திருவண்ணாமலையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொரோனா விழிப்புணர்வுக்காக 2555 ஆணி படுக்கையில் படுத்து உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
கொரோனா விழிப்புணர்வு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கிரியா பாபா ஆசிரமத்தில் நேரு யுவகேந்திரா¸ ரோட்டரி கிளப் ஆப் லைட் சிட்டி மற்றும் அகில இந்திய அன்னதர்ம அருட்பணி சேவா அறக்கட்டளை இணைந்து கொரோனா விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சியை இன்று காலை நடத்தியது.
அனைவரையும் ஸ்ரீஅருணானந்தா வரவேற்றார். நிகழச்சிக்கு நேரு யுவகேந்திரா கணக்காளர் கண்ணகி தலைமை தாங்கினார். நேபால் பாபா¸ ஸ்ரீராம கல்யாண ராமன்¸ ஹயாத் பாஷா¸ துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆப் லைட் சிட்டியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் இரா.திலகம் துவக்கி வைத்தார்.
30 நிமிடங்கள்
கொரோனா விழிப்புணர்வு மற்றும் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையிலும்¸ உலக மக்கள்¸ டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் நன்மைக்காகவும் ஆணி படுக்கையில் சாந்தி ஆசனத்தை 41 வயது கொண்ட முன்னாள் ராணுவ வீரர் சுரேஷ்பாபு என்பவர் செய்து காட்டினார். 2555 கூர்மையான ஆணிகள் கொண்ட படுக்கையில் அவர் 30 நிமிடங்கள் படுத்து அசத்தினார். அப்போது அவர் தனது வயிற்றின் மீது பத்மாசன நிலையில் சிறுவனை அமர வைத்து அனைவரது பாராட்டுதலையும் பெற்றார்.
தற்போது கொரோனா தாக்கத்தின் புதிய வடிவம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் தங்களின் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா நோய் பரவலில் இருந்து தற்காத்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்¸ உலக சாதனை முயற்சிக்காகவும் இந்த யோகாசனத்தை செய்ததாக சுரேஷ்பாபு தெரிவித்தார்.
இது குறித்து அவர் நம்மிடம் கூறியதாவது¸
பெரியவர்கள் வரை
எனது சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஆகும். சென்னை பெரும்பாக்கத்தில் எஸ்.ஆர். செக்யூரிட்டி நடத்தி வருகிறேன். ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றேன். கொரோனா ஒழிய யோகாசனம் பெரிதும் உதவுவது தெரிந்து கொண்டு யோகாசனங்களை கற்று செய்து வருகிறேன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய்¸ நொடிகளில் இருந்து காப்பாற்றி கொள்ளவும்¸ உடல் ஆரோக்கியம்¸ மனவலிமை¸ தன்னம்பிக்கை¸ தைரியத்திற்கும் யோகாவை முறையாக கற்று தினமும் செய்வது இக்கால கட்டத்தில் அவசியமான ஒன்றாகும்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு புதுச்சேரியில் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு எந்த நிதியும் வழங்குவதில்லை. அரசியல் கட்சிகளும் எங்களை கண்டு கொள்வதில்லை. தேர்தல் வாக்குறுதியிலும் எங்கள் நலனுக்காக எதையும் அறிவிப்பதில்லை.
30 லட்சம் வாக்குகள்
இதை போக்கிட இந்திய முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவ படைவீரர்கள் நலக்கூட்டமைப்பை ஏற்படுத்தி மாவட்டந்தோறும் கிளைகளை அமைத்து வருகிறேன். பாரதிய முன்னாள் படைவீரர்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளேன். எங்களிடம் 30 லட்சம் வாக்குகள் உள்ளன. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுரேஷ்பாபுவின் சாதனையை பாராட்டி ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாநிதி பரிசு வழங்கினார். ரோட்டரி கிளப் ஆப் லைட் சிட்டியைச் சேர்ந்த டாக்டர் சுபலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் இரா.திலகம்¸ யோகா ஆசிரியர் ஆர்.கல்பனா ஆகியோர் செய்திருந்தனர்.