அடிதடி வழக்கில் கைது செய்ததற்காக¸ பழிவாங்கும் நோக்கில் சப்-இன்ஸ்பெக்டரின் இருசக்கர வாகனத்தை எரித்த ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அடிதடி வழக்கு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா¸ மழையூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராமச்சந்திரன் (வயது 53). ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் நடந்த அடிதடி வழக்கில் இவரை வட வணக்கம்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிறகு ராமச்சந்திரன் ஜாமினில் வெளியே வந்தார். தன்னை ஜெயிலில் அடைத்த போலீசாரை பழிவாங்க முடிவு செய்து வட வணக்கம்பாடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த போலீஸ்காரர் செந்தில்குமாரை பார்த்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
பெட்ரோல் ஊற்றி
பிறகு ஆத்திரம் தலைக்கேறி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் என்பவரின் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தாராம். இதில் பைக் தீ பற்றி எரிந்தது. அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். ராமச்சந்திரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீண்டும் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
வேலூர் ஜெயில்
அதன் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ ராமச்சந்திரனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.