திருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
2வது ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (09.01.2021) சென்னை மண்டல இராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக திருவண்ணாமலை வட்டம்¸ அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 10.02.2021 முதல் 26.02.2021 வரை நடைபெறும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த 2வது ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்¸ சென்னை இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் கௌரவ் சேத்தி¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த்¸ மாவட்ட வருவாய் அலுவலர் பொ. இரத்தினசாமி¸ கோட்டாட்சியர் ம. ஸ்ரீதேவி¸ முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் முன்னாள் சீ. விஜயகுமார்¸ பயிற்சி துணை ஆட்சியர் அஜீதா பேகம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பிறகு கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸
அனுமதி அட்டை
திருவண்ணாமலையில் வரும் 10.02.2021 முதல் 26.02.2021 வரை திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிருந்து விண்ணப்பித்துள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள், அவர்களுக்கான அனுமதி அட்டையை (Admit Card) ஜனவரி 25-ம் தேதி முதல் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும்¸ ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுமதி அட்டை அனுப்பப்படும்.
இலவச பரிசோதனை
தமிழ்நாடு அரசின் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகாமில் கலந்து கொள்வதற்கு தினமும் 2ஆயிரம் நபர்கள் அனுமதிக்கபடுவார்கள்¸ 500 நபர்களாக பிரிக்கப்பட்டு ஒட்டப்பந்தயம் தேர்வு நடைபெறும். இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் 4 நாட்களுக்கு முன்பு கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவு சான்றிதழ்¸ அனுமதி அட்டையுடன் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் அரசு மருத்துவமனைகள்¸ ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளலாம்.
போலீசில் புகார்
முகாம் நடைபெறும் கல்லூரிக்கு தேவையான போக்குவரத்து வசதி¸ குறைந்த விலையில் உணவகம்¸ தடையில்லா மின்சாரம்¸ குடிநீர்¸ கழிப்பறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவது குறித்தும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது¸ இதில் பங்கேற்கும் இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் அப்படி யாராவது இடைத்தரகர்கள்¸ தனி நபர்கள் வேலை வாங்கித் தருகிறோம் என அணுகினால் உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். இதற்கான விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலமாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில் தமிழகத்தில் உள்ள சென்னை¸ திருவள்ளுர்¸ செங்கல்பட்டு¸ காஞ்சிபுரம்¸ இராணிப்பேட்டை¸ வேலூர்¸ திருப்பத்தூர்¸ திருவண்ணாமலை¸ கள்ளக்குறிச்சி¸ விழுப்புரம்¸ கடலூர் ஆகிய 11 மாவட்டங்களிலிருந்தும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்தும்¸ கடந்த ஆண்டு 01.03.2020 முதல் 31.03.2020 வரை நடைபெற்ற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுவார்கள்.
நுழைவுத் தேர்வு விவரம்
விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்¸ பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்¸ குடியுரிமை¸ சாதி மற்றும் பிறப்பு ஆகிய சான்றிதழ்கள்¸ அசல் மற்றும் நகலுடன் முகாம் நடைபெறும் நாள் அன்று கொண்டு வரவேண்டும். இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இதில்¸ 1.6 கி.மீ. தூரம் ஒட்டப்பந்தயம்¸ 9-அடி கால்வாய் தாவுதல் (Ditch Jump)¸ Pull Ups> Zig-Zag Balance ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும். இதனை தொடர்ந்து உடல் அளவீடுகளுக்கான தேர்வு (Physical Measurement Test) மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தகுதி பெறுபவர்கள் சென்னை மண்டல இராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் மூலம் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வில் (Common Entrance Examination) கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இத்தேர்வு குறித்த தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். இதர விவரங்கள் குறித்த தகவல்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் 25.01.2021 முதல் வெளியிடப்படும். மேலும்¸ ஆன்லைனில் விண்ணப்பத்தவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 044 – 25674924¸ 25674925 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.