வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வருதற்காக திருவண்ணாமலையில் இளந்துறவி ஒருவர் முள் மீது யோகாசனங்களை செய்து அசத்தினார்.
சென்னை சாமியார்
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீ ஓங்கார சிவதாச பகவான் சிறிய வயதிலேயே ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டு துறவறம் பூண்டார். 22 வயதாகும் அவர் திருவண்ணாமலை மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக இங்கு வந்து தங்கி விட்டார். திருவண்ணாமலையிலிருந்து மணலூர் பேட்டை செல்லும் ரோட்டில் உள்ள சுக்காம்பாளையம் கிராமத்தில் 16 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் அமைப்பதற்கான பணிகளை செய்து வருகிறார்.
தான் ஆரம்பித்த டிரஸ்ட் மூலம் நலிவுற்ற மக்களுக்கு உதவிகளை செய்ய இருப்பதாகவும்¸ சிவத்தையும்¸ சைவத்தையும் பரப்பும் விதம் அமைய உள்ள தனது ஆசிரமத்தில் தியான மண்டபம்¸ ஸ்வஸ்திக் குளம்¸ குரு சன்னதி ஞான திருவருள் கோயில் ஆகியவற்றை கட்ட இருப்பதாகவும் தெரிவித்தார். இது தவிர அன்னதான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என கூறினார்.
விஷத்தன்மை முள்
இந்நிலையில் இளம்துறவி ஓங்கார சிவதாச பகவான் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக அவர் முள் மீது அமர்ந்து யோகாசனம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலையில் உள்ள கிரியா பாபா ஆசிரமத்தில் இன்று காலை நடைபெற்றது.
அகில இந்திய அன்னதர்ம அருட்பணி சேவா அறக்கட்டளை மற்றும் ஓங்கார சிவதாச சேரடபுள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சத்திய சேத்தனார் ஆசிரம டிரஸ்ட் எஸ்.தங்கவேல் தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் ஹயாத்பாஷா¸ டாக்டர் அரிகோவிந்தன்¸ ஆசிரியர் பயிற்றுநர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகிக்க உமாமகேஸ்வரி சுவாமிகள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வழக்கறிஞர் ஆர்.பீட்டர்ஜான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து விஷத்தன்மை உள்ள கருவேல மரத்தின் முட்கள் கொண்ட செடிகளின் மீது ஓங்கார சிவதாச பகவான் 20 நிமிடங்கள் அமர்ந்த நிலையிலும்¸ படுத்த நிலையிலும் சுகாசனம்¸ பத்மாசனம்¸ சாந்தியாசனம் ஆகியவற்றை செய்து பார்வையாளர்களின் பாராட்டுதலை பெற்றார். இது குறித்து ஓங்கார சிவதாச பகவான் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸
நல்ல ஆட்சி அமைய
விவசாயம் செழிக்கவும்¸ மக்கள் சுபிட்சமாக வாழவும்¸ வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிதம் வாக்களிக்கவும் இந்த ஆசனங்களை செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தல் வருகிறது. நல்ல அரசன் அமைந்தால்தான் மக்கள் நலமாகவும்¸ நிம்மதியாகவும் வாழ முடியும். ஓட்டு போடாமல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை வேஸ்ட் செய்கின்றனர். அப்படி இருக்கக் கூடாது. எல்லோரும் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடு
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய அன்னதர்ம அருட்பணி சேவா அறக்கட்டளை அருணானந்தா¸ சுவாமி விவேகானந்தா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தைச் சேர்ந்த ஆர்.கல்பனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சண்முக சித்தர் தாசன் செய்திருந்தார்.
முடிவில் ஸ்ரீஓங்கார சிவதாச சேரடபுள் டிரஸ்ட்டை சேர்ந்த ஜி.சந்திரபாபு நன்றி கூறினார்.