திருவண்ணாமலையில் உதவி பேராசிரியை கொலை வழக்கில் திருநங்கை உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
திருவண்ணாமலை நாவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(வயது 50). கணவர் பெயர் விமல்ராஜ். ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். கிருஷ்ணவேணி திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் பிரிவில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த கிருஷ்ணவேணி 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ந் தேதி நகை மற்றும் பணத்திற்காக மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நொச்சிமலை பகுதியைச் சேர்ந்த ஜெய் (எ) கதிரவன்¸ மூன்றாம் பாலினத்தவரான ஜீவா என்கிற ஜீவானந்தம் (திருநங்கை) மற்றும் 2 சிறார்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கிருஷ்ணவேணியின் தம்பி ஜெயவேல் திருவண்ணாமலையில் வழக்கறிஞராக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை விழப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என ஜெய்யும்¸ ஜீவாவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து கிருஷ்ணவேணியின் கொலை வழக்கை 3மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெய் என்கின்ற கதிரவன் மற்றும் ஜீவா என்கின்ற ஜீவானந்தம் (மூன்றாம் பாலினத்தவர்) ஆகிய இருவருக்கும் ஆறு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனை மற்றும் இருவருக்கும் தலா ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்தும்¸ அபராத தொகை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி மு.காயத்ரி உத்தரவிட்டார்.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவரான ஜீவா¸ திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சரின் உறவினருக்கு சொந்தமான சிட்பண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.