பா.ஜ.கவுக்கு திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட பிரபல வழக்கறிஞர் வேட்பு மனு அளித்துள்ளார்.
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் திருவண்ணாமலையும் ஒன்று. திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 2 முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள எ.வ.வேலுவுக்கு எதிர்ப்பு உள்ளதாகவும்¸ இதற்கு பலர் திமுகவிலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்து வருவதே உதாரணம் என பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். பா.ஜ.கவில் 22ஆயிரம் பேருக்கு மேல் புதிய உறுப்பினர்கள் சேர்ந்திருப்பதாவும்¸ கூட்டணி கட்சிகளின் பலத்தால் வெற்றி நிச்சயம் எனவும் பா.ஜ.கவினர் தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் தணிகைவேலுக்கு பா.ஜ.கவில் மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டதிலிருந்தே அவருக்குத்தான் சீட் என்ற பேச்சு நிலவி வந்தது. அதற்கேற்ப அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவினர் அவரது வெற்றிக்காக பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர். பா.ஜ.க சட்டமன்ற தேர்தல் அலுவலகம் திருவண்ணாமலை வேங்கிக்கால் அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐ.டி.ஐ) எதிரில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தணிகைவேல் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அவருடன் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளரும்¸ திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான கே.டி.ராகவன் வந்திருந்தார். மாற்று வேட்பாளராக பா.ஜ.க மாவட்டத் தலைவர் ஆர்.ஜீவானந்தம் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 36 பேர் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இன்று மட்டும் 15 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மனு தாக்கல் முடிவடைவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னால் அதிமுக சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அவைத் தலைவரும்¸ முன்னாள் அரசு வழக்கறிஞருமான பி.அன்பழகன் வேட்பு மனுவை அளித்துள்ளார். இவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் தீவிர ஆதரவாளர். அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் நிற்பதற்கு இவருக்குத்தான் சீட் வழங்கப்படும் என்றும்¸இவருக்குத்தான் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பரிந்துரை செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் மத்தியில் அதிருப்தி இருந்து வருகிறது.
அன்பழகன் |
இந்நிலையில் திடீரென இவர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை சொன்னதால் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறேன். இது பற்றி வேறு ஏதும் இப்போதைக்கு கூற முடியாது என அன்பழகன் நம்மிடம் தெரிவித்தார். பா.ஜ.க மாவட்டத் தலைவர் ஜீவானந்தத்திடம் இது பற்றி கேட்டதற்கு அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து தலைமைக்கு தெரியப்படுத்திருப்பதாகவும்¸ இது பற்றி அவர்கள் உரிய முடிவை எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.