துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மாவட்ட செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியையும்¸ தன்னையும் அதிமுக ஒன்றிய செயலாளர் மிரட்டுவதாக மற்றொரு ஒன்றிய செயலாளர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் அதிக அளவு மலைவாழ் மக்கள் வசித்;து வருகின்றனர். சமீபத்தில் இந்த ஒன்றியத்தை அதிமுக¸ கழக வளர்ச்சிப் பணிக்காக வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாக பிரித்தது. ஒருங்கிணைந்த ஜமுனாமரத்தூர் ஒன்றிய செயலாளராக இருந்த வெள்ளையன்¸ வடக்கு ஒன்றிய கழக செயலாளராகவும்¸ தெற்கு ஒன்றிய கழக செயலாளராக எம்.சி.அசோக் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்லாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த எம்.சி.அசோக்¸ ஜமுனாமரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார். சிறப்பாக செயல்பட்டதற்காக இவர் அப்துல் கலாமிடம் விருதை பெற்றுள்ளார். இவரது மனைவியும் 5 ஆண்டுகள் ஊராட்சி மன்றத் தலைவராக பணிபுரிந்து தீண்டாமை மற்றும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்க காரணமாக இருந்ததற்காக அரசின் விருதை பெற்றுள்ளார்.
இந்நிலையில் 11 ஊராட்சிகளையே கொண்ட ஜமுனாமரத்தூரை 2 ஆக பிரித்தற்கு வெள்ளையனும்¸ அவரது ஆதரவு ஆட்களும் எதிர்ப்பு தெரிவித்து தலைமை கழகத்திற்கு நேரில் சென்று இதுபற்றி புகார் அளித்தனர்.
![]() |
வெள்ளையன் |
இந்நிலையில் ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட அசோக்கை கட்சி பணியாற்ற விடாமல் வெள்ளையனும்¸ அவரது ஆட்களும் பல்வேறு இடையூறுகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக சொல்லப்படுகிறது.
இதனால் வேதனை அடைந்த ஒன்றிய செயலாளர் அசோக் இன்று ஜமுனாமரத்தூரிலிருந்து அதிமுக மூத்த நிர்வாகிகள்¸ மகளிரணியினர்¸ இளைஞரணியினர் என 200க்கும் மேற்பட்டோரை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது¸
நான் இந்து – வன்னியராக இருந்தாலும்¸ எனது மூத்த மகனுக்கு பழங்குடியின (எஸ்.டி) மலைவாழ் பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளேன். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க செயலாளர்¸ அக்ரி. கிருஷ்ணமூர்த்தி பரிந்துரையின் பேரில் ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளராக தமிழக முதலமைச்சர்¸ துணை முதலமைச்சர் ஆகியோர்களால் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறேன்.
அது முதல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்¸ ஜமுனாமரத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பெருங்காட்டுர் – வெள்ளையன்¸ புலியூர் – கோவிந்தராஜி¸ மேல்சிலம்படி சங்கர்¸ பெருமுட்டம் காளி¸ பண்ரேவ் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தூண்டுதலின் பேரில் மாவட்ட கழக செயலாளரையும்¸ என்னையும் ஜாதியை சொல்லியும்¸ பணம் பெற்றுக்கொண்டு பதவி வழங்கியதாகவும் சமூக வலைதளங்களில் தவறான அவதூறு பரப்பி வருகின்றனர்.
அத்துடன் மாவட்ட கழக செயலாளர் மற்றும் என்னையும் ஜமுனாமரத்தூருக்கோ¸ ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய பகுத்திக்குள்ளே நுழைந்தால் கையை அல்லது கால்களை வெட்டுவோம் என மிரட்டுவதுடன் துப்பாக்கியால் சுட்டுவிடுவோம் எனவும் மிரட்டுகின்றனர் இவர்களது வீடுகளில் வனவிலங்கு வேட்டைக்கு பயன்படும் கள்ளத்துப்பாக்கி உள்ளதாக தகவல். எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் அசோக் கூறியுள்ளார்.
மேலும் ஐம்பொன் சிலை விற்பனைக்காக போலீசிடம் சிக்கிய போது தன் மகனை மாட்ட விட்டு தப்பித்து விட்டார்¸ இவரும்¸ இவரது மகனும் தென்மலை காப்புக்காடு மேல்பட்டு வனப்பகுதியில் மான்வேட்டையாடியபோது மான் கறியோடும்¸ கள்ளத்துப்பாக்கியோடும் கையும்¸ களவுமாக பிடிபட்டு தனது ஒன்றிய செயலாளர் பதவியை பயன்படுத்தி மகன் பெயரில் மட்டும் வழக்கு பதிவுசெய்து விட்டு தப்பித்துவிட்டார்¸ ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட கூலியாட்களை அனுப்பிடும் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார்¸ திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் இராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டி சிறை சென்றவர் என வெள்ளையன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபற்றி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வெள்ளையனிடம் கேட்டதற்கு என் மீது பொய்யாக குற்றச்சாட்டுகளை கூறி புகார் அளித்துள்ளனர். அசோக்கை ஊருக்குள் வரக்கூடாது என ஊராட்சி மன்றத் தலைவர்களும்¸ கவுன்சிலர்களும் கூறி வருகின்றனர். எனவே மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவரை ஒன்றிய செயலாளராக நியமிக்க கோரி முதல்வரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கலசப்பாக்கம் தொகுதியிலும்¸ ஜமுனாமரத்தூர் ஒன்றியத்திலும் அதிமுகவினரிடையே கோஷ்டிப் பூசல் அதிகரித்திருப்பது எதிர்கட்சியினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.