Homeசெய்திகள்கோவில் கும்பாபிஷேக பணிகள் தடுத்து நிறுத்தம்

கோவில் கும்பாபிஷேக பணிகள் தடுத்து நிறுத்தம்

கோவில் கும்பாபிஷேக பணிகள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலையில் இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 

திருவண்ணாமலை அய்யங்குள அக்ரஹாரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. 800 வருடங்கள் பழமை வாய்ந்த இக்கோயிலில் 1200 வருடங்களுக்கு முந்தைய பல்லவர் காலத்து 16 பட்டை தீட்டப்பட்ட லிங்கம் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. பிராமணர்கள்¸ சுந்தரேச ஆனந்த சபை என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தி இக்கோயிலை நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் மூலம் இந்த கோயிலில் ஆவணி ஆவிட்டம்¸ தர்ப்பணம் உள்ளிட்ட வைபங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பிரதோஷ பூஜையில் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள். 

இக்கோயில் வளாகத்தில் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஹரி சாமியாரின் சமாதி உள்ளது. இங்கு அவரது ஜெயந்தி விழாவை நடத்துவதற்காக ஹரி ஸ்வாமிகள் பிருந்தாவனம் என ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 42வது சங்கராச்சாரியாரின் சமாதியும் இங்குள்ளதாக கூறப்படுகிறது. நவாப் என்ற மன்னன் தீர்க்க முடியாத தனது நோயை தீர்த்து வைத்த ஹரி சாமியாருக்கு திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தில் 40 ஏக்கர் நிலத்தை தானமாக தந்ததாக சொல்லப்படுகிறது.  

ஹரி சாமியார் மறைவுக்கு பிறகு பவித்திரம் கிராமத்தில் உள்ள நிலத்தை அனுபவித்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அவரது சமாதிக்கு பூஜைகளை செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதை முறையாக பின்பற்றாததால் அந்த நிலத்திற்கான பட்டா ரத்து செய்யப்பட்டது. 

கோவில் கும்பாபிஷேக பணிகள் தடுத்து நிறுத்தம்

இந்நிலையில் அந்த இடத்தில் ஹரி சாமியார் சமாதிக்கு மட்டுமே பூஜைகள் நடைபெற வேண்டும்¸ கோயில் இருக்கக் கூடாது என ஹரி சாமியாரின் வம்சா வழியினர் என கூறிக் கொள்ளும் பிராமணர் வகுப்பைச் சேர்ந்த ஒரு தரப்பினர் தகராறு செய்து வந்தார்கள். இதற்கு கோயிலில் வழிபாடு செய்து வருபவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தகராறு போலீஸ் நிலையம் வரை சென்றது. 

இக்கோயிலுக்கு ஏற்கனவே 3 முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் தாழ்வாக இருப்பதால் நுழைவு வாயிலில் பக்தர்கள் குனிந்து சென்று வரும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து நுழைவு வாயில் மற்றும் பாழடைந்த பகுதிகளை இடித்து விட்டு புதியதாக கட்டி கும்பாபிஷேம் நடத்துவதற்கான திருப்பணிகள் தொடங்கியது. 

இதனால் பூமி பூஜைகள் செய்யவதற்காக பூர்வாங்க பணிகள் செய்ய சுந்தரேச ஆனந்த சபையினரும்¸ அந்த பகுதியில் உள்ள பிராமணர்களும் இன்று காலை கூடினர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் இது கோவில் அல்ல இதில் நீங்கள் திருப்பணிகள் செய்ய கூடாது என கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்தில் இரு தரப்புக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. 

தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தாசில்தார் வெங்கடேசன் மற்றும் வருவாய்துறையினருடன் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார். கோர்ட்டில் வழக்கு நடைபெறுவதால் யாரும் எந்த பணியையும் செய்யக் கூடாது என தடை விதித்தனர். இதனால் இருதரப்பினரும் அங்கிருந்து வெளியேறினர். 

கோவில் கும்பாபிஷேக பணிகள் தடுத்து நிறுத்தம்

சுந்தரேச ஆனந்த சபைக்கு ஆதரவாக வந்த பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் கூறுகையில் ஹரி சாமி மடத்திற்கு நித்ய கைங்கரியம் செய்யாத காரணத்தால் 1990ல் பவித்திரத்தில் உள்ள நிலத்திற்கான பட்டா ரத்து செய்ய்ப்பட்டு விட்டது. பிறகு கலெக்டர் மற்றும் அமைச்சரின் உதவியாளராக இருந்த அரசு அதிகாரி லட்சுமி நாராயணன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருவாய்த்துறை கணக்கில் வாரிசுகளின் பெயர்களை சேர்த்துள்ளார். கோயிலில் இருந்த கேமராக்களை உடைத்து எறிந்து சிமெண்ட மூட்டைகளை திருடி சென்று விட்டது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஆதாரமும் உள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எநத தடை வந்தாலும் திருப்பணியை தொடர்ந்து நடத்துவோம் என்றார்.  

ஹரி சாமி பிருந்தாவன தரப்பு வழக்கறிஞர் மாரி கூறுகையில் ஹரி¸ சத்தியநாராயணன் ஆகியோர் கோயில் என கூறி ஆக்கிரமித்துள்ளனர். வருவாய்த்துறை ஆவணங்களில் பிருந்தாவனம் என்றுதான் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றமும்¸ இந்து சமய அறநிலையத்துறையும் இதைத்தான் கூறியிருக்கின்றன. இது பொது கோயில் இல்லை. இங்கு வழிபடக்கூடிய உரிமை ஹரி சாமியின் வாரிசுகளுக்குதான் உள்ளது. என்றார். 

இந்நிலையில் இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை சமாதானக் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!