உயர் மின் கோபுரம் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது சிலர் தரையில் படுத்து அழுது புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் பாதிப்பு
சட்டீஸ்கர் மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து மின் வழித்தடம் செல்வதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கோபுரங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல இடங்களில் இந்த உயர் மின் கோபுரம் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தடுப்புகளை தள்ளி விட்டு
இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று நூற்றுக்கணக்கான விவசாயிகள் வந்தனர். திடீரென கூட்டம் வந்ததால் திகைத்த போலீசார் அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்தனர். இதனால் போலீசாருக்கும்¸ விவசாயிகளுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போதிய போலீசார் இல்லாததால் தடுப்புகளை தள்ளி விட்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் கோஷங்களை எழுப்பியபடி விவசாயிகள் நுழைந்தனர்.
மூடப்பட்ட கலெக்டர் அலுவலகம் |
கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் கலெக்டர் அலுவலகத்தின் கதவுகளை போலீசார் பூட்டினர். அப்போது கலெக்டர் கார் நிறுத்தும் இடத்தில் ஆண்களும்¸ பெண்களும் தரையில் படுத்து அழுது புரண்டனர்.
தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி அவர்களிடம் பேச்சு வார்தை நடத்தினார்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது¸
விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளை பவர்கிரிட் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. விவசாய நிலங்களின் உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி வலுக்கட்டாயமாக அங்குள்ள பயிர்களை அழித்து உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை அவர்கள் செய்து வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வித இழப்பீடு தொகையையும் தரவில்லை. மற்ற மாவட்டங்களில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை கொடுத்துவிட்டு தான் பிறகு தான் உயர்ந்த கோபுரங்கள் அமைத்து வருகின்றனர்.
போலீசார் மிரட்டல்
ஆனால் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் எந்தவித இழப்பீடும் வழங்காமல் உயர் மின் கோபுரங்களை அமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதை தடுத்தால் போலீசாரை கொண்டு எங்களை மிரட்டுகின்றனர். நிலத்தில் மின் கோபுரம் அமைந்துள்ளதால் அந்த நிலத்தை விற்கவும் முடியாமலும்¸ உரிய நஷ்ட ஈடு கிடைக்காமலும் கண்ணீர் சிந்தி வருகிறோம். இதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
எனவே நியாயமான இழப்பீட்டை எங்களுக்கு வழங்கவும்¸ தனியார் நிலங்களில் செல்போன் கோபுரங்கள் அமைத்தால் மாத வாடகை வழங்குவது போல் எங்களுக்கும் மாத வாடகை வழங்க வேண்டும் என கேட்டும் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அநீதி தொடர்ந்தால்
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தோடு இந்த போராட்டமும் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான அநீதி தொடர்ந்தால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் எங்களின் கோபம் அரசுக்கு எதிராக மாறும் என்கின்றனர் போராட்ட குழுவினர்.