கட்லா¸ ரோகு உள்ளிட்ட புரத சத்து மிகுந்த 2 லட்சம் மீன்கள் திருவண்ணாமலை உள்பட 7 ஏரிகளில் வளர்க்கும் திட்டம் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது.
மீன் உற்பத்தி
2020-2021 ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின்படி தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி குளங்கள் மற்றும் ஏரிகளில் நன்கு வளர்ந்த மீன்குஞ்சுகள் இருப்பு செய்து¸ அதன் மூலம் மாவட்டத்தின் மீன் உற்பத்தியை பெருக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் ஏரி¸ குளங்கள் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.31 கோடியில் 59 ஏரிகளில் பொதுப்பணித்துறை மூலம் புனரமைக்கப்பட்டதால் தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக ஏரிகள் நிரம்பியுள்ளன. இதே போல் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் நிரம்பி உள்ளது. இதை பயன்படுத்தி ஏரி¸ குளங்களில் மீன் வளர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
2 லட்சம் மீன்கள்
இதன்படி¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளத் துறை மூலம் 40 ஹெக்டேர் பரப்பிற்கு, ஒரு ஹெக்டேருக்கு 5000 எண்ணம் வீதம் மொத்தம் 2¸00¸000 எண்ணிக்கையிலான நன்கு வளர்ந்த இந்திய பெருண்கண்டை ரகம் கட்லா¸ ரோகு¸ மிர்கால் ஆகிய மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டம் இன்று (04.01.2021) ஆரணி ஊராட்சி¸ ஒன்றியம்¸ சேவூர் ஊராட்சி¸ இரகுநாதபுரம் ஏரியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில்¸ இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் வ. க. கங்காதரன்¸ அரசு அலுவலர்கள்¸ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்¸ கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள்¸ மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள்¸ உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த 7 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை கீழ்நாத்தூர் ஏரியில் 90 ஆயிரமும்¸ எடப்பாளையம் விண்ணமலை ஏரியில் 20 ஆயிரமும்¸ கீழ்அணைக்கரை கரியான்செட்டி ஏரியில் 5 ஆயிரமும்¸ சேத்துப்பட்டு வட்டத்தில் மரக்குணம் கிராம குளத்தில் 2 ஆயிரமும்¸ வந்தவாசி வட்டத்தில் அரியப்பாடி குளத்தில் 5 ஆயிரம் மீன்களும்¸ வல்லம் குளத்தில் 3 ஆயிரம் மீன்களும்¸ ஆரணி வட்டம் ரகுநாதபுரம் ஏரியில் 75 ஆயிரமும் மீன் குஞ்சுகளும் வளர்க்கப்படுகிறது.
நியாயமான விலையில்
ஊராட்சிகளின் வருவாய் அதிகப்படுத்திடவும்¸ கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உருவாக்கி சமூக பொருளாதார நிலை மேம்பாடு அடையவும் மற்றும் புரத சத்து மிகுந்த மீன் உணவு நியாயமான விலையில் பொது மக்களுக்கு கிடைத்திடவும் இத்திட்டம் வழி வகுக்கும் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.