணிக்கு மெய்ப்பொருள் நாயனாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து 10¸008 ருத்ராட்ச சிவலிங்க தரிசனத்துடன் மெய்ப்பொருள் நாயனார் வீதி உலா நடைபெற்றது.
முடிவில் வைப்பூர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வை.சோணாசலம் நன்றி கூறினார்.
குரு பூஜைக்கான ஏற்பாடுகளை மெய்ப் பொருள் நாயனார் திருமரபைச் சேர்ந்த விநாயகமூர்த்தி அடியாரும்¸ தமிழாசிரியை ஜோதி. கலைச்செல்வி¸ பா.ஜ.க. மாநில செயலாளர் ஆர். பிரதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மெய்ப்பொருள் நாயனார் வரலாறு
மலைய மன்னர் என்கிற நத்தமன்னர் மரபில் தோன்றிய தெய்வீகன்¸ மனைவி காஞ்சனமாலைக்கு மகனாக அவதரித்த மெய்ப்பொருள்நாயனார் திருக்கோயிலூரை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்து வந்தார். இவர் சிவ வேடமே சிவ பரம்பொருள் என்ற உறுதியான குறிக்கோளுடன் சிவனடியார்கள் வேண்டுவதை அவர்கள் குறிப்பறிந்து செய்து முடிக்கும் பணியை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தவர்.
சிவனடியார் வேடம் தரித்து
சிவநெறி வழுவாமல் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டி¸ தன் நாட்டின் மீது பலமுறை எதிர்த்து போரிட்ட சமண அரசன் முத்தநாதனை புறமுதுகிட்டு விரட்டினார் மெய்ப்பொருள் நாயனார். பலமுறை தோல்வியை தழுவிய முத்தநாதன்¸ இனிமேல் தன்படை வலிமையினால் மெய்ப்பொருள் நாயனாரை வெற்றி கொள்ள முடியாது என்பதனை உணர்ந்து சூழ்ச்சியுடன் சிவனடியார் வேடம் தரித்து¸ அந்தப்புரம் மெய்க் காப்பாளர் தத்தனிடம் “நான் அரசனுக்கு வீடுபேறு அளிக்கவல்ல உறுதிப்பொருள்களைக் கூறவே வந்திருக்கிறேன் என கூறிக்கொண்டே அரசரின் படுக்கை அறையில் நுழைந்த சிவவேடம் தரித்த வஞ்சகன் முத்தநாதனை¸ மெய்ப்பொருள் நாயனார் எதிர்கொண்டு வரவேற்று சிவநெறியை அறிய ஆவலுடன் மண்டியிட்டு வணங்க¸ அச்சமயத்தில் முத்தநாதன் தன்குறுவாளால் மெய்ப்பொருள் நாயனாரின் முதுகில் குத்திவிட்டான்.
அரசன் ஆணை
இதைக்கண்ட மெய்க்காப்பாளர் தத்தன் அந்த வஞ்சகனை தன் வாளினால் வெட்டியெறிய. முயன்றபோது¸ மெய்ப்பொருள் நாயனார் அவரை தடுத்து தத்தா இவர் நம்மவர் இவரை பாதுகாக்கும் பொறுப்பு நமதே கூறி இவருக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் நமது நகர எல்லையில் கொண்டு விட்டு மீண்டு வா என்று அரசன் ஆணையிட்டான்.
அவ்வாறே தத்தனும் தன்பணியை செய்து முடிக்க. திருக்கோலத்துடன் நடராசப் பெருமான் மெய்ப்பொருள் நாயனாருக்கு காட்சி தந்தருளி¸ விண்ணகத் தேவர்களுக்கும் எட்டாத தமது திருவடி நிழலை மெய்ப்பொருள் நாயனார் அடைந்து தம்மருகிலேயே இடையறாமல் கும்பிட்டுக் கொண்டிருக்கும் பெரும்பேற்றையும் கொடுத்தருளினார் ஈசன்.
தொகுப்பு – எஸ்.ஆர்.வினாயகமூர்த்தி கலைச்செல்வி