மத்திய மற்றும் மாநில அரசுகளினால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட தேளி மீன்¸ அணை மீன்¸ பெரிய கெளுத்தி மீன் எனப்பபடும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது.
மீன்களை வேட்டையாடி
இம்மீன்களானது காற்று சுவாச மீன்களாகும். இம்மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை . மேலும் இவை எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவை. இதனால் இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால் அவைகளை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும் இம்மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனம்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட மீன்களாகும்.
இம்மீன்கள் நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும் அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயநிலை உருவாகும்.
தப்பிச் செல்லும்
இந்த மீன்களை பண்ணைகுட்டைகளிலோ அல்லது மீன்வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால் இவை மழை மற்றும் வெள்ள பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்பு உள்ளது. அங்ஙனம் தப்பிச் செல்லும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பு இல்லாத நிலை உருவாகும். இதன் பொருட்டு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நமது உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் வழி இல்லாமல் போய்விடும்.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் விவசாயிகள் அரசால் தடை செய்யப்பட்ட கொடூரமான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம் எனவும் ஏற்கனவே மீன் பண்ணைகளில் இவ்வின மீன்களை வளர்த்து வரும் மீன்வளர்ப்போர்கள் மீன்பண்ணையில் வளர்ந்து வரும் மீன்களை அழிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நடவடிக்கை
இவ்வறிப்பினை மீறி மீன்வளர்ப்போர்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகளினால் தடைசெய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் பெறப்படின் அம்மீன்களை முற்றிலும் அழித்திட வேண்டி அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மீன் வளர்ப்போருக்கும்¸ மீன் விற்பனை செய்வோருக்கும் இதன்மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது.
அறிவிப்பை மீறி மீன்வளர்ப்பு மற்றும் விற்பனை மேற்கொள்ளப்படின் மீன்துறை¸ வருவாய்துறை மற்றும் காவல்துறை ஒத்துழைப்புடன் அம் மீன்பண்ணைகள்¸ மீன்கள் அழிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொது மக்களும் இவ்வகை மீன்களை கொள்முதல் செய்திடாமல் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிக்கையில் தெரிவித்துளார்.