திருவண்ணாமலை மாவட்டம்¸ கண்ணமங்கலத்தில் கிராம கண்காணிப்பு குழு மூலம் பொருத்தப்பட்ட 120 சிசிடிவி கேமராக்களை வேலூர் சரக டி.ஐ.ஜி தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க 960 தாய் கிராமங்களிலும் கிராம விழிப்புணர்வு குழு(village Vigilance Committee-VVC) ஆரம்பிக்கப்பட்டு¸ கிராம விழிப்புணர்வு குழு பொறுப்பு காவலர்கள் (Village Vigilance Police Officer-VVPO) ஒவ்வொரு கிராமங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காவல்துறை உயரதிகாரிகள் கிராமத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
இத்திட்டத்தின் படி ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் கிராம விழிப்புணர்வு குழு காவலர் தலைமையில் ஒரு வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வாட்ஸ்அப் குழுவில் குறிப்பிட்ட கிராமத்தின்¸ கிராம விழிப்புணர்வு குழு காவலர்¸ கிராம நிர்வாக அலுவலர்¸ அந்த கிராம எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் காவல் காவல் ஆய்வாளர்¸ உதவி ஆய்வாளர்¸ அந்த கிராமத்தின் முக்கிய நபர்கள் மற்றும் பொதுமக்கள் இடம் பெற்று இருப்பார்கள். இந்த வாட்ஸ்அப் குழுவில் தங்கள் கிராமம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதர அரசுத்துறைகள் தொடர்பான தகவல்களை காவல்துறை அதிகாரிகள் மூலம் குறிப்பிட்ட அரசுதுறையின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கிராம விழிப்புணர்வு குழு மூலம் விபத்தில்லா திருவண்ணாமலையை உருவாக்கும் நோக்கில் மாவட்டத்திலுள்ள விபத்து நடக்க வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து¸ தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கிராம விழிப்புணர்வு குழுக்களுக்கு போக்குவரத்து உபகரணங்கள் வழங்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
மேலும் கிராம விழிப்புணர்வு குழு காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில்¸ முதற்கட்டமாக கண்ணமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 48கிராமங்களில் குற்ற செயலை தடுக்கும் விதமாகவும் குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் கிராம தலைவர்கள்¸ பொதுமக்கள் போன்றோர்களின் முயற்சியால் ரூ.20லட்சம் செலவில் 120 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்காக கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கிராமங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் இணைப்பு கொடுக்கப்பட்டு எல்.இ.டி திரைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த கன்ட்ரோல் ரூமை இன்று 15.01.2020-ம் தேதி காலை 11மணிக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி என்.காமினி ரிப்பன் வெட்டியும்¸ குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே குற்றங்களை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டிலேயே இப்பகுதியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து 120 கண்காணிப்பு கேமராக்களை அமைத்துக் கொடுத்ததற்காக கிராம மக்களை பாராட்டுகின்றேன் என குறிப்பிட்டார்.
பிறகு அவர் ஏழை எளியோர்களுக்கு நிலதிட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி.அரவிந்த் டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிராம கண்காணிப்பு குழுக்கள் மூலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.