திருவண்ணாமலை அருகே அரசு விழாவுக்கு அமைச்சர் வர காலதாமதமானதால் 12மணி நேரம் பயனாளிகள் காத்திருந்தனர்.அவர்களுக்கு உணவு¸ தண்ணீர் ஏதும் வழங்கப்படவில்லை.
இது பற்றிய விவரம் வருமாறு¸
தமிழக அரசு¸ சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கத்துடன் ரூ.25ஆயிரமும்¸ டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் 8 கிராம் தங்கத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டதை 8 கிராமாக உயர்த்தி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இது பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
ஆனால் இந்த உதவித் தொகை¸ பெண்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதனால் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் அவதிப்படுபவர்களும் உண்டு. ஆரம்பத்தில் திருமணம் முடிந்த பிறகு வழங்கப்பட்டு வந்த பணமும்¸ தங்கமும் இப்போதெல்லாம் குழந்தை பெற்றெடுத்த பிறகுதான் அதாவது விண்ணப்பித்து 1 வருடத்திற்கு மேல்தான் கொடுக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கத்தால் கடந்த ஆண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே விண்ணப்பித்தவர்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிட அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக இம்மாவட்டத்தில் மினி கிளினிக் திறப்பு விழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி தினமும் 5 அல்லது 6 ஊர்களில் நடைபெற்று வருகிறது.
இன்று மட்டும் திருவண்ணாமலை¸ செங்கம்¸ போளுர் பகுதிகளில் 5 இடங்களில் மினி கிளினிக் திறப்பு விழாவும்¸ 5 இடங்களில் தாலிக்கு தங்கம் மற்றும் இலவச பட்டா வழங்கும் விழாவும் நடைபெற்றது. திருவண்ணாமலை அடுத்த அண்டம்பள்ளத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி¸ போளுர் செங்குணத்தில் மாலை 5 மணிக்கு இந்த தொடர் நிகழ்ச்சி முடிவடைகிற மாதிரி நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டிருந்து. இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
அவர் காலதாமதமாக வந்ததால் முதல் நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்திற்கு தொடங்கவில்லை. மேலும் மேடையில் பேசியவர்கள் ஒவ்வொரு பெயரையும் குறிப்பிட்டு பேசியதாலும் ஒவ்வொரு விழாவும் முடிவடைய நீண்ட நேரம் பிடித்தது.
பகல் 1 மணிக்கு திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி புதூரிலும்¸ 3 மணிக்கு திருவண்ணாமலையிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சோமாசிபாடி புதூரில் விழா நடைபெற உள்ள திருமண மண்டபத்திற்கு காலை 8 மணிக்கே பயனாளிகள் வரவழைக்கப்பட்டனர். இதனால் மண்டபம் நிரம்பியது. குழந்தைகளுடன்¸ கணவர்களுடனும்¸ பெற்றோர்களுடன் பெண்கள் வந்து அமைச்சருக்காக காத்திருந்தனர். இவர்களுக்கு தேவையான குடிதண்ணீர்¸ உணவு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யவில்லை. சாப்பாடு வேளை தாண்டியும் அமைச்சர் வராததால் உணவுக்காகவும்¸ குடிதண்ணீருக்காகவும் கடைகளை தேடி பொது மக்கள் அலைந்தனர். சிலர் மண்டபத்திலேயே பசி மயக்கத்தில் படுத்து தூங்கி விட்டனர்.
அமைச்சர் வர காலதாமதமாகும் என தெரிந்திருந்தும் பயனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை. தண்ணீருக்காக பயனாளிகள் தவிப்பதை பார்த்தும் அருகில் உள்ள ஊராட்சி அலுவலகத்தின் மூலம் குடிநீர் வசதியை செய்து தரவும் முயற்சிக்கவில்லை. வீட்டை அப்படியே பூட்டி கொண்டு வந்து விட்டோம். கால்நடைகளுக்கு உணவு அளிக்கவில்லை. பால் கறக்க முடியவில்லை. இரவு நடக்கும் விழாவுக்கு எங்களை காலை 8 மணிக்கே வரவழைத்து கொடுமைப்படுத்துகின்றனர். இதில் எங்களிடம் சுளையாக 5 ஆயிரம் ரூபாய் வேறு வாங்கிக் கொண்டனர் என பெண்கள் புலம்பித் தீர்த்தனர்.
கடைசியாக மாலை 6 மணிக்கு அமைச்சர் வந்தார் இரவு 7 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது. பிறகு நலத்திட்டத்தை பெற்றுக் கொண்டு பயனாளிகள் 8 மணிக்கு அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டனர்.
இந்த நல்ல திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி பொதுமக்களிடம் பாராட்டை பெறாமல்¸ அமைச்சரும்¸ அதிகாரிகளும் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டனர். இதே நிலைதான் செங்கம்¸ திருவண்ணாமலை¸ போளுர் போன்ற இடங்களிலும் ஏற்பட்டது.