Homeஅரசியல்திமுக சேர்மன் அறையை புதுப்பிக்க ரூ.9 லட்சம் செலவு

திமுக சேர்மன் அறையை புதுப்பிக்க ரூ.9 லட்சம் செலவு

திமுக சேர்மன் அறையை புதுப்பிக்க ரூ.9 லட்சம் செலவு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய சேர்மன் அலுவலகத்தை புதுப்பிக்க ரூ.9 லட்சம் செலவிடப்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

69 ஊராட்சிகளைக் கொண்ட திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் ஆரம்ப காலத்தில் இருந்து திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. கட்டிடம் பழையதாகி விட்டதால் புதியதாக கட்டிடம் கட்ட அடிக்கடி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆனால் செயல்படுத்தப்படுவதில்லை. 

ஆக்டிங் தலைவர்

இந்நிலையில் ஊராட்சி தேர்தலில் இந்த ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது. மொத்தம் 26 ஒன்றிய கவுன்சிலர் பணியிடங்களில் அதிமுக 4 இடங்களிலும்¸ திமுக 15 இடங்களிலும்¸ பா.ம.க 2 இடங்களிலும்¸ தேமுதிக ஒரு இடத்திலும்¸ சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுகவைச் சேர்ந்த கலைவாணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது கணவர் கலைமணிதான் ஆக்டிங் தலைவராக உள்ளார். 

பஞ்சாயத்து

இவருக்கு சொந்த கட்சியினரிடையே எதிர்ப்பு அதிகரித்தது. இது சம்மந்தமாக பலமுறை திமுக மாவட்ட செயலாளர் எ.வ.வேலுவிடம் பஞ்சாயத்து சென்றது. சென்ற முறை நடந்த ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தை திமுகவைச் சேர்ந்த 12 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு சென்றனர். இதை கேள்விப்பட்ட எ.வ.வேலு கடும் கோபமடைந்து 2 தரப்பினரையும் எச்சரித்து அனுப்பினார்.  

See also  9 மாதமாக தள்ளி போன டி.டி.வி தினகரன் மகள் திருமணம்

இதனால் இந்த முறை நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டம் சுமூகமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேர்மன் அறை ரூ.9 லட்சம் செலவு செய்து புதுப்பித்ததாக கணக்கு காட்டப்பட்டிருப்பது குறித்து யாரும் கேள்வியும் எழுப்பவில்லை. எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 

திமுக சேர்மன் அறையை புதுப்பிக்க ரூ.9 லட்சம் செலவு

மக்கள் அவதி

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சில மாதங்களுக்கு முன்பு திடீரென கலெக்டர் அலுவலகம் தாண்டி ரயில்வே கேட் அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் இயங்கி வந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அலுவலகம் மாற்றப்பட்ட இடம் குறித்த அறிவிப்பு நோட்டீஸ் கூட பழைய அலுவலகத்தில் ஒட்டப்படவில்லை. இதனால் திருவண்ணாமலை நகரில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் மாற்றப்பட்ட இடத்திற்கு செல்ல மக்கள் இன்று வரை மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். 

கலெக்டரிடம் மனு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடம்  கட்டப்பட்டதால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அங்கு மாற்றம் செய்யப்பட்டது. காந்தி நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு ஊரக வளர்ச்சி முகமை இயங்கி வந்த பழைய கட்டிடத்தை ஒதுக்கக் கோரி அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமியிடம் திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசனுடன்¸ கட்சி பாகுபாடின்றி அனைத்து கவுன்சிலர்களும் சென்று மனு அளித்தனர். 

See also  அக்னி குண்டத்தை இரவோடு இரவாக அகற்றிய அதிகாரிகள்

மோதலால் மறுப்பு 

ஆனால் கலெக்டருக்கு அடுத்தபடியாக இருக்கும் அதிகாரி ஒருவருக்கு பழைய இடத்தை மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்க விருப்பமில்லையாம். திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து செய்வது குறித்து அந்த அதிகாரிக்கும்¸ மாவட்ட ஊராட்சி குழு தலைவருக்கும் இருந்து வரும் மோதலால் மாவட்ட ஊராட்சிக்கு இடம் ஒதுக்க மறுத்து அதற்கு பதில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மாற்ற அனுமதிக்கப்பட்டதாம்.  

போர்க்கொடி 

69 ஊராட்சிகளும்¸ தெற்கு பக்கமும்¸ கிழக்கு பக்கமும் இருக்கும் போது சம்மந்தமே இல்லாத வடக்கு பகுதிக்கு அதுவும் 7 கிலோ மீட்டர் தள்ளி உள்ள இடத்திற்கு திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மாற்றப்பட்டது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேல் தளத்தில் திட்ட அலுவலர் பயன்படுத்தி வந்த நவீன வசதிகள் கொண்ட விசாலமான அறையை பி.டி.ஓ ஆக்கிரமித்துக் கொள்ள ஒன்றியக் குழுத் தலைவருக்கு அறை இல்லாமல் போனது. இதையடுத்து கீழ்தளத்தில் உள்ள அறை ஒன்று தலைவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த அறை தனக்கு போதாது என தலைவர் போர்க்கொடி உயர்த்தினார். 

திமுக சேர்மன் அறையை புதுப்பிக்க ரூ.9 லட்சம் செலவு

ஒப்புதல்

See also  கடலிலும், வானத்திலுமா தொழிற்சாலையை கட்ட முடியும்?

இதையடுத்து அந்த அறை புதுப்பிக்கப்பட்டது. பில் எவ்வளவு தெரியுமா? ரூ.9 லட்சம். பழுது பார்க்க மட்டும் ரூ.4லட்சத்து 50ஆயிரமாம். மின்சாதனங்கள்¸ மேசை¸ நாற்காலிகள் வாங்க இன்னொரு ரூ.4லட்சத்து 50ஆயிரமாம். நேற்று நடைபெற்ற திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் இந்த செலவினத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊராட்சிக்கு இந்த கட்டிடத்தை ஒதுக்கி இருந்தால் வாடகை பணமும் அரசுக்கு மிச்சமாகி இருக்கும். வீணாக 9 லட்சம் ரூபாய் செலவாகி இருக்காது. மக்களுக்கு அலைச்சலும் இருந்திருக்காது என்பதுதான் இப்போதைய பேச்சாக உள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!