தமிழகத்தில் மக்கள் மத்தியிலும்¸ பெண்கள் மத்தியிலும் பாரதிய ஜனதாவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கை காட்டுபவர்தான் முதல்வராக இருப்பார் என்று பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறினார்.
கீழ்பென்னாத்தூர் தொகுதி
வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் அலுவலகத்தை அமைத்து வருகிறது. இதன்படி கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் நேற்று (8-1-2021) திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் அருள்¸ மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார்¸ கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சந்திரசேகர்¸ கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தலைவர் பச்சையப்பன்¸ ஆகியோர் முன்னிலை வகித்தனர்¸
பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் அலுவலகத்தை திறந்து வைத்தார். பிறகு அவர் வேளானந்தல்¸ கோணலூர்¸ சாணிப்பூண்டி¸ ராஜந்தாங்கள்¸ ஆவூர்¸ ஓலைப்பாடி¸ அணுகுமலை மற்றும் வேட்டவலம் ஆகிய ஊர்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிகளில் அவர் பேசியதாவது¸
தேர்தல் பிரச்சாரத்தில் மோடி
இன்னும் 4 மாதத்தில் பா.ஜ.க சட்டமன்றத்தில் நுழைவதற்கு நீங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பாரத பிரதமர் மோடியை தேர்தல் பிரச்சாரத்திற்காக அழைத்து வரும் எண்ணம் உள்ளது. விவசாய திட்டங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் திமுக அறிவித்த பந்த் பிசுபிசுத்துள்ளது. ஆளும் கட்சியாக வர போகிறோம் என சொன்னவருக்கு ஆதரவு இல்லாமல் போய் விட்டது. இத்தனை ஆண்டு காலம் விவசாயிகள் என்ன கோரிக்கை வைத்தார்களோ அதைத் தான் மோடி கொண்டு வந்துள்ளார்.
மக்கள் மத்தியில் வரவேற்பு
முன்பெல்லாம் நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இடைத்தரகர்கள் பயனடைந்தனர். மோடி டெல்லியிலிருந்து நமக்கு பணம் தருகிறார். நீங்கள் உழைக்கிறீர்கள். அரசு பணம் தருகிறது. இதற்கு முன்பு எந்த பணத்தையும் உங்கள் கண்ணில் காட்டியதில்லை. 5¸6 வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு வங்கி கணக்கு என்பது இல்லாமல் இருந்தது. இப்போது சாதாரண நபர்களும் வங்கி கணக்கு ஆரம்பிக்க மோடி வழிவகை செய்துள்ளார். 100 ரூபாய் கொடுத்தால் அது உழைக்கிற மக்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும்¸ நடுவில் கொள்ளையடிக்கிறவங்க இருக்க கூடாது என நினைத்து தான் வங்கி கணக்கை ஆரம்பித்து தந்துள்ளார்.
கொரோனா காலத்திலும் அரிசி¸ எண்ணெய்¸ பருப்பு என தீபாவளி வரை மோடிதான் தந்தார். உங்களுக்காக ஒரு நாளைக்கு 18 லிருந்து 20 மணி நேரம் வரை உழைக்கிற அவரது உடல் நலம் நன்றாக இருக்க உங்கள் குல தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.
மோடி ஆட்சி சிறப்பாக உள்ளதால் மக்கள் மத்தியிலும்¸ பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. வருகின்ற தேர்தலில் தமிழகத்தில் நாம் யாரை கை காட்டுகிறோமோ அவர்தான் முதல்வர். அந்த அளவிற்கு பாரதிய ஜனதா கட்சி சிறப்பாக வளர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக தலைமையில்தான் கூட்;டணி அமையும்¸ எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என அதிமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்து விட்ட நிலையில் பா.ஜ.க இதை ஏற்றுக் கொண்டதாக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. சமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி முதல்வர் வேட்பாளர் யார் என்பது தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் கே.டி.ராகவனும் நாங்கள் கைகாட்டுபவர்தான் முதல்வர் என்பதை கூறியிருக்கிறார்.
பா.ஜ.க சுறுசுறுப்பு
தேர்தல் பணிகளை பா.ஜ.க பல மாதங்களுக்கு முன்பே துவக்கி விட்டது. பூத் கமிட்டிகளை வலுவாக அமைத்து வருகிறது. திருவண்ணாமலை உள்பட 60 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இத் தொகுதிகளில் அடிக்கடி விசிட் செய்து கட்சி பணிகளை பலப்படுத்தி வருகிறார்.
சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக எப்போதும் தயாராக உள்ளது. தனியாக போட்டியிட்டாலும் 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த தொகுதிகள் எவை¸ எவை என்பதை கண்டறிந்து விட்டோம். அந்த தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி கட்சி பணியை முடுக்கி விட்டுள்ளோம் என அவர் ஏற்கனவே நிருபர்களிடம் தெரிவித்திருந்தார். அதன்படி அதிமுக¸ திமுகவை முந்திக் கொண்டு சட்டமன்ற அலுவலங்களை பா.ஜ.க திறந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாநில தலைவர் வருகை
இந்நிலையில் வெற்றிவேல் ரத யாத்திரைக்கு பிறகு 2வது முறையாக பா.ஜ.க மாநில தலைவர் முருகன் திருவண்ணாமலைக்கு வருகிற 19ந் தேதி வருகை தர உள்ளார். பா.ஜ.க பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒவ்வொரு அணிகளின் நிர்வாகிகள்¸ பிரிவு நிர்வாகிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.