Homeஅரசியல்வேறு கட்சிக்கு தாவலா? சாவல்பூண்டி காட்டமான பதில்

வேறு கட்சிக்கு தாவலா? சாவல்பூண்டி காட்டமான பதில்

மரணம் ஒன்றுதான் என்னை திமுகவிலிருந்து பிரிக்க முடியும் என திமுகவிலிருந்து நீக்கப்பட்ட சாவல்பூண்டி சுந்தரேசன் கூறியிருக்கிறார். 

திமுகவில் குறிப்பிடப்பட்டவர்கள் மட்டுமே தொடர்ந்து பதவி சுகத்தை அனுபவித்து வருவார்கள். அதிமுகவைப் போல் சாதாரண தொண்டன் பெரிய பதவிக்கு வரமுடியாது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் திமுகவைச் சேர்ந்தவரே சொந்த கட்சியை விமர்சித்திருப்பது பரபரப்பை உண்டாக்கியது.

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர் எ.வ.வேலு¸ தன் மகன் எ.வ.வே.கம்பனை முன்னிலைப்படுத்துவது கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புகைச்சல் சமீபத்தில் மாவட்ட திமுக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன் மூலம் பூதாகரமாக வெடித்தது. 

எ.வ.வேலுவுக்கு 8 காலேஜ் இருக்கு. தமிழ்நாட்டில் 6ஆயிரம் ஏக்கர் நிலம்¸ ஸ்பின்னிங் மில் உள்ளது. கிரானைட் மில் உள்ளது. மெடிக்கல் காலேஜ் உள்ளது. கரூரில் ரூ.500 கோடியை பைனான்ஸில் விட்டுள்ளார். சினிமாவுக்கு பைனான்ஸ் செய்கிறார். சினிமா தயாரிக்கிறார். டிவி தொடர் எடுக்கிறார். 6 தடவை எம்.எல்ஏ¸ ஒரு தடவை மந்திரியாக இருந்து விட்டார். 20 வருடமாக மாவட்ட செயலாளராக இருக்கிறார். அப்ப கலைஞர் வாழ்க என கொடி பிடித்து ரத்தம் சிந்தி¸ வேர்வை சிந்தி உழைத்த தொண்டன் அப்படியே செத்து போகணுமா? என சாவல்பூண்டி சுந்தரேசன்¸ மற்றொரு நிர்வாகியிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பானது.

அப்பனும் வாழ்க்கையை அனுபவிக்கணும்¸ புள்ளையும் வாழ்க்கையை அனுபவிக்கணும். கலியுக கம்பனாம்¸ கலசப்பாக்கத்தை காப்பாற்ற வந்த கடவுளாம்¸ அவர் பேசியதால்தான் திமுகவிற்கு ஓட்டு வந்ததாம் என ஜால்ரா போடுகின்றனர். இந்த கட்சிக்கு உழைத்த ப.உ.ச¸ தர்மலிங்கம்¸ புலவர் கோவிந்தன்¸ பாபு ஜனார்த்தனம் வாரிசுகள் கட்சியில் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஏன் பிச்சாண்டி வாரிசு கூட ஆதிக்கம் செலுத்தவில்லை. என வேலு¸ தன் மகன் கம்பனை அரசியலில் முன்னிலைப்படுத்துவதை பத்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியிருந்ததார். 

See also  பாஜக பிரமுகர் சங்கர் கைது-ஜெயிலில் அடைப்பு

இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் ஒரு வலம் வந்தது. திமுக தொண்டனின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தி விட்டார் என சாவல்பூண்டி சுந்தரேசனுக்கு பாராட்டு குவிந்தது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எ.வ.வேலு தனக்கு நூற்பாலைகள் இல்லை. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இல்லை. ரூ.500 கோடி பைனான்ஸ்சில் இல்லை. வருமான வரித்துறைக்கு என்ன கணக்கு காட்டினேனோ அதிலிருந்து ஒரு செண்ட் இடமோ¸ பணமோ என்னிடத்திலோ¸ தனது குடும்பத்தாரிடத்திலோ இல்லை என விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு செய்து வரும் உதவிகளை பட்டியலிட்டிருந்தார். 

மறுநாள் இந்த பேட்டி பத்திரிகைகளில் வந்ததும் சாவல்பூண்டி சுந்தரேசன் பேசிய ஆடியோவை கேட்காதவர்களும் நண்பர்களிடமும்¸ கட்சி பிரமுகர்களிடமும் கேட்டு பெற்று காதால் கேட்டறிந்தனர். அன்று மட்டும் ஏராளமானவர்களுக்கு இந்த ஆடியோ பார்வேர்டு ஆனதாக சொல்லப்படுகிறது. 

எ.வ.வேலு தனது பேட்டியில் தன்  மகன் கம்பனை முன்னிலைப்படுத்தி வரும் குற்றச்சாட்டுக்கு  விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. முன்னதாக திமுக பொதுக்குழுவில் சாவல்பூண்டி சுந்தரேசனை¸ கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் சாவல்பூண்டி சுந்தரேசன் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக சீனியர் ஒருவர்¸ எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்கு¸ திமுகவில் இல்லாத பதவி ஒன்றை ஏற்படுத்தி கலசப்பாக்கம் தொகுதி பொறுப்பாளர் என்ற பதவியை தந்தார். பிறகு மருத்துவரணி மாநில துணைத் தலைவர் என்ற பதவியை வாங்கி தந்தார். இந்த பதவி கிடைத்ததற்காக கம்பனுக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. பத்திரிகைகளில் பக்கம்¸ பக்கமாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. எல்லா இடங்களிலும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

See also  இளைஞரின் கோரிக்கைக்கு பதிலளித்த எடப்பாடி

இதைத்தான் அப்பனும் வாழ்க்கையை அனுபவிக்கணும்¸ புள்ளையும் வாழ்க்கையை அனுபவிக்கணும். அப்ப உழைச்ச உழைப்பெல்லாம் வீண்தானே என சாவல்பூண்டி சுந்தரேசன் தொண்டர்களின் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். சாவல்பூண்டி சுந்தரேசன் 2வது திருமணம் செய்து கொண்ட போது¸ கருணாநிதி 2வது திருமணம் செய்து கொள்ளவில்லையா? என கேட்டிருந்தார். அதே போல் இப்போது பேசிய ஆடியோவில் கருணாநிதி குடும்பத்தில் வாரிசு அரசியல் பற்றி பேசியிருந்தார். தலைமை குறித்த இந்த 2 கருத்துகளும்தான் அவரை கட்சியிலிருந்து நீக்க காரணமாக அமைந்து விட்டது என்றார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சாவல்பூண்டி சுந்தரேசன் பா.ஜ.கவிற்கு செல்ல இருப்பதாக தகவல் பரவியது. இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது¸

நேற்றுவரை மேடைகளில் விமர்சித்த இந்த அந்த எல்லா எதிர்க்கட்சி பிரமுகர்கள் அக்கறையோடு விசாரிக்கிறார்கள் கேள்வி கேட்கிறார்கள்.

யானை இளைத்து விட்டால் எலி கூட எதற்கோ அழைக்குமாம். 1972 களில் ஆரம்பித்து சென்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் கடைசி நாள் அன்று காந்தி சிலை அருகில் நடந்த சொற்போர் வரை அதிமுகவினர்களால் அவமானம் கேவலமும் படுத்தப்பட்டும் மூன்று வருடங்களுக்கு முன்பு பாஜக ஆர்எஸ்எஸ் தோழர்களால் மேடைகளிலும் வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டும் ஏராள கேவலம் அவமானம் ஏச்சுப் பேச்சு எல்லாவற்றையும் தாங்கி இந்த இயக்கத்தில் பணியாற்றியவன் நான்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊனொடும் உயிரோடும் உதிரத்தோடும் நரம்போடும் எலும் போடும் பின்னிப் பிணைந்து திமுக வாகவே வாழ்ந்துவிட்ட வன் நான் இனிநான் வாழ்ந்த காலங்களை விட வாழப் போகிற காலம் குறைவு கேவலப்படுத்துபவர்களே எனக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்று நினைப்பவர்களே அவமானப்படுத்துபவர்களே பத்திரிக்கையாளர்களே பங்காளி கட்சிக்காரர்களே எதிர்க்கட்சியாளர்களே நீங்கள் எதற்கு இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்.

See also  பவுர்ணமி நாளில் கருணாநிதி சிலைக்கு தீபாராதனை

என் அரை நூற்றாண்டு வாழ்க்கையில் இந்த இயக்கத்திற்காக பட்ட அவமானங்களும் கேவலங்களும் கொஞ்சமல்ல நஞ்சமல்ல இதற்கு மேல் என்னை எவனும் அவமானப்படுத்த முடியாது. நீங்கள் என்னை எத்தனை கீழ்மை படுத்தினாலும் தவறாக எழுதினாலும் என்னுடைய மரணம் ஒன்று தான் என்னை கழகத்தில் இருந்து பிரிக்க முடியும். நான் மரித்துப் போகிற வரை நான் திமுக தான் கொள்கை மாறிப் போகிறவனுக்கும் விலையாகிய போகிறவனுக்கும் பெயரே வேறு

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதோடு சேர்த்து நமது சின்னம் உதயசூரியன்¸ வேலுவின் சின்னம் உதயசூரியன்¸ வெற்றியின் சின்னம் உதயசூரியன் என தான் கோஷம் போடும் வீடியோவையும் பதிவேற்றியுள்ளார். 

இது பற்றி நம்மிடம் பேசிய உடன்பிறப்பு ஒருவர்¸ சிறிது காலத்திற்கு பிறகு மன்னிப்பு கடிதம் வாங்கி கொண்டு சாவல்பூண்டி சுந்தரேசன் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார். இது திமுகவில் வழக்கமாக நடப்பது ஒன்று என்றார். மேலும் விவரித்த அவர் வேலுவின் பேட்டியில் எங்கேயும் சாவல்பூண்டி சுந்தரேசனை பற்றி கூற மாட்டார். தன்னை பற்றி டிவியும்¸ சமூக வலைத்தளங்கள் தான் செய்தியை வெளியிட்டன என கூறியிருப்பார். சட்டமன்ற தேர்தல் நேரத்தில் சாவல்பூண்டி சுந்தரேசன் பேசிய ஆடியோவை எதிர்கட்சியினர் பயன்படுத்தாதவாறு தன் குரல் போல் மிமிக்ரி செய்யப்பட்ட ஆடியோ என அவர் மூலமாகவே (சாவல்பூண்டி சுந்தரேசன்) தடை பெறும் ஐடியாவும் உள்ளது என்றார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!