திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020ம் ஆண்டு காணாமல் போன 421 பெண்கள் உள்பட 505 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்¸ களவு போன ரூ.1கோடியே 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
தைப்பொங்கல்
திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்த தைப்பொங்கல் விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது¸
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மொத்தம் 101421 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கொரோனா விதிமுறை மீறல் வழக்குகள் 77215 ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு மொத்தம் 27731 வழக்குகள் பதிவாகி இருந்தன
37 கொலை
2019-ம் ஆண்டில் 38 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2020 – ம் ஆண்டு 37 கொலை வழக்குகள் பதிவாகி அதில் 35 கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 78 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு ஆதாயத்திற்காக 3 கொலை வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில்¸ 2020-ம் ஆண்டு 6 ஆதாய கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு¸ அனைத்து வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு¸ களவுபோன 14லட்சத்து 94 ஆயிரத்து 911 மதிப்புள்ள சொத்துக்களில் 14லட்சத்து 71 ஆயிரத்து 111 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு¸ 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கற்பழிப்பு வழக்கு
19 கற்பழிப்பு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு¸ 28 எதிரிகள் கைது செய்யப்பட்டு¸ நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு¸ அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு¸ 119 எதிரிகள் கைது செய்யப்பட்டு¸ நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு¸ அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வன்கொடுமை சட்டத்தின்கீழ் 2019 -ல் 52 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு¸ 88 எதிரிகள் கைது செய்யப்பட்டு¸ நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு¸ 39 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 கோடியே 15 லட்சம்
2020 -ம் ஆண்டு 224 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 206 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. களவு போன 1 கோடியே 55 லட்சத்து 86 ஆயிரத்து 574 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களில் 1 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 761 ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு¸ 297 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2019- ம் ஆண்டு மொத்தம் 100 நபர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் போடப்பட்து. 2020- ம் ஆண்டு கள்ளச் சாராயம்¸ கஞ்சா¸ கொள்ளை¸ மணல் திருட்டு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 138 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் போடப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு காணாமல் போனவர்கள் மீது வந்த 476 புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு¸ தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் காணாமல் போன 61 ஆண்கள்¸ 307 பெண்கள்¸ குழந்தைகளில் 23 ஆண் 114 பெண் என மொத்தம் 505 நபரில் 458 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சி.சி.டி.வி கேமரா
மாவட்டத்தில் திருட்டை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டு திருட்டு வழக்குகள் குறைந்துள்ளன. மேலும் 167 இடங்களில் புதியதாக 571 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2020- ம் ஆண்டில் 218 சாலை விபத்துகள் ஏற்பட்டதில் 236 நபர்கள் இறந்துள்ளனர். 760 சாலை விபத்து வழக்குகளில் 986 நபர்கள் காயமடைந்துள்ளனர். மோட்டார் வாகன வழக்குகளில் 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்தி 740 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 49¸285 நபர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட 1171 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நிவாரண நிதி
2020 -ஆம் ஆண்டு கொலை¸ கொலை முயற்சி மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட 42 நபர்களுக்கு ரூ.31லட்சத்து 85 ஆயிரம் நிவாரண நிதியாக பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 3 கொலை¸ 13 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் உட்பட 16 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ரூ.16 லட்சத்து 29 ஆயிரம் நிதி அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட 94 நபர்களுக்கு ரூ.64 லட்சத்து 72 ஆயிரத்தி 500 பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவி அரசிடமிருந்து பெற்று அளிக்கப்பட்டுள்ளது.
6 பேருக்கு ஆயுள்
மங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை வழக்கில் இளஞ்சிறாருக்கு 1மாத காலம் வேலூர் அரசு மருத்துவமனையில் சமூக சேவை செய்ய தண்டனை பெற்றுதரப்பட்டுள்ளது. இதே போல் கலசபாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளைவழக்கில் இளஞ்சிறாருக்கு 3 மாத காலத்திற்கு வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தினை சுத்தம் செய்யும் பணி தண்டனையாக அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலை வழக்குகளில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.