Homeஅரசியல்ஸ்டாலின் வருகை சுவாரசியமான தகவல்கள்

ஸ்டாலின் வருகை சுவாரசியமான தகவல்கள்

திருவண்ணாமலைக்கு இன்று ஸ்டாலின் வருகையின் போது நடந்த 2 விஷயங்களை எதிரணியினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

திருவண்ணாமலையில் தொடக்கம் 

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பொது மக்களிடம் மனுக்களை வாங்கும் நிகழ்ச்சியை இன்று திருவண்ணாமலையிலிருந்து ஸ்டாலின் தொடங்கினார். இதற்கான நிகழ்ச்சி திருவண்ணாமலை திருக்கோயிலூர் ரோட்டில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள திமுக மாவட்ட செயலாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது. 

இதையொட்டி மேடை நுழைவு வாயிலில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வாங்கப்பட்டு அதற்கு உரிய ரசீது வழங்கப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் போடப்பட்டு மேடையில் வைக்கப்பட்டது. மேடைக்கு வரும் வழியில் இருபுறங்களிலும் நின்றிருந்த மக்களிடம் கை குலுக்கிய ஸ்டாலின் சிலருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

கவுரவிப்பு 

நிகழ்ச்சி ஆரம்பித்ததும் சாகித்ய அகாடமி விருது பெற்ற மொழி பெயர்ப்பு எழுத்தாளர் ஜெயஸ்ரீ¸ திருவண்ணாமலை இடுகாட்டில் 1200க்கும் மேற்பட்ட சடலங்களை எரித்த கண்ணகி¸ சோலார் இஸ்திரி வண்டியை தயாரித்த மாணவி வினிஷா ஆகியோருக்கு ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது கண்ணகி கொடுத்த கோரிக்கை மனுவையும் பெட்டியில் ஸ்டாலினே போட்டார். 

அதன் பிறகு திருவண்ணாமலை தொகுதியின் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. ஜோதி மார்க்கெட் வியாபாரி ஒருவர் வெளியூர்களில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் ரூ.1600 வாடகை வசூலிக்கப்படும் போது இங்கு ரூ.540 வாடகையை ரூ.9ஆயிரமாக உயர்த்தி விட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் சக்தி பழச்சாறகம் வைத்து நடத்தி வரும் மனோகரன் பேசுகையில் ரூ.3ஆயிரத்து 500ஆக இருந்த வாடகையை ரூ.22ஆயிரம் வரை உயர்த்தி நகராட்சி நிர்வாகம் மனஉளைச்சலை தந்து வருவதாகவும் தெரிவித்தார். 

செங்கம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து தரப்படவில்லை என ஒருவர் ஆதங்கப்பட்டார். ஆட்சி பொறுப்பேற்றதும் 100 நாட்களில் உங்களின் பிரச்சனைகள் தீரும் என அவர்களுக்கு ஸ்டாலின் பதில் அளித்ததும் அதில் இடம் பெற்றிருந்தது. 

அலட்சியம் வேண்டாம்

இதையடுத்து பேசிய ஸ்டாலின் கொடுத்த மனுக்களுக்கு ரசீது வாங்கிக் கொள்ளுங்கள். இந்த ரசீதை அலட்சியமாக நினைக்க வேண்டாம். இதை வைத்து நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம் என்றார். பிறகு பெட்டியில் இருந்த சில மனுக்களை எடுத்து அதில் இருந்த பெயர்களை வாசித்து அவர்களை பேசும்படி கேட்டுக் கொண்டார். திருவண்ணாமலை சோமாவாரக்குளத்தெருவைச் சேர்ந்த அஞ்சலை என்ற பெண் தனது பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாகவும்¸ அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என்றும்¸ தான் ஒரு விதவை என்றும்¸ விதவைக்கான திட்டங்களை நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

கல்வி கடன் ரத்து 

இதையடுத்து ஒரு கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றோம். ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதியை தந்து வெற்றி பெற்று விட்டனர் என தவறான பிரச்சாரத்தை செய்தனர். 

2006 ஆட்சிக்கு முன் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என கலைஞர் சொன்னார். ரூ.7ஆயிரம் கோடி எப்படி தள்ளுபடி செய்யப்படும் என நாங்களே நம்பவில்லை. ஆனால் சொன்னதை செய்தார்¸ சொல்லாததையும் செய்தார். அவரது மகன் நான். எனவே பாராளுமன்ற தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். என்றார். 

செங்கத்தை சேர்ந்த சென்னம்மாள் என்பவர் செங்கம் தொகுதியில் பூ வரத்து அதிகம் என்பதால் பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் வாசனை திரவியங்களை தயாரிக்கும் தொழிற்சாலை தேவை எனவும்¸ இதற்கு நீங்கள் அடிக்கல் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனார். அடிக்கல் மட்டுமல்ல திறப்பு விழாவிற்கே வருவேன் என ஸ்டாலின் பதிலளித்தார். 

அதன் பிறகு சில பேர்கள் பேசினர். இறுதியாக பேசிய ஸ்டாலின்¸ உங்களுக்கும்¸ நாட்டு மக்களுக்கு 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியை திருவண்ணாமலையில் இருந்து தமிழ்நாட்டில் இருக்கிற மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன். திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். 

திமிராய் சொல்கிறேன் 

ராமநாதபுரம்¸ ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்¸ நமக்கு நாமே திட்டம்¸ அண்ணா மறுமலர்ச்சி திட்டம்¸ சமத்துவபுரம்¸ பாலங்கள்¸ ஊரக பகுதிகளில் மின்கட்டணம் குறைப்பு¸ சென்னையை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் திமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. நெஞ்சை நிமிர்த்தி திமிராய் சொல்கிறேன். என் பெயரை இன்றைக்கும் அவை சொல்லும். இத்தகைய வளர்ச்சி மிக்க தமிழகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தொழிற்சாலைகளை உருவாக்குவது ஒரு புறம்¸ தமிழ்குடி மக்களின் கவலைகளை துடைப்பது இன்னொரு புறம். இதை செய்தே  தீருவோம். மக்கள் விரும்பும் அரசாக திமுக அமையும்¸ மனுக்களை பெட்டியில் போடவில்லை. என் முதுகின் மீது ஏற்றி விட்டீர்கள். நம்பிக்கையோடு செல்லுங்கள் என்றார். 

பிறகு மனுக்கள் உள்ள பெட்டியை பூட்டி சாவியை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்ட ஸ்டாலின் அந்த பெட்டிக்கு சீல் வைத்தார். 

துளிகள்…

பெட்டியில் இருந்த மனுக்கள் சிலவற்றை எடுத்து ஸ்டாலின் பெயரை வாசித்த போது அதில் கனிமொழி பெயரில் 2 மனுக்கள் இருந்தன. 

அதில் கலசப்பாக்கத்தைச் சேர்ந்த கனிமொழி பேசுகையில் கலசப்பாக்கத்தில் மகளிர் கல்லூரி அமைத்து தருவேன் என பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றார். 

இதே போல் கலசப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் கூறுகையில் மிருகண்டா அணையை சுற்றுலா தளமாக்குவேன் என்ற வாக்குறுதியை பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ நிறைவேற்றவில்லை என்றார் 

ஒரு கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின் இம்மாவட்ட அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அப்பாவி¸ எதுவுமே செய்ய மாட்டார். கமிஷன் மட்டுமே அவருக்கு போதும். வேளாண் அதிகாரி தற்கொலைக்கு காரணமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை கட்சியை விட்டு நீக்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவரை கட்சியில் சேர்த்து மீண்டும் பதவியை தந்துள்ளனர். இந்த ஆட்சியின் அராஜகத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.

வைரலான விஷயம்

கணவரை கண்டுபிடித்து தரக் கோரி மனு கொடுத்த கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த திருமலை என்ற சகோதரி பேசவும் என ஸ்டாலின் அழைத்த போது கருந்துவாம்பாடியைச் சேர்ந்த திருமலை மைக்கை வாங்கி கறவை மாடு வாங்கித்தருமாறு கேட்டார். 

இதே போல் பாவுப்பட்டைச் சேர்ந்த வாணி என்பவர் கலெக்டராக கந்தசாமி இருந்த போது தனக்கு கொடுத்த இடத்தில் வீடு கட்ட முடியாமல் இருப்பதாகவும்¸ ஊர் மக்களும்¸ அரசாங்கமும் எந்த வித உதவியையும் செய்யவில்லை என்றும் இதனால் தன்னையும்¸ தன் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதற்கு ஸ்டாலின் சரிம்மா¸ நன்றி¸ நன்றி என பதிலளித்தார். 

கணவனா?¸ கறவை மாடா?¸ கருணைக் கொலைக்கு சரி என்று சொன்ன ஸ்டாலின் என இந்த 2 விஷயங்களையும் எதிரணியினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!