அண்ணாமலையார் கோயிலில் தை மாத பிறப்பை வரவேற்கும் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
சூரியன்¸ சந்திரன்
வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சூரியன்¸ சந்திரன்¸ பிரதத்தராசன். அஷ்டவசுக்கள். பிரமதேவன்¸ திருமால்¸ புளகாதிபன் முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற சிறப்புடையது. இத்தலத்தில் நடைபெறும் ஒவ்வொரு அபிஷேகங்களும்¸ ஆராதனைகளும் மற்ற எல்லா திருத்தலங்களிலும் நடைபெற்றதற்கு ஒப்பாகும்¸ என அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
12 மாதங்களும்
மேலும் இங்கு நடைபெறும் விழாக்கள் தனிச் சிறப்புடையவனவாகும். இக்கோயிலில் தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களும் கிரகங்களின் சஞ்சாரங்களை கொண்டு பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இந்த விழாக்களில் பங்கு பெரும் பெரிய திருவுருவங்கள்¸ அதற்கேற்ப வாகனங்கள்¸ அலங்காரங்களை பார்த்தவுடனே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
தட்சிணாயன புண்ணிய காலம்¸ உத்தராயண புண்ணிய காலம்¸ திருக்கார்த்திகை தீபம் ஆகிய 3 திருவிழாக்களுக்கு அண்ணாமலையார் சந்நதியில் உள்ள தங்கக்கொடி மரத்திலும்¸ ஆடிப்பூரத்தில் உண்ணாமலையம்மன் சந்நதியில் உள்ள தங்க கொடிமரத்திலும் கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம்.
வடக்கு நோக்கி
12 மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலமாகவும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமாக ஆகம நூல்கள் கூறுகிறது. தெற்கு நோக்கி நகரும் காலத்தை தட்சாயண புண்ணிய காலம் என்றும் வடக்கு நோக்கி நகரும் காலத்தை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. வடக்கு நோக்கி நகரும் காலத்தை வேதநூல்கள் சிறப்பான காலம் என்று கூறுகிறது.
மகாபாரத கதையின்படி அம்பு படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் மகர மாதம் என்று அழைக்கப்படும். தை மாதம்தான் உயிர்நீத்தார் என்று கூறகிறது. மேலும் தை மாதம் முதல் நாள் மகர மாதப்பிறப்பின்போதுதான் தமிழ்நாட்டில் தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. சபரிமலையில் மகர ஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர். மேலும் இந்த காலத்தில்தான் சூரியன் உக்கிரம் (வெயில்தாக்கம்) தொடங்குகிறது.
அபிஷேக ஆராதனை
உத்தராயண புண்ணியகாலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அண்ணாமலையார் கோயிலில் விழா நடைபெறும் . அதன்படி உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
அதன் பின்னர் தங்க கொடி மரம் அருகே அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் எழுந்தருள¸ வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள 72 அடி உயர தங்கக் கொடி மரத்தில் காலை 7.35 மணிக்கு சிவாச்சாரியார்கள் கார்த்திகேயன்¸ பி.டி.ரமேஷ்¸ சுதர்சன்¸ கீர்த்திவாசன் ஆகியோர் கொடியேற்றினர்.
அண்ணாமலையார் கிரிவலம்
அப்போது கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தையடுத்து விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 10 நாட்கள் தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் வலம் வருவர். 10 ஆம் நாளான தை மாதம் முதல் தேதி (ஜனவரி 14) தாமரை குளத்தில் தீர்த்தவாரியோடு இவ்விழா நிறைவு பெறும்.
மறுநாள் 15.01.2021 அன்று திருவூடல் உற்சவம் நடக்கிறது. அன்றிரவு சுவாமி மலை சுற்றி கிரிவலம் வருகிறார். 16.01.2021 அன்று கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் மறுவூடல் உற்சவம் நடைபெகிறது.