திருவண்ணாமலை அடுத்த போளுர் அருகே வெண்மணி என்ற கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி 12 வருடம் ஆகி விட்டதால் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்திட அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதிலமடைந்த கோயில்
திருவண்ணாமலையில் மட்டுமன்றி வெண்மணி என்ற ஊரிலும் ஒரு அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. சிதிலமடைந்த இக்கோயிலை சிவனடியார்கள் சீரமைத்து வழிபாட்டுக்குரியதாக மாற்றியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம் வெண்மணி எனும் அழகிய கிராமத்தில் வயல்களுக்கு மத்தியில் சிற்பவேலைபாடுகளுடன் கூடிய பழமையும் பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோயில் திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், பர்வதமலை மல்லிகாஜுர்னருக்கும், தேவிகாபுரம் கனககிரீஸ்வரருக்கும் மத்தியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புது வஸ்திரம்
இங்கு சிவபெருமான் அம்பாள் அபிதகுஜாம்பாளுடன் அண்ணாமலையார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரை மனதார வேண்டி வணங்கினால் வாழ்வில் நலமும் வளமும் பெறலாம் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாகவே உள்ளது. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து புதுவஸ்திரம் சாற்றுகின்றனர். சிலர் அவரவர் வசதிக்கேற்ப வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
குழந்தை பாக்கியமும், நெய்மொழுகி சாதமும்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் குழந்தை வரம் கிடைத்ததும் பெற்றோர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து மாடவீதியை வலம் வருவது போல் இக்கோயிலும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் செவ்வாய்¸ வெள்ளி கிழமைகளில் அம்மன் சன்னதிகளில் நெய்யை மொழுகி (பரப்பி) அதில் அன்னத்தை வைத்து (சோறு) கலந்து உருட்டி அம்மனை தாயாக நினைத்து மூன்றுமுறை உட்கொண்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் தருவாள் அம்பாள் என்பது இங்குவரும் பக்தர்களின் ஐதீகமாகவே உள்ளது. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் தம்பதிகள் மழலைச்செல்வத்துடன் வந்து சாமியை வணங்கி கரும்பு தொட்டில் கட்டி கோவிலை வலம் வருகின்றனர்.
பின்னர் பொங்கல் வைத்தும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். ஒருசிலர் கோவிலுக்கு வருபவர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர்.
நாடான்ட மன்னர்கள் இறை வழிபாட்டை உணர்த்த குமரி முதல் இமயம் வரை கோவில்களை கட்டினார்கள். கோவில்களில் ஆங்காங்கே பாராயணம் படிக்கப்பட்டது. பல கோவில்களில் பசிப்பினி தீர்க்க தருமசாலைகள் அமைக்கப்பட்டது. இப்படி சிறப்புற்று விளங்கிய கோவில்கள் அனைத்தும் சிதிலமடைந்து மண்மேடாக காட்சி தந்தது. அப்படி அந்நியர்களால் சிதிலமடைந்த கோவில் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சிவனடியார்கள் ஒன்றுசேர்ந்து சிதிலமடைந்த இக்கோவிலை சீரமைத்து வழிபாட்டுக்குரியதாக மாற்றியுள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு சிவனடியார் அண்ணாமலையார் என்று பெயரிட்டு வழக்கத்திற்கு கொண்டு வந்தார். கடந்த 2009ம் ஆண்டு 12 யாக சாலை அமைத்து 4 நாட்கள் சிறப்பு யாகப10ஜை செய்தும் 32 சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஓதியும் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும்¸ பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைவிடம்
திருவண்ணாமலை மாவட்டம் போளுரிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் அனைத்து பேருந்துகளும் வெண்மணியில் நின்றுசெல்லும்.
தொடர்புக்கு
வெண்மணி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் 9345238519
சௌந்தர் குருக்கள் 944034735
செய்தி¸படம் – ப.பரசுராமன்