![]() |
கோயிலில் மறுஊடல் |
ஊடல்¸கூடல் மனித வாழ்வில் உண்டு என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் திருவண்ணாமலையில் திருவூடல் விழா நடைபெற்றது. கிரிவலம் சென்று பிருங்கி மகரிஷிக்கு வரம் தந்த அண்ணாமலையாருக்கும்¸ அம்பாளுக்கும் மறுஊடல் நடந்தது.
நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்தபடியாக பெரிய விழாவாக திருவூடல்¸ மறு ஊடல் உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
தை மாதம் இரண்டாம் நாளான நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு மாடவீதிகளில் மூன்று முறை வலம் வந்த அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மற்றும் பராசக்தி அம்மன் மாலை 7 மணிக்கு திருவுடல் வீதியில் கோசு கோட்டி நடனம் ஆடியபடி ஊடல் கொண்டனர்.
குமரக்கோயில்
அண்ணாமலையாரை மட்டும் வணங்கி வந்த பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளிக்க அண்ணாமலையார் சென்றதால் கோபம் கொண்ட உண்ணாமலையம்மன் ஊடல் கொண்டு திருமஞ்சன கோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்றார். சுந்தரமூர்த்தி நாயனார் சமாதானப்படுத்தும் விதமாக அண்ணாமலையாருடன் இருந்தார். ஆனாலும் தன்னை வணங்கி வந்த பிருங்கி மகரிஷிக்கு கிரிவலம் சென்று காட்சி அளிக்க அண்ணாமலையார் தனது மகன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள குமரக் கோவிலுக்கு சென்று இரவு தங்கினார்.
![]() |
குமரக்கோயிலில் அபிஷேகம் |
அங்கு சாமிக்கு பச்சரிசி மாவு,அபிஷேக பொடி,பால், தயிர், இளநீர் கரும்புச்சாறு. சந்தனம், விபூதி,பஞ்சாமிர்தம், தேன், பூக்கள், எலுமிச்சைச்சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிவனடியார்கள் மெய்யுருகி சிவ பக்தி பாடலை பாடியபடி சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுக்கு இருமுறை
இதையடுத்து இன்று காலை அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
ஆண்டுக்கு இருமுறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்த மறுதினம் கிரிவலத்தின் பெருமையை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் குடும்பத்துடன் கிரிவலம் வருவார். தை மாதம் மூன்றாம் நாள் பிருங்கி மகரிஷிக்கு வரம் அளிப்பதற்காக அண்ணாமலையார் மட்டும் தனியாக கிரிவலம் செல்வார்.
மறு ஊடல்
அதன்படி இன்று பிருங்கி மகரிஷிக்கு வரமளிக்க கிரிவலம் வந்த அண்ணாமலையாரை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கிரிவலப்பாதையில் பழனி ஆண்டவர் சன்னதியில் உள்ள பிருங்கி மகரிஷிக்கு வரமளித்து விட்டு 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
![]() |
பிருங்கி மகரிஷிக்கு வரம் |
பிறகு இன்று மாலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள 2வது பிரகாரத்தில் அண்ணாமலையாருக்கும் – அம்பாளுக்கும் மறு ஊடல் நடைபெற்றது.
தீர்த்தவாரி ரத்து
இதையடுத்து தை மாதம் 5ம் நாள் அண்ணாமலையாருக்கு மணலூர் பேட்டை தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆற்று திருவிழாவுக்கு தடை விதித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே மணலூர்பேட்டையில் நடைபெறும் தென்பெண்ணையாற்று தீர்த்தவாரியில் அண்ணாமலையார் தரிசனம் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.