சாத்தனூர் அணையிலிருந்து கால்வாயை வெட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் சென்றதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் ஆதாரம்
திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோ மீடடர் தூரத்தில் உள்ள சாத்தனூர் அணை 1956 ஆம் ஆண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இவ்வணையின் மொத்த நீர் கொள்ளவு உயரம் 119 அடியாகும். இந்த அணைதான் தற்போது திருவண்ணாமலை பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. சாத்தனூர் அணை ஆற்றில் இந்திய பெருரக கெண்டை வகை மீன்களான கட்லா¸ ரோகு¸ மிர்கால் மற்றும் எட்ரோபிளஸ்¸ திலேப்பியா¸ ஆறா¸ குள்ளக்கொண்டை¸ வளை¸ கெளுத்தி மற்றும் உளுவை வகை மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மீன்கள்தான் திருவண்ணாமலைக்கு அதிக அளவு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
12¸543 ஏக்கர் நிலம்
சாத்தனூர் அணை திறந்து விடப்பட்டால் திருவண்ணாமலை¸ விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 38ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பெரும்பாலும் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களே அதிக பயன் அடைந்து வருகின்றன. புதுச்சேரி மாநிலம் சொர்ணாவூர் அணைக்கட்டு வரை இந்த தண்ணீர் செல்கிறது. இதே போல் ஏரிப்பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது இடது புற கால்வாய் மூலம் 40 ஏரிகளும்¸ வலது புற கால்வாய் மூலம் 49 ஏரிகளும் பயன் அடைந்து வருகின்றன.
10 கிராம ஏரிகள்
எங்கள் பகுதியில் சாத்தனூர் அணை உள்ளது என்றுதான் பெயர். ஆனால் இதனால் எங்களுக்கு ஏதும் பயனில்லை என்ற புலம்பலும் விவசாயிகளிடம் இருந்து வருகிறது. சாத்தனூர் அணை¸ வீரணம்¸ தரடாப்பட்டு¸ கீழ்வணக்கம்பாடி¸ கரிப்பூர்¸ நெடுகவாடி¸ கண்ணக்கந்தல்¸ தண்டராம்பட்டு உள்பட 10 கிராம ஏரிகள் நிரம்பும் வகையில் சாத்தனூர் நீர் தேக்கத்திலிருந்து கால்வாய் அமைத்து தண்ணீரை விட வேண்டும் என பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர்.
நிதி திரட்டி
உலக வங்கி நிதி உதவியுடன் சாத்தனூர் அணையை புதுப்பிக்க மட்டும் ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் கால்வாய் அமைத்து தரும்படி கேட்ட விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அரசு அமைக்காவிட்டால் என்ன? நாங்களே கால்வாய் அமைத்து கொள்கிறோம் என்ற முடிவுக்கு விவசாயிகள்¸ பொதுமக்களும் வந்தனர். இதற்காக நிதி திரட்டி கால்வாய் அமைத்தனர்.
அதிகாரிகள் அலட்சியம்
சாத்தனூர் அணை நீர் தேக்கத்திலிருந்து கால்வாயை 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட குரும்பந்தன் ஏரிவரை அமைத்தனர். 1 மாதத்திற்கு மேலாக இந்த வேலை நடைபெற்றது. மிகப்பெரிய திட்டத்தை எந்தவித அனுமதியுமின்றி கிராம மக்களே மேற்கொண்டதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டு விட்டனர். சிறிது தூரம் தோண்டுவார்கள்¸ பிறகு விட்டு விடுவார்கள் என அலட்சியமாக இருந்து விட்டனர்.
போலீசில் புகார்
ஆனால் விவசாயிகள் கால்வாயை பிரதான நீர் தேக்கம்வரை கொண்டு சென்று தண்ணீரையும் ஏரிக்கு வர வைத்து விட்டனர். ஏரியும் கால்பகுதிக்கு நிரம்பியது. பிறகுதான் அதிகாரிகள் விழித்துக் கொண்டனர். சாத்தனூர் அணை பாசனத்திற்கு திறந்து விடப்படும் அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில் இப்படி அடிமடியிலே கை வைத்து விட்டார்களே என பதறி இரவோடு இரவாக கால்வாயில் தண்ணீர் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர். பிறகு போலீசில் புகார் செய்தனர். இதனால் கால்வாய் தோண்டப்பட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அதிகாரிகளின் இந்த செயலால் ஆத்திரம் அடைந்த சாத்தனூர்¸ தரடாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளும் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
ரூ.35 லட்சம் ஒதுக்கீடு
பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 22 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்ட முதல் கட்டமாக ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் எடுத்துக் கூறி அதற்கான திட்ட மதிப்பீட்டையும் காட்டினர். பிறகு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் புதியதாக அமைக்கப்படும் கால்வாய்க்கு மற்ற திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நேரடியாக நீர் தேக்கத்திலிருந்து இணைப்பு கொடுக்கப்படாமல் உபரி நீர் அந்த கால்வாயில் செல்லும் வகையில் திட்டம் தயாரித்திருப்பதாக தெரிகிறது.
தேர்தல் புறக்கணிப்பு
சாத்தனூர் அணை அமைந்துள்ள பகுதிகளிலேயே ஏரிகளுக்கு தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. கால்வாய் கட்ட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை 2 வருடங்களாக தீவிரப்படுத்தியுள்ளோம். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் விவசாயிகள் ஒன்றினைந்து வீடு வீடாக பிச்சை எடுத்து வசூல் செய்து நீர்தேக்க பகுதியிலிருந்து கால்வாய் அமைத்தோம். இதற்கு ரூ.50 லட்சம் வரை செலவாகி உள்ளது. 34 நாட்களாக இந்த வேலையை செய்து வருகிறோம். இப்போது வந்து அதிகாரிகள் தடுக்கின்றனர். போலீசை வைத்து மிரட்டுகின்றனர். இதனால் பணம்¸ உழைப்பு வீணாகி விட்டது. ஆனால் நாங்கள் விட மாட்டோம். தண்ணீர் வழங்க முன்வரவில்லை என்றால் சாத்தனூர் பகுதியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி சட்ட மன்ற தேர்தலை புறக்கணிப்போம் என போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.
இப்போராட்டத்தினால் அப்பகுயில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.