திருவண்ணாமலையில் நடராஜ பெருமானையும்¸ பன்னிரு திருமுறைகளையும் தலையில் சுமந்து கொண்டு சிவனடியார்கள் 14 கிலோ மீட்டர் தூரம் மலையை சுற்றி வந்தனர்.
உழவாரப்பணி
தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சென்னையைச் சேர்ந்த சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் உழவாரப்பணியை செய்து வருகின்றனர். 2001ம் ஆண்டு முதல் இப்பணியை செய்து வரும் இவர்கள் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி சங்கம் என ஆரம்பித்து சிவத் தொண்டு செய்து வருகின்றனர்.
இச்சங்கத்தினர் ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் நடராஜ பெருமானையும்¸ பன்னிரு திருமுறைகளையும் தலையில் சுமந்து கொண்டு வருவர்.
சிறப்பு பூஜை
இன்று 11ஆண்டாக அவர்கள் கிரிவலம் சென்றனர். இதற்காக காலை 8 மணிக்கு திருவண்ணாமலை ராஜகோபுரம் முன்பு கூடிய அவர்கள் நடராஜ பெருமானுக்கும்¸ பன்னிரு திருமுறை நூல்களுக்கும் சிறப்பு பூஜைகளை செய்தனர். பிறகு ஆண்களும்¸ பெண்களும் அவற்றை தலையில் சுமந்து தேவார¸ திருவாசக திருமுறைகளை பாடிக் கொண்டு கிரிவலம் புறப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி சங்கத்தைச் சேர்ந்த பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். தி.சரவணன் முன்னிலை வகித்தார்.
சிறுவர்கள்
முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அவர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலையை சுற்றி வந்தனர். இதில் சென்னை¸ கடலூர்¸ திண்டிவனம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிவனடியார்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள்¸ வயதான பெரியவர்களும் நடராஜ பெருமானையும்¸ திருஞான சம்மந்தர்¸ திருநாவுக்கரசர்¸ சுந்தரர்¸ மாணிக்கவாசகர் மற்றும் பலர் இயற்றிய பாடல்கள் அடங்கிய பன்னிரு திருமுறை நூல்களையும் தலையில் சுமந்து வந்தனர். கிரிவலம் மீண்டும் ராஜகோபுரம் வந்து முடிவடைந்தது.
இது குறித்து பா.சீனிவாசன் நம் நிருபரிடம் கூறியதாவது¸
பாடல் பெற்ற சிவ தலங்கள்¸ சிதிலமடைந்த கோயில்களில் உழவாரப்பணியை செய்து வருகிறோம். எங்கள் சங்கத்தில் தொழிலதிபர்கள்¸ வழக்கறிஞர்கள் என பல தரப்பினர் இணைந்து சேவையாற்றி வருகின்றனர். திருவண்ணாமலையில் சிவரூபமாக நடராஜர் காட்சியளிக்கிறார்.
தேசப்பற்று
ஆருத்ரா தரிசனத்தன்று மகாதீப மை அவரது நெற்றியில் வைக்கப்பட்டு சக்தி¸ சிவனோடு ஐக்கியமாகிற நிகழ்ச்சி நடைபெறும் சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் தேசப்பற்றும்¸தெய்வீகமும் நம் இருகண்கள் என்பதை உணர்த்தும் வண்ணம் ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையில் குடியரசு தினத்தன்று கிரிவலம் செல்கிறோம். கைலாய வாத்தியம் முழுங்க கிரிவலம் செல்வோம். இம்முறை கொரோனா நோய் காரணமாக இந்த வாத்தியம் முழங்கப்படவில்லை. அடுத்த வருடம் குடியரசு தினத்தன்று மிகச் சிறப்பாக கிரிவலத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.