Homeஆன்மீகம்லிங்கத்தில் சோழர் முத்திரை-திருசூர் கோயில் சிறப்புகள்

லிங்கத்தில் சோழர் முத்திரை-திருசூர் கோயில் சிறப்புகள்

லிங்கத்தில் சோழர் முத்திரை-திருசூர் கோயில் சிறப்புகள்

போளுர் வட்டம் திருசூரில் வீற்றிருக்கும் திருசூலநாதர் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் நாயகராக விளங்கி வருகிறார். 

நிர்க்கதியாய் நிற்பவரின் வழித் துணைகள்

தூயவரின் துயர் துடைக்கும் அன்பர்நேசன்

நோய் தீர்க்கும் வம்சவிருத்தியின் காயகல்பம்¸

தீர்த்தகிரி கைலாச திருசூல நாதா போற்றி!

திருசூல நாதஈஸ்வரர் 

திருவண்ணாமைலை மாவட்டம் போளுர் வட்டம் திருசூர் எனும் திருசூலபுரத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற சிவன்கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் அம்பாள் அழகாம்பிகை உடன் கைலாச திருசூல நாதஈஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை தீராத நோய் உள்ளவர்கள் வணங்கி வழிப்பட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது இத்தலத்தின் ஐதீகம். மேலும் தருமவழி சென்று நமக்கு எதிரி யாரேனும் தீங்கு நினைத்தால் அதனை திருசூலநாதரின் முன் கற்பூரம் ஏற்றி நியாயமான முறையில் அவர்களை பற்றி முறையிட்டால் அதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்பது இத்தலத்தில் பலரும் உணர்ந்தது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் திரு என்ற அடைமொழி கொண்ட    ஊர்களில் திருவண்ணாமலை¸ திருசூர்¸ திருமால்பாடி திருமலை ஆகியவை சிறப்பு வாய்ந்ததாகும். திரு என்பது,சிறப்பு வாய்ந்த தலங்களின் ஊர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்பது புராணங்களில் வருகின்றன.

சோழர் கால முத்திரை

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையை சுற்றி எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. புலத்தியபுரம் என்றழைக்கப்பட்டு போளுராக மாறிய ஊரைச் சுற்றி ஊர்களின் பெயர்களே சிவபெருமானோடு சம்பந்தப்பட்டிருப்பதுபோல் தோன்றும். இறைவனின் சடையை குறிக்கும் ஜடதாரிகுப்பம் சூடும் பிறையாக இடப்பிறை என்ற எடப்பிறை¸ ஏந்தும் தீ(மழு)யாக மழுலம்பட்டு என்ற மாம்பட்டு என்ற வரிசையில் திரிசூலபுரம் என்ற திருசூரில்தான் 11ஆம் நூற்றாண்டு கோயில் ஒன்று பாழடைந்திருந்த நிலையில் இருந்து திருப்பணி செய்யப்பட்டுள்ளது. செய்யாற்றின் வடபகுதியில் அமையப்பெற்ற லிங்க வரிசையில் இக்கோயில் உள்ளதால் தீர்த்தகிரிநாதர் வீற்றிருப்பதாக கூறுவர். இக்கோவிலிலுள்ள லிங்கத்தில் சோழர் கால முத்திரை இருப்பதால் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கோவிலின் உள் அமைப்பு மற்ற கோவில்களில் அமைந்தது போன்று கணபதிக்கென தனி சன்னதியும் வள்ளி தெய்வானையுடனான முருகனுக்கு தனி சன்னதி உள்ளது. வடசுவற்றின் மத்தியில் மூலவர் அம்பலவாணன் வீற்றிருக்கிறார்.தனியாக அமையப்பெற்ற அம்மன் கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. 

கிணற்றில் சிலைகள் 

இரண்டு கோயில்களுக்கும் இடையில் ஒரு கிணறு உள்ளது. 1950 வரை இக்கிணற்று நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்தியுள்ளனர். முகலாயர் கால படையெடுப்பால்¸ சிலைகளைத் திருடி விடுவார்கள் என பயந்து அக்கிணற்றில் சிலைகளை மறைத்து வைத்துள்ளனர். பின்னர் கிணற்றில் இருந்து கிடைத்த அம்மன் சிலை கணபதி சிலை¸ நந்தி சிலை இதை உணர்த்துவதாகவும்¸ அதற்கு பின்னர் நந்தியைத் தவிர அனைத்து சிலைகளும் திருடுபோய் உள்ளது.

கணபதி¸ வள்ளி தெய்வாணை சமேத முருகர்¸ நடராசர்¸ மகாவிஷ்னு¸ காலபைரவர் சனிஸ்வரன் அரசமரத்தடியில் பிள்ளையார் கோவிலுக்கு முன் நந்தி மண்டபம் கொடிமரம் உள்ளது.

அற்புத வாழ்வு

தனி சன்னதியில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு திருமணம் ஆகாத பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அகல் விளக்கு ஏற்றி கோவிலைச்சுற்றி வலம் வந்தால் அற்புத வாழ்வு கிடைக்கும் என்பதும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் விவசாயம் செழிக்கவும் விளைச்சல் பெருகவும் மாணவ-மாணவிகள் கல்வியில் மேம்படவும் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது இத்தலத்தின் ஐதீகமாகவே உள்ளது.

கல்வெட்டுகள் முழுமையானதாக இல்லை. முன் மற்றும் பின்புறமுள்ள கற்கள் சுற்றுப்புறத்தில் புதைந்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கிடைத்த கல்வெட்டில் மகாதேவராயன் என்ற விஜயநகர அரசர் திருசூர் பகுதியில் யானைகளை விரட்ட உத்தரவிட்ட வாக்கியம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சித்தர்கள்¸மகான்கள்

1840ம் ஆண்டு வாக்கில் புதரில் மறைந்த கோயிலை திருசூர் கர்ணமாக இருந்த பெரியவர் ஒருவர் தம் சிப்பந்திகளின் துணை கொண்டு புதர்களை அகற்றி கோயிலை வெளிக்கொணர்ந்து அன்றிலிருந்து அவரின் வகையறாக்கள் பூஜை செய்து பராமரித்து வருகின்றனர். 19 ஆண்டுளாக சிவராத்திரி திருவிழா¸ தீபத்திருவிழா¸ பௌர்ணமி¸ சிவராத்திரி¸ பிரதோஷ வழிபாடு¸ அன்னாபிஷேக திருவிழா என விழாக்கள் நடைபெற்று வருகிறது.

அந்த காலத்தில் பருவதமலையில் தியானம் செய்த பல சித்தர்களும் மகான்களும் திருச்சூரில் தங்கி பூஜை செய்த நட்டாவத்து சுவாமிகள்¸ வெட்டவெளி சுவாமிகள்¸ மவுன சுவாமிகள், திக்குவாய் சுவாமிகள், கோவை சுவாமிகள், நாய் சுவாமிகள், மலையாள சிவா சுவாமிகள் ஆகியோர் திருச்சூரில் தங்கி திருசூல நாதருக்கு பூஜை செய்து வணங்கி வாழ்ந்து வந்தனர் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

பாழடைந்து கிடந்த  இக்கோயிலின் திருப்பணி முடிவடைந்து கடந்த 22ந் தேதி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 

ஈசன் ஊர்கள் 

மலைகள் மேவும் கைலாச நாதர்¸ பெரியமலை என்று அழைக்கப்படுகிற மலையாக சடைவிரித்து ஆனந்த கூத்தாடுகிறார். இத்தகைய மலையின் அடிவாரத்தில் உள்ள ஊர்கள் ஈசனது அம்சமாகவே விளங்குகின்றன. அதாவது இந்த மலைப்பகுதியின் மக்களைக் காக்க¸ தானே பாடி எழுந்ததால் எழுவாம்(ன்)பாடி என்ற ஊர் நடுநாயகமாக திகழ¸ ஈசன் இடக்கையில் ஏந்தும் மழுவாக மழுவம்பட்டு என்ற மாம்பட்டு¸ மேகங்கள் போன்ற ஈசனது ஜடையாக ஜடதாரிகுப்பம்¸ அந்த ஜடையில் பிறை அழகு சேர்ப்பது போல பிறையாக எடப்பிறை¸ பிறவிப்பிணியை தரவல்ல ஆணவம்¸ கன்மம் மாயையை அழித்து வீடுபேற்றினை தரும் திருசூலமாக திருசூலபுரம் என்ற திருசூர் என இறைவன் இவ்வூர்களில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

லிங்கத்தில் சோழர் முத்திரை-திருசூர் கோயில் சிறப்புகள்

பழமையான சிவன் கோயிலின் திருப்பணிகள்¸ பராமரிப்பு¸ தரிசனம் இவற்றிற்கு ஆட்பட்டும் ஆட்படுத்தியும் வாழ்தல்¸ பிறவியின் தவம்! அவமே கழியும் வாழ்நாளை சிவமே என்று நினைந்துருகி¸ சிவானந்தம் ஒன்றே புனித வழி என்பதை உணர்ந்து¸ கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்த செந்தமிழகத்தின் தொண்டை மண்டலத்தில் எண்ணற்ற கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்களின் கோர்வையில் ஒரு முத்தாக சோழரின் இறுதி காலத்தில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு அருள்மிகு அழகாம்பிகை அம்மன் உடனமர் அருள்மிகு கைலாச திருசூலநாத ஈசுவரர் திருக்கோயில் கட்டப்பட்டது.

திருப்பணி 

இக்கோயிலில் சிவாகம விதிப்படி பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் 14ம் நூற்றாண்டிலிருந்து பாழடைந்து முள் புதருக்குள் மறைந்தது¸ 19ஆம் நூற்றாண்டில் முள்புதர்கள் அகற்றப்பட்டு அது முதல் சிறப்பாக பூஜைகளும்,விழாக்களும் நடைபெற்று வந்தன. கிராம பொதுமக்களின் முயற்சியால் திருப்பணி நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. 

திருசூலநாதரை தரிசனம் செய்யவரும் மெய்யன்பர்கள் இக்கோயிலின் அமைவிடத்தையும் அமைக்கப்படும் விதத்தையும் கண்டு மனம் மலர்ந்து இறைநிலையில் இன்புறுகின்றனர். மேலும் இக்கோயிலானது அறநெறியையும்¸ பண்பாட்டையும்¸ நல்ல கலை கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் விதைக்கும் இடமாக அமைக்கப்படுகிறது என்பது சிறப்பு.

பக்தர்கள் இயன்ற பொருளுதவியோ¸ நிதியுதவியோ அளித்து எல்லாம் வல்ல ஆதி அந்தமில்லா ஈசனது அருளை பெற்று நலமாக வாழ கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

தொடர்புக்கு¸

அருள்மிகு திருஅழகாம்பிகை அம்மன் உடனமர் திருசூலநாத ஈசுவரர் அறக்கட்டளை¸ திருசூர் கிராமம் மற்றும் அஞ்சல்¸ போளுர் – 606 803 திருவண்ணாமலை மாவட்டம். கைபேசி எண்கள் 9789155513.

அமைவிடம்:

போளுரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் திரிசூர்போட்டையில் இருந்து இரண்டாவது கிலோ மீட்டரில் கோவில் உள்ளது.

செய்தி – ப.பரசுராமன்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!