திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 234 தொகுதிகளின் பெயர்களையும் ஒப்பித்த மாணவியை கலெக்டர் சந்தீப் நந்தூரி பாராட்டி சான்றிதழ்¸ கேடயத்தை வழங்கினார்.
விழிப்புணர்வு கண்காட்சி
திருவண்ணாமலை கிரிவலப் பாதை¸ காஞ்சி சாலை¸ அபயமண்டபம் எதிரில் அமைந்துள்ள “நம்ம திருவண்ணாமலை” செல்ஃபி புகைப்படம் எடுக்கும் இடம் அருகில்¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களை கொண்டு மகளிர் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி நேற்று திறந்து வைத்தார்.
கண்காட்சியில்¸ போளுர் ஒன்றியம் சார்பில் வாழைப் பழம் மற்றும் வாழை நாரினால் செய்யப்பட்ட சாவிக்கொத்தின் மூலமும், வெம்பாக்கம் ஒன்றியம் சார்பில் உப்பின் மூலமும்¸ பெரணமல்லூர் ஒன்றியம் சார்பில் தக்காளி¸ கத்தரிக்காய்¸ மிளகாய் மற்றும் நாத்துகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்திய வரைபடம் மூலமாகவும் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் வரையப்படடிருந்தது.
வண்ணக் கோலங்கள்
வந்தவாசி ஒன்றிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்த அப்பளங்கள் மூலம்¸ கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சார்பில் பாய்கள் மூலம்¸ கலசபாக்கம் ஒன்றியம் சார்பில் கரும்பு மற்றும் எலுமிச்சை மூலம் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வண்ணக் கோலங்களும் வரையப்பட்டிருந்தது.
தண்டராம்பட்டு ஒன்றியம் சார்பில் காய்கறிகள் மூலம்¸ செங்கம் ஒன்றியம் சார்பில் பாசிமணிகள் மூலம்¸ புதுப்பாளையம் ஒன்றியம் சார்பில் மிளகாய் மற்றும் உப்பு மூலம்¸ தெள்ளார் ஒன்றியம் சார்பில் செங்கல் மற்றும் கரிகள் மூலம்¸ ஜவ்வாதுமலை ஒன்றியம் சார்பில் கடுக்காய்¸ சாமைகள்¸ வாழை நாரிலான சாவி கொத்து மூலம் நமது ஓட்டு, நமது உரிமை¸ 100 சதவீதம் வாக்களிப்போம்¸ நல்லதொரு ஜனநாயகம் உருவாக்குவோம் ஆகிய வடிவங்களில் தேர்தல் விழிப்புணர்வு காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
ஆரணி ஒன்றியம் சார்பில் மஞ்சள் கிழங்கு¸ மிளகாய் வற்றல்¸ நவதானியங்கள் மூலம் ஒரு விரல் முத்திரை வடிவம்¸ செய்யார் ஒன்றியம் சார்பில் நாமக்கட்டிகள் கொண்டும் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் காட்சிபடுத்தப்பட்டது. சேத்துப்பட்டு ஒன்றியம் சார்பில் மலர்களை கொண்டு வண்ண கோலம் வரையப்பட்டு¸ 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தப்பட்டது.துரிஞ்சாபுரம் ஒன்றியம் சார்பில் உளுத்தம்பருப்பு மூலம் தேர்தல் உதவி எண் 1950¸ மற்றும் செயலியின் படம் வரையப்பட்டிருந்தது.
மாணவி சாத்விகா
இவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். அப்போது திருவண்ணாமலை அருகே உள்ள அமேசான் சர்வதேச பள்ளியில் 4-ம் வகுப்பு பயிலும் மாணவி சாத்விகா தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் பெயர்களை சட்டமன்ற தொகுதி வாரியாக எந்தவித குறிப்பும் இல்லாமல் கடகடவெனவாசித்து காண்பித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மாணவி சாத்விகாவின் திறமைக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஆட்சியர் வழங்கினார். மேலும் தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய கல்லூரி தேர்தல் பொறுப்பாளர்களான மாணவ¸ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகிவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்¸ மகளிர் திட்ட இயக்குநர் பா. சந்திரா¸ உதவி ஆட்சியர்(பயிற்சி) அமித்குமார்¸ துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதாபேகம்¸ மகளிர் திட்ட அலுவலர்கள்¸ பணியாளர்கள்¸ மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.