பட்டு சேலையில் சின்னம் |
திருவண்ணாமலையில் இன்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு சின்னம் பதிக்கப்பட்ட பை¸ பட்டு சேலையினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.
வாகன பேரணி
11-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை இன்று (25.01.2021) மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி பெரியார் சிலை¸ நகராட்சி மத்திய பேருந்து நிலையம் வழியாக ஈசான்ய மைதானத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 200-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் கலந்து கொண்டன.
இதைதொடர்ந்து திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தேசிய வாக்காளர் தின விழா மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்¸ கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பொ. இரத்தினசாமி¸ திருவண்ணாமலை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் மா. ஸ்ரீதேவி¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார்¸ துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதா பேகம்¸ தேர்தல் பிரிவு அலுவலர்கள்¸ ஆசிரியர்கள்¸ மாணவ¸ மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது
அச்சமில்லாமல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் 11-வது தேசிய வாக்காளர் தினம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளம் வாக்காளர்கள் தேர்தல் வந்தால் எப்படி வாக்களிக்க வேண்டும்¸ மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்¸ அச்சமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்காளருக்கு தலைப்பாகை |
மிகப் பெரிய கௌரவம்
இளம் வாக்காளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யதால் மட்டும் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது¸ அனைவரும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமை நிறைவேற்ற வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய கௌரவம் வாக்களிப்பதாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் சராசரியாக 70 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்காமல் பலரும் உள்ளனர். இதில் குறிப்பாக நகராட்சி¸ பேரூராட்சி போன்ற நகரப் பகுதிகளில் வாக்குப் பதிவு சதவிதம் குறைவாக உள்ளது. முதல் முறை வாக்காளர்கள் உட்பட வாக்காளர்கள் அனைவரும் வரும் தேர்தலில் 100 சதவீத வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தல்களின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள் பதிவான வாக்குச் சாடிவகள் கண்டறியப்பட்டு¸ அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெயர்களை சேர்க்க
வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக கல்லூரி தூதர்கள் நியமிக்கப்பட்டு¸ அவர்களுக்கு காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கும் வரை 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் உங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். மேலும்¸ இந்திய தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலமாகவும் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வண்ண வாக்காளர் அட்டை
விழாவில் அவர் படவேடு பகுதியில் வாழைநாரில் செய்யப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு சின்னம் பதிக்கப்பட்ட பை¸ சாவி கொத்து மற்றும் பென் ஸ்டாண்ட் ஆகிய பொருட்ககளை வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கினார். மேலும்¸ தேர்தல் விழிப்புணர்வு சின்னம் பதிக்கப்பட்ட உலக பிரசித்த பெற்ற ஆரணி பட்டு சேலையினை வெளியிட்டு¸ முதல் முறை வாக்காளர்களுக்கு தொப்பி அணிவித்து கௌரவித்து வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கினார். பிறகு மாவட்ட அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முதன்மை மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கை வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
கோலம் மூலம் விழிப்புணர்வு |
பரிசுக் கேடயம்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மருத்துவத் துறையினருக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டி¸ கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வினாடி-வினா¸ கட்டுரை¸ கிரிக்கெட் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும்¸ சிறப்பாக பணியாற்றிய வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுக் கேடயம் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் லாடவரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னம் வடிவில் ஓரிகாமி(ஜப்பானிய கலாச்சாரத்துடன் தொடர்புடைய காகித மடிப்பு கலை) விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டிருந்தது. கோலத்தை பார்வையிட்ட ஆட்சியர் மாணவர்களை பாராட்டினார்.
மொடையூர் சிற்பம்
இதனை தொடர்ந்து¸ அண்ணா நுழைவு வாயில் அருகில் “நமது இலக்கு 100 சதவீத வாக்குப் பதிவு” என்ற தலைப்பில் கிரானைட் கல்லில் அமைக்கப்பட்டிருந்த மொடையூர் சிற்பத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.